மெல்பேர்ணில் தமிழ் பெண்மணி ஒருவரை 8 ஆண்டுகளாக தமது வீட்டில் அடிமை போல வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் தமிழ் தம்பதியர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கினறன.
இலங்கைப் பின்னணி கொண்ட தமிழ் தம்பதியரின் வீட்டில் 2007ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை பணிபுரிந்த குறித்த பெண் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காவல்துறையினருடனும் எல்லைப் பாதுகாப்புப் பிரிவினருடனும் சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதைத்தொடர்ந்து இச்சம்பவம் மீதான வழக்கு விசாரணை சில தினங்களுக்கு முன்னர் மெல்பேர்ண் மஜிஸ்திரேட் நீதிமன்றில் நடைபெற்றிருந்த நிலையில் இதன் அடுத்த கட்ட விசாரணை 2017ம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ளது.
எனினும் தாம் குறித்த பெண்ணை அடிமையாக வைத்திருக்கவில்லை என்றும் இக்குற்றச்சாட்டு பொய்யானது என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ள தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இத்தம்பதியினர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும்பட்சத்தில் 25 வருடங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.