தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணி அமைவதில் தடைகள் உள்ளமைக்கு காரணம், ஒரு தரப்பினர் தமது தனிப்பட்ட அடையாளம் அழிந்து விடுமோ என்று எண்ணுவதே ஆகும்
என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி:- தற்போதைய தமிழர் அரசியல்களம் தமிழர்களின் உரிமையை பெறுவதற்கு சாதாகமானதாக உள்ளதா?
பதில்:-ஆங்கிலேயரின் காலனித்துவ ஆட்சியின் கீழ் இலங்கை இருந்தபோது நிர்வாக வசதி கருதி இந்நாட்டில் நிலவி வந்த யாழ்ப்பாண இராச்சியம், கண்டி இராச்சியம் மற்றும் கோட்டே இராச்சியம் என்பன ஒரே அலகாக மாற்றப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இலங்கை சுதந்திரம் அடைந்த வேளையில். சிங்கள பௌத்த மேலாதிக்க சக்திகள் பிரித்தானியர்களிடமிருந்து கபடத்தனமாக எமது இறைமையையும் பறித்துக் கொண்டன. அன்றிலிருந்து நாம் இழந்துபோன எமது சுயநிர்ணய உரிமையையும் எமது இறைமையையும் திருப்பித் தருமாறே கோரி வருகிறோம்.
ஆகவே சூழல் எமக்கு சாதகமாக இருக்கிறதா இல்லையா என்பதைவிட நாம் எமது உரிமைகளை வென்றெடுப்பதில் எந்தளவிற்குப் பற்றுறுதியுடன் இருக்கிறோம் என்பதே மிகவும் முக்கியமானது. சேர் பொன்.இராமநாதன், சேர் பொன் அருணாசலம், தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம் போன்றவர்கள் கள நிலைமையைக் கருத்தில் கொண்டு கோரிக்கைகளை முன்வைக்கவில்லை. நாம் அனுபவித்து வந்த உரிமைகளை பறித்தெடுத்ததற்கு எதிராகவே குரல் கொடுத்தனர். அந்த உரிமைகளை வென்றெடுப்பதற்கு சமஷ;டிக் கோரிக்கையையே தந்தை செல்வா முன்வைத்தார்.
அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததன் காரணமாகவே தனிநாட்டுக் கோரிக்கையை தந்தை செல்வா முன்வைத்தார். தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக அகிம்சை வழியில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் அரச பயங்கரவாதத்தினால் ஆயுத முனையில் ஒடுக்கப்பட்டதன் விளைவாகவே தந்தை செல்வாவின் பிரகடனத்திற்கு உயிர்கொடுக்கும் வகையில் ஆயுதப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான எழுபதாண்டுகால போராட்ட வரலாற்றில் எப்பொழுதுமே கள நிலவரம் எமக்குச் சாதகமாக இருந்ததில்லை. ஆனால் எமது இருப்பையும் அடையாளத்தையும் உரிமையையும் நிலைநாட்டிக்கொள்வதற்காக நாம் தொடர்ந்தும் போராடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். எமது போராட்டம் நியாயமானதா இல்லையா என்பதுதான் கேள்வியே தவிர, களம் சாதகமாக உள்ளதா இல்லையா என்பதல்ல இங்கு கேள்வி.
கேள்வி:- அண்மையில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குhதலின் பின்னர் அரசியல் தீர்வுக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாக தமிழ் தலைவர்கள் கூறுவதானது ஜதார்த்தமானதாக பார்க்கின்றீர்களா?
பதில்:-முற்றிலும் தவறான கூற்று. முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச ஆயுதப் போராட்டத்தை முறியடித்துவிட்டதாக வெற்றிக்களிப்பில் திளைத்து தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை இனி நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என்ற நிலைக்கு வந்திருந்தார். அது மட்டுமன்றி சர்வாதிகார குடும்ப ஆட்சி காரணமாக சிங்கள மக்கள் மத்தியிலும் ராஜபக்ச அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருந்தது. சர்வதேசத்திற்கும் மகிந்த தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததன் காரணமாக அவரைப் பதவியில் இருந்து அகற்ற வேண்டிய தேவை இருந்தது. இவை அனைத்தும் சேர்ந்துதான் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆட்சி மாற்றத்திற்காகப் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில் இந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பினால் புதிய அரசாங்கத்தின் ஊடாக எமது பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
இதற்காகவே ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து மைத்திரி அரியணை ஏறியவுடன் அவசர அவசரமாக ரணிலைப் பிரதமராக நியமித்து நூறுநாள் வேலைத்திட்டமும் உருவாக்கப்பட்டது. இந்த நூறுநாள் வேலைத்திட்டத்திலேயே தமிழ் தேசிய இனப்பிரச்சிpனைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் புறையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு நூறுநாட்களில் தீர்வை முன்வைப்பது சாத்தியமில்லை என்றும் பொதுத்தேர்தல் முடிந்தவுடன் உருவாக்கப்படவுள்ள தேசிய அரசாங்கத்தினூடாக புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கு வழிசமைக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரால் உறுதியளிக்கப்பட்டது.
இதற்காகவே தமிழ் மக்களும் தமது ஏகோபித்த ஆதரவினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கி 2010ஆம் ஆண்டைவிடவும் கூடுதலாக இரண்டு ஆசனங்களுடன் பதினாறு ஆசனங்களைப் பெறுவதற்கு வழியேற்படுத்தியிருந்தனர்.
இத்தகைய வலுவான பேரம் சக்தியைக் கூட்டமைப்பின் தலைவர் அரசாங்கத்தை தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சியை மேற்கொள்வதை நோக்கி நகர்த்துவதற்கும் அழுத்தம் கொடுப்பதற்கும் தவறிவிட்டார் என்பதே உண்மை. அரசியல் தீர்வை துருப்புச் சீட்டாக வைத்து, கடந்த அரசாங்கம் இழைத்திருந்ததாக நம்பப்படும் போர்க்குற்றங்கள், மனித உரிமைகள் மீறல் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றைப் பின்தள்ளி ஜெனிவா உள்ளிட்ட சர்வதேச அரங்கில் அரசாங்கத்தைக் காப்பாற்றுவதில் கூட்டமைப்பின் தலைமை முன்னின்று பணியாற்றியது. அன்று இது குறித்து நாம் எமது கண்டனத்தையும் விமர்சனத்தையும் முன்வைத்திருந்தோம் என்பதை எமது மக்களுக்குத் தெரியும்.
இந்நிலையில் 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமளவில் புதிய அரசியல் யாப்பிற்காகஅ உருவாக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையின் வழிநடத்தல் குழுவினரின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதில் தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய எத்தகைய முன்மொழிவுகளும் உள்ளடக்கப்படவில்லை என்று பிரசித்திபெற்ற சட்டத்தரணிகள், புத்திஜீவிகள், அரசியல் ஆய்வாளர்கள், கல்வியியலாளர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்களும் கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
ஆகவே 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு நாடகம் மற்றும் 2019ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் உயிர்த்த ஞாயிறன்று நடைபற்ற மத அடிப்படைவாத பயங்கரவாத தற்கொலை தாக்குதல் சம்பவங்களால் அரசியல் தீர்வு முயற்சிக்கு பங்கம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறுவது மக்களை முட்டாள்கள் என நினைத்து வெளிப்படுத்தும் கருத்துக்களாகும். இதற்கு முன்னர் இடைக்கால அறிக்கையில் சமஷ;டி ஒளிந்திருக்கிறது. வெளியில் கூறினால் சிங்களவர்கள் கோபிப்பார்கள் என்றெல்லாம் சொன்னவர்கள் இப்பொழுது இப்படிச் சொல்வதிலிருந்தே தேசிய இனப்பிரச்சினை தொடர்பான அரசியல் தீர்விற்கு இவர்கள் இதய சுத்தியுடன் தீவிரமாக முயற்சிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
நூறுநாள் வேலைத்திட்டத்திலிருந்தே அரசியல் தீர்விற்கான முயற்சிகளை ஆரம்பிக்கப்போவதாகக் கூறியவர்கள் நான்காண்டுகள் கழிந்தபின்னர் காரணத்தைத் தேடுவது வேதனையான விடயம். இதனால்தான் நாம் மக்கள் வழங்கிய ஆணையிலிருந்து கூட்டமைப்பு விலகிவிட்டது என்றும் இனியும் அவர்களின் மக்கள் விரோதப் போக்கிற்குத் துணைபோக முடியாது என்றும் தெரிவித்து அதிலிருந்து வெளியேறினோம்.
கேள்வி:-தமிழ் தேசியக்கூட்டமைப்பு அபிவிருத்தி பற்றி சிந்திப்பதானது மக்களுக்கு வரப்பிரசாதமானது தானே?
பதில்:-அபிவிருத்தி அரசியலை மேற்கொள்வதாக இருந்தால் உள்ளூராட்சி மன்றங்களினூடாகவே மேற்கொண்டிருக்க முடியும். 2010ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவடைந்தவுடன் 2011 மற்றும் 2012ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களிலும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கிழக்கு மற்றும் வடக்கு மாகாணசபைத் தேர்தல்களிலும் சர்வதேச சமூகம் எம்மை உன்னிப்பாக அவதானிக்கிறது. நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை சர்வதேச சமூகத்திற்கு காட்ட வேண்டியுள்ளது. அபிவிருத்திகளை நாம் எப்பொழுது வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். நடைபெறுகின்ற அனைத்துத் தேர்தல்களிலும் மக்கள் எமக்கு ஆணையை வழங்குவார்களானால் எமது மக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றம், மனித உரிமைகள் மீறல், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்இ காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு ஆகிய விடயங்கள் தொடர்பாக சர்வதேசத்தின் ஆதரவுடன் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுத்து கருமங்களை ஆற்ற முடியுமென்றும் யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவருவதற்கு உதவிய சர்வதேச சமூகம் எமக்கு உரித்தான சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கு வழி செய்ய வேண்டுமென்றும் நாம் கோரமுடியும் என்றும் கூட்டமைப்பின் தலைவர் திரு. சம்பந்தன் கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெறுமாக இருந்தால், எனக்கு உள்ள வெளிநாட்டுத் தொடர்புகளைப் பயன்படுத்தி போதிய நிதியைப் பெற்றுக்கொடுத்து எமது பிரதேசங்களின் அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன் என்றும் ஆனபடியால் எமக்கு அபிவிருத்தி அவசியமில்லை என்றும் ஒவ்வொரு தேர்தல் பிரச்சார மேடையிலும் அவர் மேலும் கூறியிருந்தார். ஆகவே தற்பொழுது அரசியல் தீர்வு நடவடிக்கைகள் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையில், அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தோல்வியை மறைத்துக்கொள்ள முயற்சிக்கிறது. இது வரமா சாபமா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.
கேள்வி:-அரசியல் தீர்வு அபிவிருத்தி இரண்டும் தமிழர்களை பொறுத்தவரையில் முக்கியமானதாக இருக்கும் போது கம்பரலியவை ஏன் விமர்சினம் செய்கின்றீர்கள்?
பதில்:-மாகாணசபைக்கு அதிகளவில் நிதியுதவியையும் அதிகாரத்தையும் பெற்றுக்கொடுத்து அதனூடாக எமது பிரதேசத்தின் அபிவிருத்தியை நாமே மேற்கொள்வோம் என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மாகாணசபைக்கு அதிகாரத்தையும் நிதியுதவியையும் பெற்றுக்கொடுக்காமல் மாகாண சபைகளுக்கு தற்போது இருக்கும் அதிகாரங்களையும் குறைக்கும் நோக்கில் மத்திய அரசின் நேரடி நடவடிக்கையின் மூலமாக அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்வதற்குத் துணைபோயுள்ளார். இது அவரது சுயமுரண்பாட்டை வெளிப்படுத்துகிறது.
கிழக்கு மாகாணத்தில் எத்தகைய நிர்வாகக் கட்டமைப்பு இருந்தது என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு ஒரு தனியார் கல்வி நிறுவனத்திற்கு 3650 கேடி ரூபாய் நிதியுதவி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வடக்கு மாகாணத்திற்கு குறைந்தபட்சம் முதலமைச்சர் நிதியத்தைக்கூட பெற்றுக்கொடுக்க முடியாமல் போயுள்ளது.
எம்மைப் பொறுத்தவரையில் அரசியல் தீர்வை முதன்மைப் படுத்தியே கருமங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்காகத்தான் மக்களிடம் கூட்டமைப்பு ஆணையைப் பெற்றுக்கொண்டது. ஆனால் இன்று உள்ளூராட்சி கட்டமைப்புகளின் அதிகாரங்களை மேவும் வகையில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அபிவிருத்திக்கான நிதிகளைப் பெற்றுக்கொண்ட சூழலை ஆராய்வதும் இங்கு முக்கியமானது. 2018ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தை ஆதரிப்பதற்காக என்னைத் தவிர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டரைகோடி ரூபாய் அபிவிருத்திக்காக வழங்கப்பட்டது. முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு பாதுகாப்புச் செலவினங்களுக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டது. வட மாகாணத்திற்கான நிதியொதுக்கீடு குறைவாக இருந்தது.
இந்நிலையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த வரவு-செலவு திட்டத்தை ஆதரித்திருந்தனர். பின்னர் மனச்சாட்சியை அடகுவைத்து ஆதரித்ததாகவும் நல்லாட்சி அரசாங்கத்தைக் காப்பாற்றவே ஆதரித்தோம் என்றும் அவர்கள் கூறியிருந்ததையும் இங்கு நினைவூட்டுகிறேன்.
இந்த ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தை ஆதரிப்பதற்காகவும் அரசாங்கத்தைக் காப்பதற்காகவும் ரணிலை ஆதரித்தமைக்காகவும் கைம்மாறாகவே கம்பரெலியா என்னும் கிராம எழுச்சி திட்டத்தினை முன்மொழிவதற்காக கூட்டமைப்பின் பதிநான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சுமார் 40கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ஏற்பாட்டின்கீழ் ஒதுக்கப்பட்ட இந்நிதியை நிலைபேறான அபிவிருத்தியை மையப்படுத்தி சில தொழிற்சாலைகளை நிர்மாணித்திருந்தாலும் பரவாயில்லை. ஆனால் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டைப் போன்றே இதனையும் செலவு செய்துள்ளனர். இது அபிவிருத்தி குறித்து அவர்களிடம் எத்தகைய திட்டமும் இல்லை என்பதைப் புலப்படுத்துகிறது.
கேள்வி:-விடுதலைப்புலிகளாலேயே சமஸ்டி உட்பட எந்த தீர்வையும் பெற முடியாத நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தற்போதைய இணக்க அரசியல் நகர்வு தீர்வை பெறுவதற்கு எந்த வகையில் உதவும்?
பதில்:-தமிழ்த் தேசிய இனம் பெரும்பான்மைத்துவ சிங்கள பௌத்த தேசிய இனத்தினால் ஒடுக்கப்படுகிறது. இலங்கை வாழ் மக்கள் அனைவரும் இலங்கையர்களாக வாழவேண்டுமானால் முதலில் இலங்கை ஒரு பல்லின மக்கள் வாழ்கின்ற நாடு என்பதையும் அனைத்து தேசிய இனங்களும் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்கு ரித்துடையவர்கள் என்பதையும் ஏற்றுக்கொள்வது அவசியம். இதனை சிங்கள பௌத்த பேரினவாதம் மறுதலித்ததன் விளைவாகவே இந்நாடு இன்றளவும் பின்தங்கிய நிலையில் இருப்பதற்குக் காரணமாகும். யாரும் யாருடைய உரிமைகளையும் நிரந்தரமாகப் பறித்து வைத்திருக்க முடியாது. எமது போராட்டம் வெற்றிபெற்றே தீரும். நாம் மத அடிப்படையில் உரிமை கோரவில்லை. நாம் அடிப்படைவாதிகளுமல்ல. ஒடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனம் தனது உரிமைகளை அதுவும் பிரித்தானியர்களிடம் இழந்துபோன தமது இறைமையை மீட்டெடுக்கவே போராடுகிறது. எமது போராட்டம் நியாயமானது என்பதை சகலருக்கும் தெரியப்படுத்தி அனைவரையும் ஏற்க வைப்பதிலேயே எமது வெற்றி தங்கியுள்ளது.
கேள்வி:-இலங்கை அரசியலில் ஆட்சி மாற்றம்மொன்று ஏற்படும் வாய்ப்புள்ளதா? அப்பேது யார் ஆட்சி அமைத்தால் தமிழர்களுக்கு சிற்பபானதாக இருக்கும்?
பதில்:-நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக இலங்கை அரசியலில் எத்தகைய சக்திகள் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் இதய சுத்தியுடன் தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளை மதிக்க மாட்டார்கள் என்பது தெளிவாகியுள்ளது. எனவே எமது உரிமைகளை நாம் பல்வேறு வழிகளிலும் போராடியே பெறவேண்டியவர்களாக உள்ளோம்.
கேள்வி:- ரணில் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையின் போது ஒப்பந்தமொன்றை எழுதி அவரிடமிருந்து கடித்தினை பெற்று ஆதரவளித்திருந்தீர்கள் அந்த ஒப்பந்தம் அல்லது உங்கள் கோரிக்கையை அவர் நிறைவேற்றினாரா?
பதில்:-எனது வாக்கு தீர்மானிக்கும் சக்தியாக இருக்கவில்லை. எனினும் நாம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தமையினாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் அவ்வாறானதொரு உடன்படிக்கைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது. எப்பொழுதும் போலவே எமது கோரிக்கை கோரிக்கை அளவிலேயே உள்ளது.
கேள்வி:- தமிழர் பிரதேசத்தில் தற்போதும் இடம்பெறும் பௌத்தமயமாக்கலுக்கு பாராளுமன்ற உறுப்பினராக நீங்கள் என்ன செய்வதாக திட்டமிட்டுள்ளீர்கள்?
பதில்:-பாராளுமன்றத்தில் நாம் பலமுறை இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டித்திருக்கிறோம் கடந்த ஒன்றரை வருடமாக திரு. சம்பந்தனால் எனக்கு பாராளுமன்றத்தில் பேசுவதற்கான வாய்ப்பும் மறுக்கப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நான் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று களத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பங்கெடுத்திருந்தேன். ஊடகங்களின் வாயிலாகவும் அத்தகைய பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்திருந்தேன். தமிழ்ச் சமூகம் அனைத்து ஒன்றிணைந்து இவற்றுக்கெதிராக ஜனநாயகவழியில் போராடுவதும் சட்டநடவடிக்கையில் இறங்குவதும்தான் எமக்குள்ள தெரிவுகள். அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளோம்.
கேள்வி:- கஜேந்திரகுமார் பென்னம்பலம் விக்னேஸ்வரன் கூட்டு சாத்தியமானால் ஈபிஆர்எல்எப் இன் நிலை?
பதில்:-நாம் தமிழ் தேசிய இனப்பிரச்சினை தீர்வதற்கு அனைத்து தமிழ்த் தலைமைகளும் ஓரணியில் திரள வேண்டும் என்பதையே விரும்புகிறோம். இதற்காகவே நாம் ஆயுதப் போராட்ட காலத்தில் ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் ஸ்தாபக உறுப்பினரானோம். அதனைப் போன்றே ஆயுதப் போராட்டத்தையும் ஜனநாயக அரசியலையும் இணையாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஸ்தாபக அங்கத்தவராகச் செயலாற்றினோம்.
கூட்டமைப்பின் பெயரால் தமிழரசுக் கட்சி தன்னை வளர்த்துக்கொள்ளும் நடவடிக்கையை மேற்கொண்டதுடன் மக்களின் ஆணைக்கு எதிராகவும் செயற்படுவதால் அதிலிருந்து விலகி புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.
எமது செயற்பாடுகள் அனைத்தும் மக்கள் நலன்சார்ந்து மேற்கொள்ளப்படுகின்றனவே அன்றி எமது கட்சி நலனை முன்னிலைப் படுத்தியதாக அமையவில்லை என்பதை எமது மக்கள் நன்கறிவார்கள். தனித்தனி கட்சிகளாகப் பிரிந்து நிற்போமாக இருந்தால் அது பேரினவாத சக்திகளுக்கே சாதகமாக அமையும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே எமது விருப்பம். தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காகப் பாடுபடுவதாகக் கூறிக்கொள்ளும் ஒவ்வொருவரும் தானும் ஒடுக்கப்பட்டவர்களில் ஒருவர் என்ற மனோநிலை உருவாகாதவரை இதயசுத்தியுடனான செயற்பாட்டை மேற்கொள்வது கடினம். இங்கு கட்சித் தலைவர்கள் தன்னைத் தவிர தேசியத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் யாரும் இல்லை என்று நினைத்துச் செயற்படுவதும் நானும் ஒரு கட்சியின் தலைவன் ஒரு கூட்டுக்குள் சென்றால் எனது அடையாளம் சிதைந்துவிடுமோ என்று எண்ணுவதுமே பிரச்சினையாக உள்ளது. இந்த விடயத்தைப் பார்க்கும்போது பல தலைவர்களிடம் ஒடுக்கப்பட்ட மக்களில் தானும் ஒருவர் என்ற எண்ணம் இன்னமும் ஏற்படவில்லையோ என்று எண்ணத்தோன்றுகின்றது.
கேள்வி:-சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு தேசியப்பட்டியல் வழங்கியிருந்தால் கூட்டமைப்பு பிரிந்திருக்காது என்று பொதுவாக கூறப்படும் கருத்தை எப்படி நோக்குகின்றீர்கள்?
பதில்:-2012ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் கூட்டமைப்பு கலந்துகொள்ளும் என்று முடிவெடுத்துவிட்டு பின்னர் கலந்துகொள்ளாது என்று சுமந்திரன் அறிவித்தார். அது சுமந்திரனின் தனிப்பட்ட கருத்து என்று அன்றே சுரேஷ; பிறேமச்சந்திரன் தெரிவித்திருந்தார். அன்று அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத்தான் இருந்தார். ஆகவே மக்கள் நலனை முன்னிலைப்படுத்தித்தான் எமது முடிவுகள் அமைகின்றனவே தவிர, பதவிகளை நம்பி அல்ல. நாம் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் இவ்வளவுநாள் உயிருடன் இருப்போம்
என்றோ நாடாளுமன்ற உறுப்பினர்களாக வருவோம் என்றோ நினைத்திருக்கவில்லை. ஒடுக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன் என்ற அடிப்படையில் எமது தேசிய இனம் விடுதலை பெறவேண்டும் என்பதற்காகவே செயற்பட்டோம். இன்றும் அதே உணர்வுடன்தான் செயற்படுகிறோம்.
கேள்வி:- அடுத்த பாராளுமன்ற தேர்தல்? ஓய்வு பெறுவீர்களா?
பதில்:-அதனை எமது மக்கள் தீர்மானிப்பார்கள். கேள்வி:- ஜனாதிபதி தேர்தல் வர இருக்கும் நிலையில் கோத்தபாயவும் சஜித்தும் போட்டியிட்டால் உங்கள் கட்சியின் நிலைப்பாடு எவ்வாறு அமையும்? பதில்:-தேர்தல் வரட்டும் வேட்பாளர்கள் இறுதியாகட்டும். அப்போது எமது மக்களின் நலன் சார்ந்து முடிவெடுப்போம்.
கேள்வி:- தமிழ் கட்சிகளின் ஒற்றுமை எப்போது சாத்தியம்?
பதில்:-ஒடுக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன் என்று ஒவ்வொரு தலைவரும் உணரும்போது. இந்நாட்டின் சகல இன. மதத்தவர்களும் சம உரிமையுடன் வாழவேண்டும் என்று விரும்புகின்றபோது அதனை ஒவ்வொருவரிடமும் எடுத்துச் சென்று ஆதரவு திரட்ட வேண்டும் என்று உண்மையாக சிந்திக்கின்றபோது ஒற்றுமை ஏற்படும்.
கேள்வி:- வவுனியா நகரசபையினால் நடைபாதை வியாபாரத்தை அகற்றவிடுவதில்லை என்பதுமுதல் நகரசபையின் பல செயற்பாடுகளில் சிவசக்தி ஆனந்தன் தலையீடுகளை செய்கின்றார் என்ற குற்றச்சாட்டை எவ்வாறு நோக்குகின்றீர்கள்?
பதில்:-நகரசபைக்கும் எனக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது. அதனை நிர்வகிக்க நகரசபை தவிசாளரும் உறுப்பினர்களும் இருக்கின்றனர். அதற்கென ஒரு நிர்வாகமும் இருக்கிறது. நகரசபை செயற்பாடுகளில் இவ்வளவு பேரையும் மீறி நான் செல்வாக்கு செலுத்துகிறேன் என்று சொல்வது நகைப்புக்குரியது.
நேர்காணல் ஓமந்தை நிருபர்