ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டீன் லாங்கர், ஜாஸ் பட்லரை புதிய டோனி என கூறினார். இதனையடுத்து ஜஸ்டீனை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தியா-பாகிஸ்தான் அணிகளை போல, இந்த இரு அணிகளும் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தக் கூடியது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டீன் லாங்கர், இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லரை பாராட்டி பேசினார்.
அவர் கூறுகையில், ‘பட்லர் சிறந்த வீரர். அவரது பேட்டிங் எனக்கு மிகவும் பிடிக்கும். பட்லர் உலக கோப்பையின் தொடக்கத்தில் இருந்தே புதிய டோனியாகவே இருக்கிறார்.
ஆனால், இன்றைய போட்டியில் நிச்சயம் டக் அவுட் ஆவார் என நம்புகிறேன். அவர் சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் நம்ப முடியாத ஃபினிஷர்’ என கூறினார்.
இதற்கு நெட்டிசன்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் சிலர், ‘இந்த ஒப்பீடே தவறானது, டோனி அனுபவம், திறமை, சாதனை என அனைத்திலும் சிறந்தவர்’ என்றும், ‘லாங்கர் கனவில் இருக்கிறார்.
டோனியின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது’ என்றும், ‘ஜஸ்டீன் கூறியதில் தவறு உள்ளதே தவிர, அவர் குறித்து பேச வேறு எதுவும் இல்லை’ என்றும் வரிசையாக நெட்டிசன்கள் ஜஸ்டீனை வறுத்தெடுத்து வருகின்றனர்.