“கல்முனை உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விவகாரம் தீவிரமடைந்து, மூவின மக்களிடையேயும் மனக் கசப்பையும் வெறுப்புணர்வையும் வளர்த்துச் செல்கின்ற ஒரு மோசமான நிலைமை உருவாகி இருந்த போதிலும், அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் இந்த விடயத்தில் அசமந்தப் போக்கைக் கடைப்பிடித்து வருவது கவலைக்குரியது.”
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தக் கோரி நடத்தப்பட்ட போராட்டமும், அதனை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டமும் இந்த நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லுறவு மோசமடைந்து செல்வதைக் கோடிட்டுக் காட்டியிருக்கின்றன.
இந்த செயலகத்தை முழுமையானதொரு பிரதேச செயலகமாகத் தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை மூன்று தசாப்தங்களாக நிறைவேற்றப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்துள்ளது. இந்தப் பிரச்சினைக்கு அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பௌத்த, இந்து மதங்களின் தலைவர்கள் இரண்டு பேருடன், கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் இரண்டு பேரும், தமிழ் வர்த்தக சங்கப் பிரமுகர் ஒருவரும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று தினங்களுக்குப் பின்னர், இதற்கு எதிரான போராட்டம் ஒன்றை முஸ்லிம்கள் ஆரம்பித்திருந்தார்கள். இதனால், கல்முனை விவகாரம் சமூக, அரசியல் மட்டங்களில் மட்டுமல்லாமல், மத ரீதியான மட்டத்திலும் சூடு பிடித்தது.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழர் தரப்பில் பல இடங்களிலும் அடையாள போராட்டங்களும் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து கல்முனை பிரச்சினை தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பரிணமித்தது.
இந்தப் போராட்டங்களில் மூவின மக்களும் பங்கேற்றிருக்கின்றார்கள். கல்முனை வடக்கு பிரதேச செயலகமாக, தரமுயர்த்துவதன் மூலம் அந்த செயலகப் பிரிவுக்கு உட்பட்ட தமிழ் மக்களின் அபிவிருத்தி மற்றும் நிர்வாக ரீதியான பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பது தமிழ் மக்கள் சார்பிலான கோரிக்கையாகும்.
இந்தக் கோரிக்கையை முன்வைத்து பௌத்த துறவிகளும், இந்து குருக்களும், தமிழர்களும் அவர்களுடன் சிங்களவர்களும்கூட, உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர். அம்பாறை மாவட்டத்தில் கல்முனை முக்கியத்துவம் மிக்க தங்களுடைய நகரம் என்றும், அந்த நகரத்தை உள்ளடக்கிய கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தமிழ் மக்களுக்கானதாக விட்டுக் கொடுக்க முடியாது என்பது அங்குள்ள முஸ்லிம்களின் நிலைப்பாடு.
இதனால் தமிழ் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றக் கூடாது என்று அவர்கள் எதிர்க்கின்றார்கள். அத்துடன் தரமுயர்த்தலுக்கான போராட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்களும் சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தொடங்கியிருந்தார்கள்.
இந்தப் போராட்டத்தின் பின்னணியில் இன, மத ரீதியான அரசியல் மட்டுமல்லாமல், ஆக்கிரமிப்பு அரசியலும் இழையோடி இருக்கின்றது. தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே, சாகும் வரையிலான இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளதாக கல்முனை ஸ்ரீ சுபத்திராராம மகாவிகாரையின் விகாரதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரர் தெரிவித்திருந்தார்.
உள்ளூர் மதத் தலைவர்களினாலும், வர்த்தகப் பிரமுகர் உட்பட, உள்ளூராட்சி மன்ற அரசியல் பிரமுகர்களினாலும் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் மக்களும், சிங்கள மக்களும்கூட இந்தப் போராட்டத்தில் நேரடியாகப் பங்கேற்றிருந்தனர்.
இந்தப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலக முன்றலில் நடத்தப்பட்டு வந்தது. அதே வேளை, அங்கிருந்து சுமார் அரைக் கிலோ மீற்றர் தொலைவுக்கும் உட்பட்ட இடமாகிய கல்முனை நகரின் பழைய பேருந்து நிலையப் பகுதியில் முன்னைய போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று தினங்களின் பின்னர், எதிர்ப் போராட்டத்தை முஸ்லிம்கள் ஆரம்பித்திருந்தார்கள்.
முப்பது வருடங்களாக முன்வைக்கப்பட்டு வருகின்ற கல்முனை வடக்கு உப செயலகத்தைத் தரமுயர்த்த வேண்டும் என்ற தமிழ் மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி சிறிய அளவில் முன்னர் போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்த போதிலும், பௌத்த மத குரு ஒருவரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான இந்த உண்ணாவிரதப் போராட்டமே கொழும்பையும் விழித்தெழச் செய்தது. தேசிய அளவில் அனைவரையும் கல்முனையை நோக்கித் திரும்பிப் பார்க்கச் செய்திருக்கின்றது. கிழக்கு மாகாணத்தை சமூக ரீதியாகவும் மத ரீதியாகவும் கொதிநிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.
சில அடிக்குறிப்புக்கள்
கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கல்முனை வடக்கு உப பிரதேச செயலகப் பிரிவின் பரப்பளவு 15.77 சதுர கிலோ மீற்றர்
கிராம சேவையாளர் பிரிவுகளின் எண்ணிக்கை 29
2018 ஆம் ஆண்டின்படி மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 9798
இதற்கமைய மொத்த சனத்தொகை 36,346
இன அடிப்படையில் –
தமிழர்கள் 33007
முஸ்லிம்கள் 3215
சிங்களவர்கள் 124
மத அடிப்படையில் –
இந்துக்கள் 30205
இஸ்லாம் 3215
கிறிஸ்தவர்கள் 2802
பௌத்தர்கள் 124
சமய வழிபாட்டுத் தலங்கள்
இந்து ஆலயங்கள் 45
கிறிஸ்தவ தேவாலயங்கள் 12
முஸ்லிம் பள்ளிவாசல்கள் 03
பௌத்த விகாரை 01
2017 ஆம் ஆண்டின்படி வாக்காளர்களின் எண்ணிக்கை 22605
வரலாற்றுத் தகவல்கள்:
1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி கரவாகு வடக்கு என்ற பெயரில் நடமாடும் அலுவலகமாக இந்த உப செயலகம் உருவாக்கப்பட்டு செயற்பட்டு பின்னர் கல்முனை வடக்கு உப செயலகமாகப் பெயர் மாற்றம் பெற்று செய்யபட்டு வருகின்றது.
1993 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் திகதி அமைச்சரவை கூடி கல்முனை வடக்கு உப அலுவலகம் உட்பட, நாட்டில் உள்ள 28 உப பிரதேச செயலகங்களையும் பிரதேச செயலகங்களாகத் தரமுயர்த்துவது என்று தீர்மானித்ததற்கமைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், 27 உப செயலகங்கள் தரமுயர்த்தப்பட்டபோதிலும், கல்முனை வடக்கு உப செயலகம் மாத்திரம் தரம் உயர்த்தப்படவில்லை.
இந்த உப செயலகம் இன ரீதியான செயலகம் என்றும், இது நிலத் தொடர்பற்ற ஒரு பிரதேசத்தை உள்ளடக்கியது என்றும், பயங்கரவாதிகளினால் உருவாக்கப்பட்ட ஒரு உப பிரதேச செயலகம் என்றும் பலதரப்பட்ட பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டதாக இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த குடிகள் தெரிவித்துள்ளனர்.
நிலைமைகள்
கல்முனை நகரில் முஸ்லிம் வர்த்தகர்களே பெரும்பான்மையாக இருக்கின்ற போதிலும், அவர்களோ, அல்லது கல்முனை வடக்குக்கு உட்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம் கிராமவாசிகளோ பூர்வீகக் குடிகளல்ல என்றும், வர்த்தக நோக்கங்களுக்காக வருகை தந்த முஸ்லிம்களே இங்கு பல்கிப் பெருகியுள்ளதாகவும் அங்குள்ள வயதில் மூத்தவர்கள் கூறுகின்றனர்.
கல்முனை நகரில் வர்த்தக நிலையங்களை அமைத்தும், தமிழர்களின் சொத்துக்களாக இருந்தவற்றை காலத்துக்குக் காலம் நிலவிய அரசியல், இராணுவ, பொருளாதார நெருக்கடிகள் மிகுந்த சூழலைப் பயன்படுத்தி அவற்றைக் கொள்வனவு செய்து குடியேறியதாகவும் அவர்கள் கூறுகின்றார்கள். இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட வர்த்தக நிலையங்கள் பல யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் வர்த்தகர்களுக்குச் சொந்தமாக இருந்தன என்றும் அவர்கள் நினைவுகூர்கின்றார்கள்.
சுனாமி பேரலைகள் கடலோரத்தைத் தாக்கியதையடுத்து, கல்முனை பிரதேசத்தில் அமைக்கப்பட்ட சுனாமி குடியிருப்புக்களில் இரவோடு இரவாக அப்போது அரசியல் செல்வாக்கு பெற்றிருந்த அரசியல்வாதிகளினால் முஸ்லிம் குடும்பங்கள் கொண்டு வந்து குடியேற்றப்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
இந்தப் பிரதேசத்தின் உள்ளூராட்சி மன்றங்களில் பெரும்பான்மை பலத்தைப் பெற்றிருந்த முஸ்லிம் உறுப்பினர்கள், தமிழ்க் கிராமங்களிடையே முஸ்லிம்களின் பெரும்பான்மை பலத்தை உருவாக்கும் நோக்கில் திட்டமிட்ட வகையில் குடியேற்றக் கிராமங்களை உருவாக்கியதாகவும், தமிழ் அரசியல்வாதிகளும்கூட முஸ்லிம்கள் தமிழர்கள்தானே என்ற எண்ணப்போக்கில் இந்த நடவடிக்கைகளை கவனத்திற்கொண்டு அவர்கள் கவனத்திற் கொள்ளாதிருந்ததாகவும் இதன் பயனாகவே இன்று பல பிரச்சினைகள் உருவாகியிருக்கின்றன என்றும் அங்குள்ள மூத்த பிரஜைகள் குறிப்பிடுகின்றார்கள்.
இத்தகைய திட்டமிட்ட வகையிலேயே அம்பாறை மற்றும் கல்முனை பிரதேசங்களில் தமிழ் மக்களுக்குச் சொந்தமானதும், அவர்களின் பயன்பாட்டில் இருந்தவையுமான மேய்ச்சல் நிலங்களும் முஸ்லிம் மக்களினால் படிப்படியாக கையகப்படுத்தப்பட்டதாக அவர்கள் நினைவுகூர்கின்றார்கள்.
இந்த மேய்ச்சல் தரைகள் தொடர்பில் கடந்த காலங்களில் இரண்டு சமூகங்களிடையேயும் தொடர்ச்சியாகப் பிரச்சினைகள் இருந்து வந்ததையும், அவற்றுக்கு சமூக மட்டத்திலோ அல்லது அரசியல் வழிமுறையிலோ தீர்வு காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டபோது, முஸ்லிம் மக்களுக்கான பிரதேச சபைகள் உருவாகும் வகையிலேயே எண்ணிக்கை அடிப்படையில் கிராமசேவை பிரிவுகள் தொகுக்கப்பட்டிருந்தன என்ற விபரத்தையும் ஊர்ப்பிரமுகர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். இங்கு 6, 7 கிராம சேவை பிரிவுகளைக் கொண்டதாக முஸ்லிம் பிரதேச சபைகள் உருவாக்கப்பட்ட போதிலும், தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற கிராம சேவை பிரிவுகள் 12, 13 என்று எண்ணிக்கையில் அதிகமாக இருந்த போதிலும், அவற்றை ஒன்றிணைத்து தமிழ் பிரதேச சபைகளை உருவாக்குவதற்கான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட வரலாற்றையும் அவர்கள் எடுத்துரைத்தனர்.
கல்முனை மற்றும் அம்பாறை மாவட்டப் பிரதேசங்களைச் சேர்ந்த தமிழர்களான மூத்த பிரஜைகள் தெரிவித்துள்ள இந்தத் தகவல்களை உறுதிப்படுத்துவதற்கு தகுதி வாய்ந்த அதிகாரிகளும், தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளும், தமிழ் அரசியல் தலைவர்களும் முன்வர வேண்டும்.
அதேவேளை, கிழக்கு மாகாணத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களிடையே குடியிருப்புக் காணிகள் மேய்ச்சல் தரைகள் உள்ளிட்ட காணிப்பிரச்சினைகள் தொடர்பில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, இரு தரப்பினரிடையேயும் சமூக மட்டத்தில் ஓர் இணக்கப்பாட்டை எட்டச் செய்வது அவசியமாகும்.
அசமந்த போக்கு
கல்முனை உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விவகாரம் தீவிரமடைந்து, மூவின மக்களிடையேயும் மனக் கசப்பையும் வெறுப்புணர்வையும் வளர்த்துச் செல்கின்ற ஒரு மோசமான நிலைமை உருவாகி இருந்த போதிலும், அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் இந்த விடயத்தில் அசமந்தப் போக்கைக் கடைப்பிடித்து வருவது கவலைக்குரியது.
இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்ற போதிலும், உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பின்னால் பௌத்த துறவிகளின் உண்ணாவிரதப் போராட்ட அணுகுமுறை வலிமை பெற்று வந்துள்ள ஒரு சூழலில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக மூன்று மாதங்கள் செல்லும் என்று அரச தரப்பில் கூறியிருப்பது பொருத்தமான நடவடிக்கையாகத் தெரியவில்லை.
அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்தை அல்லது இந்த நடவடிக்கைக்கான தீர்மானத்தை தமிழ் மக்களின் அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்களிடம் ஆமாம் சாமி போட்டு தலையாட்டிக் கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம் அதனை எடுத்துச் சென்றபோது இடம்பெற்ற சம்பவங்களை நாடே அறியும். உலக நாடுகளும் அறியும்.
உண்ணாவிரதப் போராட்டத்துக்குத் தலைமை ஏற்றிருப்பவர்கள் உண்மையிலேயே பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற இதயசுத்தியுடன் ஈடுபட்டிருந்தார்களா அல்லது வெளிச்சக்திகள் ஏதேனும் பின்னால் செயற்படுகின்றதா என்ற ஐயப்பாடு இயல்பாகவே ஏற்பட்டிருக்கின்றது.
கல்முனை உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துகின்ற பிரச்சினையைவிட எத்தனையோ பிரச்சினைகளுக்கு கிழக்கு மாகாண தமிழ் மக்கள் குறிப்பாக அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் எதிர்கொண்டிருந்த போது, அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இத்தகைய தலைமையும் வழிகாட்டல்களும் உருவாகியிருக்கவில்லை.
மாறாக உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர், முஸ்லிம் மக்கள் பாதுகாப்பு ரீதியான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள ஒரு சூழலில், சிங்கள பௌத்த தேசிய தீவிரவாதிகளின் வன்முறைகளுக்கும், இன மத ரீதியான வெறுப்புணர்வுக்கும் ஆளாகியுள்ள ஒரு தருணத்தில், பௌத்த துறவிகளின் ஆளுமை இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் செல்வாக்கு பெற்றிருப்பதென்பது, தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே ஆழமான பிளவை ஏற்படுத்தி இரண்டு தரப்பினரையும் அடக்கியொடுக்குகின்ற பேரினவாதிகளுடைய மேலாண்மை நடவடிக்கையின் ஒரு தந்திரோபாய நடவடிக்கையாகவே அரசியல் அவதானிகள் கருதுகின்றார்கள்.
தேசிய அளவில், இது ஓர் ஆபத்தான சமூக, இன, மதவாதம் சார்ந்த ஓர் அரசியல் நகர்வு என்றும் இது இந்த நாட்டின் மூன்று சமூகங்களையும் பாதிக்கத்தக்க செயற்பாடு என்றும் அவர்கள் சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்திருப்பதைக் காண முடிகின்றது.
குறுகிய அரசியல் இலாபங்களைக் கருத்திற் கொள்ளாமல் தேசிய நலனைக் கவனத்திற் கொண்டு, ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் தீர்க்கமான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இது இன்றைய சூழலில் அவசியமானது.
பி.மாணிக்கவாசகம்