உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏர்கலப்பையில் எருதுகளுக்கு பதிலாக பெண்கள் நிலத்தை உழுதனர். இதற்கான காரணம் என்ன? என்பதை பார்ப்போம்.
தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பல்வேறு கிராமங்களிலும், முக்கிய நகரங்களிலும் தண்ணீர் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநிலத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள கோபால்பூர் கிராமத்தில் வித்தியாசமான முறையில் பெண்கள் மழை வேண்டி பூஜைகள் நடத்தினர்.
எருதுகள் பூட்டப்படும் ஏர் கலப்பையை பெண்கள் தங்கள் தோள்களில் சுமந்து நிலத்தை உழுதனர். இது குறித்து பெண்கள் கூறுகையில், ‘நாங்கள் மழை வேண்டி நிலத்தை உழுகிறோம். ஜெனக மன்னர்(சீதா பிராட்டியின் தந்தையார்) காலத்தில் இருந்தே பெண்கள் கலப்பையை பிடித்து வயல்களில் ஏர் உழுதால், நல்ல மழை பெய்யும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது.
பல நூறு ஆண்டுகளாக, பருவ மழை பொய்த்து போகும் காலத்தில் இதுபோல் வருண பகவானை வேண்டி பெண்கள் ஏர் உழும் பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது’ என கூறினர்.