பெண்களுக்கு ஆடை வடிவமைப்பில் ஆர்வம் அதிகம். திரையுலகில் ஆடை வடிவமைப்பு மிக முக்கியமான துறை. தமிழ்த் திரையுலகில் ஓர் ஆடை வடிவமைப்பாளராகத் தனி முத்திரை பதித்துவருகிறார் வாசுகி பாஸ்கர். இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி. பாஸ்கரின் மகள்.
எப்படி ஆடை வடிவமைப்பு துறைக்குள் வந்தீர்கள்?
தனியாக ஃபேஷன் டிசைனிங் செய்யலாம் என்றுதான் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது பாரதிராஜா சார் ‘கண்களால் கைது செய்’ படத்துக்குப் பணியாற்ற அழைத்தார். அப்படித்தான் சினிமா துறைக்குள் வந்தேன். அதற்குப் பிறகு அப்படியே வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்போது ‘சென்னை 28′ 2-ம் பாகத்தில் பணியாற்றி வருகிறேன்.
சினிமா, தொலைக்காட்சி விளம்பரங்கள், நிகழ்ச்சிகள், மேடை நாடகங்களுக்கு ஆடை வடிவமைப்பு செய்திருக்கிறீர்கள். என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?
முப்பது விநாடிகள் விளம்பரத்துக்கு, படப்பிடிப்புக்கு முன்பு மூன்று நாட்கள் பணியாற்றுவோம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு மிகக் குறைந்த நேரத்தில் வேகமாகப் பணியாற்ற வேண்டும். சினிமா என்றால், 2 மணி நேரப் படத்துக்கு ஒரு வாரம் உட்கார்ந்து பேசி முடிவு செய்துவிடுவோம். ‘பட்டணத்தில் பூதம்’ என்ற மேடை நாடகத்துக்கு ஆடை வடிவமைப்பு செய்தேன். அது மறக்க முடியாத புதுமையான அனுபவம். என்னைப் பொறுத்தவரை வேலை எல்லாம் ஒன்றுதான். அவகாசம் மட்டுமே மாறுபடும்.
வெங்கட் பிரபு இயக்கிய அனைத்துப் படங்களுக்குமே நீங்கள்தான் ஆடை வடிவமைப்பாளர். அவருடன் பணியாற்றிய அனுபவங்களைச் சொல்லுங்கள்.
அண்ணன் கேட்டால் தங்கை செய்துதானே ஆக வேண்டும்! வெங்கட் பிரபுவோடு பணியாற்றுவது அனைவருக்குமே பிடித்த விஷயம். முழுச் சுதந்திரம் கொடுப்பார்.
‘சென்னை 28′ பள்ளி ப்ராஜக்ட் என்றால் ‘சென்னை 28′ 2-ம் பாகம் கல்லூரி ப்ராஜக்ட். இதுவரை வெங்கட் பிரபு செய்த படங்கள் எல்லாமே வெளித் தயாரிப்புதான். எவ்வளவு பெரிய காட்சி என்றாலும், ரொம்ப டென்ஷன் ஆகாமல் கூலாகப் பணியாற்றுவார். இது சொந்தத் தயாரிப்பு, நிறைய நடிகர்கள் என்பதால் டென்ஷனாவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இப்போதும் படப்பிடிப்பு முடிந்தவுடன் அரட்டை அடிப்பது, ஒன்றாகச் சாப்பிடுவது என்று அண்ணன் மாறவே இல்லை. அதுதான் அவருடைய ஸ்பெஷல்!
திரையுலகில் எப்போதுமே ஆண்களின் ஆதிக்கம் அதிகம். ஒரு பெண்ணாக உங்களுக்கு எந்தளவுக்குச் சுதந்திரம் இருக்கிறது?
எங்கள் குடும்பத்தில் நானும் பவதாரிணியும் மட்டும்தான் பெண்கள். எங்களை வேலைக்கு அனுப்புவதற்கு யாருக்குமே மனம் இல்லை. முதலில் குடும்பத்துக்குள் பணியாற்ற ஆரம்பித்து, பிறகுதான் வெளியில் பணியாற்ற ஆரம்பித்தேன்.
எப்போதுமே நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதைப் பொறுத்துதான் ஆண்கள் நம்மிடம் நடந்துகொள்வார்கள். அதனால் நான் முன்னெச்சரிக்கையாகத்தான் இருப்பேன். சில சமயங்களில் மொத்தப் படப்பிடிப்பிலும் நான் மட்டும் பெண்ணாக இருப்பேன். அப்போதும் தைரியமாகப் பணியாற்றுவேன். தைரியமே பெண்களுக்கு ஆயுதம்!
நீங்கள் செய்த ஆடை வடிவமைப்பில் மறக்க முடியாத அனுபவம்?
‘மங்காத்தா’ படத்தில் சால்ட் & பெப்பர் லுக்கை ஒரு நிமிடத்தில் முடிவு செய்தோம். அது இவ்வளவு பெரிதாகப் பேசப்பட்டு, அதற்குப் பிறகு அனைவருமே சால்ட் & பெப்பர் லுக் வைத்துக் கதை எழுதினார்கள். முதலில் சால்ட் & பெப்பர் லுக்கில் வெளியே வரத் தயங்கியவர்கள் எல்லாம் தற்போது தைரியமாக வெளியே வருகிறார்கள். அதற்கு அந்தப் படத்தின் வெற்றியும் லுக்கும்தான் காரணம்.
நீங்கள் எப்போது படம் இயக்கப் போகிறீர்கள்?
இயக்குவதற்கு எல்லாம் நிறையப் பொறுமையும் அறிவும் வேண்டும். அதற்கான திட்டம் இல்லை. சினிமா துறையில் கற்றுக்கொண்டு யார் வேண்டுமானாலும் எதில் வேண்டுமானாலும் பணியாற்றலாம். எனக்குத் தயாரிப்பில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அப்பாவின் தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது.