தேர்தலொன்றுக்குச் செல்வதாலோ அல்லது அரசியலமைப்பில் மீண்டும் திருத்தத்தினை கொண்டுவருவதாலோ நாட்டில் உருவெடுத்துள்ள அரசியல் ஸ்திரத்தன்மையற்ற போக்கினை மாற்றியமைக்க முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார்.
அனைத்து பெரும்பான்மை கட்சிகளினது அரசியல் உறுதிப்பாட்டுடனும்,சிறுபான்மை கட்சிகளின் பங்கேற்புடனும் நாட்டின் தேவைக்கேற்ப சரிசெய்யப்பட்டதும் காலத்தால் பரீட்சிக்கப்பட்டதுமான வெஸ்ட்மினிஸ்டர் முறைமைக்கு திரும்பிச் செல்வதன் நெருக்கடிகளுக்கு தீர்வினைக் கண்டு அரசியல் ரீதியான ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
18ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டமை ஜனநாயகமயமாக்கலின் அடிப்படையில் எழுந்த மக்கள் கோரிக்கையின் விளைவான ஒரு செயற்பாடு அல்ல. மாறாக, அது அந்த நேரத்தில் ஜனாதிபதியாக பதவி வகித்த ஒரு அரசியல் தலைவரின் மனவிருப்பத்தின் நிறைவேற்றமேயாகும்.
அது இலங்கையின் ஜனநாயகத்தை, பிரஜைகளின் சுதந்திரங்களை, உரிமைகளை, நீதித்துறை உட்பட ஜனநாயக நிறுவனங்களை சேதப்படுத்தியது. அந்தச் சேதத்தில் இருந்து மீள்வதற்கான போராட்டம் பல்வேறு வடிவங்களில் நடைபெற்றிருந்தது.
குறிப்பாக, நாட்டில் நிலவிய இத்தகைய இருண்ட யுகத்தினை அகற்றி ஜனநாயக விழுமியங்கள் நிறைந்த கட்டமைப்புக்களை வலுவாக ஸ்தாபித்து பிரயோக ரீதியான வெற்றிகளை அடைந்து கொள்ளும் இலக்குடன் 2015 ஜனவரி 8ஆம் திகதிக்கு பின்னரான ஆட்சியாளர்களால் நடைமுறையில் உள்ள 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பில் 19ஆவது திருத்தச்சட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
ஜனநாயக வெறுப்பை ஊட்டுகின்ற 18ஆவது திருத்தத்தினை நீக்கி விட்டதாக கூறினாலும் ஒக்டோபர் 26இற்கு பின்னரான நிலைமைகளிலிருந்து தற்போது வரையில் 19ஆவது திருத்தமும் பின் கதவின் வழியாக கொண்டுவரப்பட்டு ஜனநாயகப் போராட்டத்தின் பயன்கள் மறுதலிக்கும் வகையில் அதிகாரத்தில் இருக்கும் தனிநபர் ஒருவரின் விருப்பு வெறுப்புகளுக்குள் சிக்கி நிற்கின்ற நிலைமைகளே தொடர்வதாக உள்ளன.
ஒக்டோபர் அரசியல் புரட்சியின் பின்னர் நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடுகள் அதிகரித்து மும்முனை முட்டிமோதல்கள் எழுந்திருந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் மீண்டும் அம்மோதல்கள் தலைதூக்கி நாட்டின் ஸ்திரத்தன்மையையும் எதிர்காலத்தினையும் கேள்விக்குறியாக்கி உள்ளது.
இறையாண்மையை விட சக்தி மிகுந்த அதிகாரம் வேறு எதுவும் இல்லை என்பதை பலர் மறந்து விட்டார்கள் என்ற கருத்துருவாக்கமும் தற்போது வெகுவாக மேலெழுந்துள்ள நிலையில் தற்போதைய அதிகாரப்போட்டிக்கு என்ன தான் தீர்வு என்பது அனைத்து பிரஜைகளினதும் வினாவாக உள்ளது.
இந்நிலையில், இவ்விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவுடன் கலந்துரையாடியபோது ஸ்திரத்தன்மைக்காக தீர்வுகளை நோக்கி பயணிக்க வேண்டியதன் அவசியத்தினையும், யதார்த்த பூர்வமானதும், நடைமுறைச்சாத்தியமானதுமான விடயங்களை பகிர்ந்து கொண்டார். அவ்விடயங்கள் வருமாறு:
யதார்த்த நிலைமை
1931 இல் சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து படிப்படியாக நாம் பழக்கப்படுத்தப்பட்ட அரசாங்க முறைமையின் பிரகாரம் நாட்டிற்கு அரசியல் ஸ்திரத்தன்மையை வழங்கும் நோக்கில் 1978ஆம் ஆண்டு ஜே.ஆர் ஜெயவர்தனவினால் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்பு இறுதியில் நாட்டை உறுதிகுன்றச் செய்வதற்கு வழி வகுத்தது என்பதே யதார்த்தமாகும்.
ஏனெனில், அரசியலமைப்பு 1977ஆம் ஆண்டு தேர்தலில் 5/4 பெரும்பான்மையை கொண்ட ஜே.ஆர்.ஜெயவர்தனவிற்கு சிறுபான்மையினரின் ஆதரவு அவசியமற்றதாக இருந்தது. இதனால் அவர் உருவாக்கிய 1978 அரசியலமைப்பினை சர்வ வல்லமைகளும் கொண்டதாக உருவாக்க விழைந்தார். இந்த அரசியலமைப்பின் அரச முறைமை குறித்து விவாதித்த டாக்டர் கொல்வின் ஆர்.டி.சில்வா, ‘பாராளுமன்ற ஜனநாயகம் என்ற வெளிச்சட்டையைப் போர்த்திய யாப்பு ரீதியான ஜனாதிபதி முறை சர்வாதிகாரம்’ என்று குறிப்பிட்டிருந்தார். அது பிற்காலத்தில் உண்மை என்பது நிரூபணமாகியது.
மேலும் இதனை மாற்றியமைப்பதற்கு உருவாக்கப்பட்ட 17 ஆவது திருத்தமும் செயலிழந்து போனமையால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை மிக வலிமையானதாக உருவெடுத்தபோதும் ஆட்சிப்பீடத்தில் இருந்த தனிநபர்களின் தனிவிருப்புக்களுக்குள் அது மட்டுப்படுத்தப்பட்டதால் மிக இழிவானதாகவும் மாறிவருகின்றது.
2018 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலொன்றுக்கு அழைப்பு விடுக்க ஜனாதிபதி முயன்றபோது அவ்வாறு செய்வதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை என்ற அடிப்படையில் பாராளுமன்றம் அதனை எதிர்த்தமையால் இறுதியில் நாட்டின் அதி உச்ச நீதிமன்றத்தில் அப்பிரச்சினை தீர்க்கப்பட்டது.
51 நாட்கள் நாட்டில் நிலவிய நிச்சயமற்ற தன்மையினால் நாடு கடுமையாகப் பாதிப்படைந்த நிலையில் பல வருடங்களாக இடம்பெற்றுவரும் ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்திற்கும் இடையிலான அதிகாரப் போட்டி உயிர்த்த ஞாயிறன்று பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக நடைபெற்று வரும் பாராளுமன்ற விசாரணைகளோடு மீண்டும் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
பாராளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியளிப்பதற்கு அழைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் புலனாய்வு கட்டமைப்பின் முக்கிய அதிகாரிகள் சட்டவாக்கத் துறைக்கும் நிறைவேற்று நிர்வாக துறைக்கும் இடையே உள்ள அதிகாரப் போட்டியில் சிக்கித் தவிக்கின்றனர். ஒரு புறம் ஜனாதிபதி குறித்த அதிகாரிகளை தெரிவுக்குழு விசாரணைகளில் பங்குபற்ற வேண்டாமென கண்டிக்கின்றார். மறுபுறம் பாராளுமன்றத்தின் கட்டளைகளுக்கு கீழ்படியாவிடில் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி சபாநாயகர் அதே அதிகாரிகளையே எச்சரிக்கின்றார். இதனால் திரிசங்கு நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கும் அரச அதிகாரிகள், பாராளுமன்றத்தின் கட்டளைகளுக்கு கீழ்படியாவிடில் ஏற்படக்கூடிய பாரதூரமான விளைவுகளை கவனத்தில் கொண்டு சாட்சியம் அளிக்கின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஓர் உடனடித் தேர்தலுக்கு வகைசெய்யும் மூன்றிலிருபங்கு உறுப்பினர்களின் ஆதரவுடனான பாராளுமன்ற வாக்கெடுப்பொன்றிற்கு கோரிக்கை விடுத்த அதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கம் அமைச்சரவை கூட்டங்களை நடத்துமாறு ஜனாதிபதியை வற்புறுத்தி பாராளுமன்ற தீர்மானமொன்றை முன்மொழிந்தது.
இந்த செயற்பாடு நடைபெற்று வருகையில், ஜனாதிபதி தனது எதிர்ப்பை வெளியிடும் வகையில் வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த மறுத்து அரசாங்கத்தின் அனைத்து பிரதான செயற்பாடுகளையும் தீர்மானம் மேற்கொள்ளும் நடைமுறையையும் ஒரு தேக்க நிலைக்குக் கொண்டுவந்து பின்னர் அமைச்சரவைக் கூட்டத்தை கடந்த 18ஆம் திகதி கூட்டினார்.
ஜே.ஆர் ஜெயவர்தனவால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் உட்பொருளை மாற்றி மிகக் குறுகிய காலப்பகுதியில் அதிகளவான திருத்தங்களினால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இத்திருத்தங்களுள் பெரும்பாலானவை பதவியிலிருந்தவர்களின் விருப்பங்களுக்கு பொருந்தக்கூடியதாக செய்யப்பட்டதேயன்றி, நாட்டின் நலனில் அறிமுகப்படுத்தப்படவில்லை. மக்கள் விருப்புக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கவில்லை.
19ஆவது திருத்தமும் அதிகார குறைப்பும்
2015ஆம் ஆண்டு வைகாசி மாதம் 15ஆம் திகதி அவசர அவசரமாகத் தயாரிக்கப்பட்ட பத்தொன்பதாவது திருத்தத்தில் அடங்கியுள்ள ஒரு சில ஏற்பாடுகள் தெளிவானதாக இல்லாததோடு, ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு அரசியல் கட்சிகளிலிருந்து தெரிவு செய்யப்படுவார்களாயின், மீண்டும் மீண்டும் குழப்ப நிலைக்கும் கூடிய சட்டப் பிரச்சினைகளுக்கும் இட்டுச் செல்லும் வகையிலேயே உள்ளது.
மேலும் அந்த திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதி தொடர்ந்து மக்களினால் நேரடியாகத் தெரிவுசெய்யப்படும் பொழுது அவரே ஆட்சித் தலைவராகவும், ஆட்சித் துறையினதும் அரசாங்கத்தினதும் தலைவராகவும் ஆயுதந் தாங்கிய படைகளின் படைத்தலைவராகவும் அமைச்சரவையின் தலைவருமாவார். இதனால் பத்தொன்பதாவது திருத்தத்தோடு ஜனாதிபதியின் அதிகாரங்கள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன என்றும் அடுத்த ஜனாதிபதிக்கு எந்தவொரு அமைச்சர் பதவியையும் வகிக்க முடியாதிருக்கு
மென்றும் பெரும்பாலும் அவர் ஒரு சம்பிரதாயபூர்வ தலைவராகவே இருப்பார் என முன்வைக்கப்படும் வாதம் சட்டரீதியாக வலுவிலக்கப்படுகின்றது.
நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அதிகாரபூர்வமாக இல்லாதொழிக்கப்படவில்லை என்பதோடு, 19ஆவது திருத்தம் தொடர்பான தனது தீர்ப்பில் உயர் நீதிமன்றம் ஜனாதிபதியின் ஒரு சில அதிகாரங்கள் சர்வஜன வாக்கெடுப்பொன்று இன்றி நீக்கப்பட முடியாது என்று விசேடமாக குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு, ஜனாதிபதி பிறிதொரு கட்சியிலிருந்து தெரிவு செய்யப்படுவாராயின், தற்போது நடைபெறுவது போல் பிரதமரின் அதிகாரத்திற்கு இடைஞ்சலாக ஒரு தடையைப் போடுவதற்கு அவருக்கு கணிசமானளவு அதிகாரம் இருக்கும்.
தீர்வுக்கு வழி உடனடித் தேர்தலா?
தற்போது அரசியலில் உள்ள முக்கிய பிரச்சினைகளை அதாவது, அரசியல் அமைப்பிற்கான 19ஆவது திருத்தத்தினால் மேலும் சிக்கலடைந்துள்ள அரசாங்க முறைமையின் உள்ளார்ந்த தவறுகளிலிருந்து எழும் பிரச்சினைகளை தேர்தலால் மாத்திரம் தீர்க்க முடியுமா என்ற வினா எழுகின்றது. இருந்தபோதிலும் அவ்வினாவிற்கான விடை தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமாகாது .
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஓர் உடனடித் தேர்தலுக்கு வகைசெய்யும் மூன்றிலிரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவுடனான பாராளுமன்ற வாக்கெடுப்பொன்றிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.எனினும் அதிகாரப் போட்டியால் நாடு நாசமாகின்றதை நாம் விரும்பவில்லை என மஹிந்தவின் பங்காளிகள் கூட்டாக தெரிவித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்க்கமான முடிவொன்றை உடனடியாக எடுத்து நாட்டின் அரசியல் உறுதிப்பாடற்ற நிலையை தீர்க்க உடன் தீர்வுவேண்டுமெனில் தேர்தல் ஒன்றுக்கு செல்வதே ஒரேவழி என்றும் அழுத்துகின்றனர்.
அதேவேளை, பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்குச் செல்வது தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கிடையே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றபோதிலும் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கமைய நான்கரை வருடங்கள் முடியும்வரையில் ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தை கலைக்கமுடியாது என்பதுடன், இதற்கு முன்னர் கலைக்க வேண்டுமெனில் பாராளுமன்றத்தில் அது தொடர்பான யோசனையை மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்ற வேண்டும்.
எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவின்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுக்கொள்ள முடியாது என்பதுடன், நாட்டிற்கு ஏற்படும் விளைவுகள் என்னவாக விருப்பினும், ஆட்சியில் இருக்கும் அதிகாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி துரித தேர்தலொன்றை நடத்துவதற்கு இணங்குவதென்பது சாத்தியமற்ற விடயமொன்றாகவும் உள்ளது. கடந்த காலங்களில் நடைபெற்றது போல, நாட்டிற்கு எவ்வித பயனுமின்றி பலவீனமான அரசாங்கத்தை சிறுபான்மை கட்சிகளின் ஆதரவை கொண்டு ஆட்சியை நகர்த்திக்கொண்டு போவதே நடைமுறைச்சாத்தியமான விடயமொன்றாகவுள்ளது என்றே வெளிப்படையாக கூறவேண்டியிருக்கின்றது.
எதிர்காலம் என்ன?
இந்தச் சூழ்நிலையில், எதிர்கால தேர்தல் ஒன்றில் வெற்றிபெறும் எந்தவொரு கட்சியும் 19ஆவது திருத்தச்சட்ட முறைமையை நாட்டின் நலனைக் கருத்தில்கொண்டு மாற்றியமைக்குமென எதிர்பார்ப்பது சிரமமாகும். கடந்த காலத்தில் நாம் கண்ணுற்ற போக்கு நாட்டிற்கு ஏற்படும் விளைவுகளைப் பொருட்படுத்தாது, வெற்றிபெறுவோர் தமது பதவிக் காலத்தில் தமது பதவியை உறுதிப்படுத்திக்கொள்ள முயலுவர் என்பதாகும்.
தற்போதைய சிக்கலான அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதித் தேர்தலையும் பாராளுமன்றத் தேர்தலையும் நடத்துவதும் இக்கட்டான நிலைமையாகும். ஜனாதிபதி ஒரு கட்சியிலிருந்து தெரிவு செய்யப்படுவதும் பிறிதொரு கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்கின்றபோது மீண்டும் இதேபோன்றதொரு நிலைமையில் நாடு மீண்டும் சிக்கிக் கொள்ளும் போது மேலும் ஒரு மோசமான, ஸ்திரமற்ற நிலைமையே உருவெடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.
தற்போதைய ஸ்திரமற்ற நிலையினால் அரசு மற்றும் அரசியல் முறைமை ஆகியவற்றின் மீதும் மக்கள் முழுமையாக சலிப்படைந்துள்ளமை கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதொன்றாகும்.
வெஸ்ட்மினிஸ்டர் முறைமையைப் போலன்றி, தற்போதைய பாராளுமன்ற முறைமையின் கீழ் ஜனாதிபதி பதவியையும் உள்ளடக்கும் அரசாங்கத்தை மாற்ற முடியாது. எனவே, தற்போது நிலைமை போன்ற ஸ்திரத் தன்மையற்ற போக்கே நீடித்துச் செல்வதற்கான சூழமைவுகள் வலுவாக காணப்படுகின்றன. இது மிகவும் ஆபத்தானதாகும்.
தற்போதுள்ள 19ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு அமைவாக அம்முறைமையைத் திருத்துவதன் மூலம் அல்லது எமது நாட்டின் தேவைக்கேற்ப சரிசெய்யப்பட்ட காலத்தால் பரீட்சிக்கப்பட்ட வெஸ்ட்மினிஸ்டர் முறைமைக்கு திரும்பிச் செல்வதன் மூலம் மட்டுமே இதனைச் செய்யலாம்.
எனினும், தற்போதைய களநிலையில் அனைத்து முக்கிய அரசியல் செயற்பாட்டாளர்களும் தேர்தலைப் பார்க்கின்றமையினால் இம்மாற்றங்களில் ஏதாவது ஒன்றாவது நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை. இதற்கிடையே, இப்பிரச்சினைகளுள் சில மேலும் தீவிரமடைந்து நீதிமன்றங்களில் முடிவடையும் சாத்தியமொன்று நிலவுகிறது.
மேலும், எதிர்காலத்தில் தேர்தல் ஒன்றில் வெற்றிபெறும் எந்தவொரு கட்சியும் நாட்டின் நலனைக் கருத்தில்கொண்டு அரசியலமைப்பு ரீதியான விடயங்களை மாற்றியமைக்குமென எதிர்பார்க்கவும் முடியாது. கடந்த காலத்தில் நாம் கண்ணுற்ற போக்கு நாட்டிற்கு ஏற்படும் விளைவுகளைப் பொருட்படுத்தாது, வெற்றிபெறுவோர் தமது பதவிக் காலத்தில் தமது பதவியை உறுதிப்படுத்திக்கொள்ள முயலுவர் என்பதாகும்.
நாடு எதிர்நோக்கும் தற்போதைய சிக்கல்நிலை நிரந்தரமாக தீர்க்கப்பட வேண்டுமாயின், அனைத்துப் பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து சில அரசியல் உறுதிப்பாட்டைக் கொண்டுவருவதற்கு தேவையான மாற்றங்களை செய்வதே மிகவும் பொருத்தமான விடயமாகும். அதனைச் செய்வதற்கு பெரும்பான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் முன்வருவார்களா என்பதே எம்முன்னுள்ள பிரதான வினாவாகின்றது.
சிறுபான்மையினரின் வகிபாகம்
சிறுபான்மை சமூகங்கள் பரந்து வாழும் நாடுகளில் தேவைப்படுவது சமவுரிமை என்பதேயாகும். அப்படியான சமூகங்கள் தமது காத்திரங்களுக்கு அமைவாக சட்டவாக்கத்திலும் நிறைவேற்று அதிகாரத்திலும் உரிய பிரதிநிதித்துவத்தைக் கேட்டு நிற்கின்றன. அத்துடன், சமவுரிமைக்கான அரசியலமைப்பு உத்தரவாதங்களையும் பாரபட்சமற்ற நிலைப்பாட்டையும் வற்புறுத்துகின்றன.
இந்த நாட்டின் அரசியல் உறுதிப்பாட்டைக் கொண்டு வருவதற்கு தேவையான மாற்றங்களை கொண்டுவர வேண்டுமெனில், சகல அரசியல் கட்சிகளினதும் பங்களிப்பு அவசியமெனினும் சிறுபான்மையினரின் வகிபாகம் அரசியலமைப்பு விடயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 5/1 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட சிறுபான்மையினரின் ஆதரவின்றி தற்போதைய விகிதாசார தேர்தல் முறையில் அரசியலமைப்பை மாற்றக் கூடிய பெரும்பான்மையை ஒரு தனிக்கட்சி பெறுவது இந்த தேர்தல் முறையின்படி சாத்தியப்படக்கூடிய விடயமல்ல. ஆகவே, சிறுபான்மை கட்சிகளின் ஆதரவின்றி தற்போதைய சிக்கல்நிலையை நிரந்தரமாக தீர்த்து விடமுடியாது.
நேர்காணல் : ஆர்.ராம்