சிட்னி விமான நிலையத்தில் உள்ள ஒரு கடையில் திருடியதாக குற்றம்சாட்டப்பட்ட உயரதிகாரியை ஏர் இந்தியா நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் இருந்து நேற்று (22-ம் தேதி) காலை டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தை ஓட்டும் விமானிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டிருந்த ரோஹித் பஷின் என்ற விமானி முன்னதாக சிட்னி விமான நிலையத்தில் உள்ள ஒரு கடைக்கு சென்றார்.
அங்கு இன்னொருவரின் பணப்பையை அவர் திருடி விட்டதாக ஆஸ்திரேலேசியா விமானச்சேவை நிறுவனத்தின் சார்பில் ஏர் இந்தியா அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனத்தின் கிழக்குப்பகுதி பிராந்திய இயக்குனராகவும் பொறுப்பு வகித்த ரோஹித் பஷின்-ஐ பணியிடை நீக்கம் செய்துள்ள ஏர் இந்தியா நிர்வாகம் அவர்மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.
ரோஹித் பஷின் குடும்பத்தில் அவரது மனைவி, மகள் உள்பட மொத்தம் 4 பேர் ஏர் இந்தியா நிறுவனத்தில் விமானிகளாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.