அமெரிக்காவில் விமான விபத்தில் 9 பேர் பலியாகினர். வானில் வீர சாகசத்தில் ஈடுபட்டபோது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்தது.
அமெரிக்க நாட்டில் ஹவாய் தீவில் இரட்டை என்ஜின் கொண்ட ‘தி கிங் ஏர்’ விமானத்தில் 9 பேர் நேற்று முன்தினம் மாலை வானில் வீர சாகச சுற்றுலா சென்றனர். ஆனால் வானில் வீர சாகசம் செய்து கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில் அந்த விமானம், ஹோனோலுலு நகருக்கு அருகே டில்லிங்ஹாம் விமான தளம் அருகே மோதி தீப்பிடித்தது.விபத்து குறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். அவர்கள் எரிந்துகொண்டிருந்த விமானத்தில் தீயை அணைத்தனர்.
இருப்பினும் விமானத்தில் சாகச பயணம் மேற்கொண்டிருந்த 9 பேரும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து தீயணைப்பு படை அதிகாரி மேனுவல் நேவிஸ் கூறும்போது, “நாங்கள் பார்த்த மிக துயரமான விமான விபத்து இது. பயணம் செய்தவர்களின் பெயர் விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. விமானம் விபத்துக்குள்ளானபோது அதில் பயணம் செய்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் விமான தளம் அருகே இருந்துள்ளனர்” என குறிப்பிட்டார்.விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஹோனோலுலு நகர மேயர் கிர்க் கால்டுவெல் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.
விபத்து தொடர்பாக மத்திய சிவில் விமான நிர்வாகம் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.