சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன மற்றும் முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர்களான சாகல ரத்னாயக்க , ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரை நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் பிரதமர் உள்ளிட்ட மேற்குறிப்பிட்ட அமைச்சர்களையும் விசாரணைக்கு அழைப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
தெரிவுக்குழுவில் சாட்சியமளிப்பதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விருப்பம் தெரிவித்ததையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணைக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும் அதற்கான தினம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. தெரிவுக்குழுவின் அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய அல்லது அதில் தாக்கம் செலுத்தக்கூடியதாகக் கருதப்படும் வாக்குமூல பதிவுகளின் போது அதனை ஊடகங்களூடாக நேரடியாக வெளியிடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனினும் ஏனைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.
தெரிவுக்குழு விசாரணையின் வாக்குமூல பதிவுகள் அடுத்த மாதம் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு, முழுமையான அறிக்கையை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.