ஹூவாய் நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு கியூ இயங்குதள அப்டேட் வழங்கப்படுகிறது.
ஹூவாய் நிறுவனத்தின் பி30 ப்ரோ மற்றும் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு கியூ அப்டேட் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
அனைத்து ஹூவய் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் செக்யூரிட்டி பேட்ச்கள் தொடர்ந்து வழங்கப்படும். எங்களது பிரபல பி30 சீரிஸ் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு கியூ பெற முடியும் என ஹூவாய் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
புதிய அறிவிப்பு ஹூவாய் பி30 ப்ரோ, ஹூவாய் பி30, மேட் 20 ப்ரோ, மேட் 20, மேட் 20 எக்ஸ் மற்றும் மேட் 20 எக்ஸ் (5ஜி) ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவோருக்கு ஆறுதலாக இருக்கும். தற்சமயம் ஆண்ட்ராய்டு கியூ டெவலப்பர் புரோகிராம் மேட் 20 ப்ரோ சாதனங்களில் கிடைக்கிறது.
கடந்த மாதம் கூகுள் நிறுவனம் ஹூவாயுடனான அனைத்து வியாபாரங்களையும் நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. இதன் மூலம் ஹூவாய் நிறுவனம் ஆண்டராய்டு இயங்குதளத்தை குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டும் பயன்படுத்தக் கூடிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. தற்சமயம் இந்த தடை ஆகஸ்டு மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.