ஐ.எஸ் தாக்குதல்  சம்பவங்களுக்குப்பிறகு  இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் அதிக அக்கறைகள் எழுந்துள்ளன. தற்போது முழு நாட்டிற்கும் அனைத்து இன மக்களுக்கும் ஒரே சட்டம் என்ற விடயம் பேசப்பட்டு வருகிறது. இது எந்தளவுக்கு சாத்தியப்படப் போகின்றது என்பது தெரியவில்லை. ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்களுக்குப்பிறகு முஸ்லிம்கள் அணியும் ஆடைகள் தொடர்பில் சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன. பின்பு அரச நிறுவனங்களில் அணியக்கூடிய ஆடைகள் தொடர்பில் சுற்றுநிருபம் ஒன்று வந்தது. அதற்கு மனித உரிமை ஆணைக்குழு தனது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்திருந்தமை முக்கிய விடயம்.

வௌிநாட்டு ராஜதந்திரிகளுடனான சந்திப்பின் போது முஸ்லிம் விவகாரத்து மற்றும் திருமண விவகாரங்களில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் தெரிவித்திருந்தார்.

அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் வரைபானது உலகளாவிய பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் ஒன்றாக இருக்கலாம் ஆனால் ஒரு நாட்டில் வாழ்ந்து வரும் பல்லின மக்களின் சுதந்திரத்துக்கு அது எந்த வகையிலும் இடையூறாக இருக்கக்கூடாது என்ற கருத்து தற்போது பரவலாக எழுந்துள்ளது.  மக்களின் சுதந்திரம் என்பது அவர்களின் அன்றாட நடவடிக்கைகளிலிருந்து அவர்கள் அணியும் ஆடை மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகள் ,வழிபாடுகள் என்பதாக அமைகின்றது.

ஆகவே நாடு முழுவதுக்குமான பொதுவான ஒரே சட்டம் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதாக இருந்தாலும் நாட்டு குடிமக்களின் அடிப்படை சுதந்திரங்களை குறைப்பதற்கு வழி ஏற்படுத்தும் விதமாக அமைந்து விடக்கூடாது என்பது பொதுவான கருத்தாக உள்ளது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்பது அது தொடர்பான எதிர்ப்பு நடவடிக்கைகள் ,கைது நடவடிக்கைகள் போன்றவற்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது இதன் மூலம்  தீவிரமயமாக்குதலுடன்  தொடர்புடைய ஆழமான முரண்பாடுகளையோ பிரச்சினைகளையோ தீர்க்க முடியாது என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவின் அணுமுறை வெற்றியளித்ததா?

பயங்கரவாதத்தை தடுப்பதற்கு அமெரிக்கா முன்னெடுத்த முயற்சிகள் குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது. அல்கொய்தாவின் இரட்டை கோபுர தாக்குதல் (செப்டெம்பர் தாக்குதல்) சம்பவத்துக்குப் பிறகு பயங்கரவாதத்துக்கு எதிராக உலகளாவிய எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா அக்கறை செலுத்தியது. உலக பொலிஸ்காரனாக தன்னை காட்டி வந்த அமெரிக்கா இத்தாக்குதல் சம்பவத்தை  தனது தன்மானத்துக்கும் கௌரவத்துக்கும் விழுந்த அடியாகவே பார்த்தது. அமெரிக்கா கொண்டிருக்கக்கூடிய இராணுவ மற்றும் புலனாய்வு வளங்கள் , உளவுத்துறை சேவைகள் என்பவற்றைக் கொண்டு ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்ற விடயத்தை முன்னெடுத்தது . எனினும் செப்டெம்பர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று 18 வருடங்களின் பின்னர்  சுமார்  நான்கரை டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் இரண்டரை மில்லியன் இராணுவ சக்தி   இதற்காக முதலீடு செய்யப்பட்டும்   அமெரிக்கா இதில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெறவில்லை என்றே கூறப்படுகின்றது.

ஆகவே இவ்வாறான நடவடிக்கைகளை சிறிய நாடாக இருக்கும் இலங்கையில் முன்னெடுப்பதற்குரிய சாத்தியகூறுகள் பற்றி பரிசீலிக்க வேண்டியுள்ளது.

உலக பயங்கரவாதம்

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்களுக்குப்பிறகே ‘இஸ்லாமிய பயங்கரவாதம் ’ என்ற சொல் வலுப்பெற்றதொன்றாக உருவானது. இதற்குக்காரணம் இஸ்லாம் மதத்தை அடிப்படையாக்கொண்டே அல்லது அம்மதத்தில் கூறப்பட்டுள்ளவற்றையே தாம் பின்பற்றுவதாக குறித்த அடிப்படைவாத குழுக்கள் கூறி வந்தன.  இது உலகளாவிய ரீதியில் இஸ்லாம் மதத்தைப்பற்றிய விமர்சனங்களையும் முஸ்லிம் இன மக்களின் மீதான சந்தேகங்களையும் ஏற்பட வழிவகுத்தது.

எனினும் புனித இஸ்லாம் மதமானது எவ்வகையிலும் எவ்விதத்திலும் எச்சந்தர்ப்பத்திலும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்ற கோஷம் குறித்த இன மக்களிடையே ஒலித்து வருகின்றது. இஸ்லாம் கூறும் கருத்துக்களை விளங்கிக்கொள்ளாத தன்மையே இவ்வளவுக்கும் காரணம் என்று கூறப்பட்டது. இவ்வாறான மத தீவிரவாதமானது அதில் இணைந்து கொள்வோரை ஏதோ ஒரு வகையில் சிந்திக்க விடமுடியாத ஒரு தீவிரவாதியாக மட்டுமே மாற்றியது.

எமக்கு என்ன தேவை  இலக்கு என்ன?  என்ற சிந்தனை இவ்வாறான மத தீவிரவாத குழுக்களிடம் இல்லை. ஏனெனில் இவர்களுக்கு அரசியல் ரீதியான தேவைகள் கோரிக்கைகள் இல்லை என்பதனாலாகும்.

30 ஆண்டு கால யுத்தத்தில் ஈடுபட்ட எல்.ரி.ரி.ஈ. அமைப்பும் உலகில் பல நாடுகளால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகவே வர்ணிக்கப்பட்டது. எனினும் அவர்களுக்கு ஒரு அரசியல் கோரிக்கையும் தேவையும் இருந்ததால் அவர்களுடன் அரசாங்கமோ அல்லது சமாதான தூதுவர்களோ ஒரு பேச்சு வார்த்தை மேசைகளுக்கு செல்ல முடிந்தது. ஆனால் மத தீவிரவாதக்குழுக்கள் அப்படியில்லை. இதன் காரணமாகவே வேவ்வெறு பிராந்தியங்கள் மொழிகளை கடந்தும் இக்குழுக்கள் மதத்தால் ஒன்றுபட்டு தாக்குதல்களை முன்னெடுக்கின்றன.

உலக வரைபடத்தில் ஒரு குறித்த புவியியல் இடத்தில் மட்டும் இவ்வாறான குழுக்கள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பதற்கு இதுவே பிரதான காரணங்களாகும். உதாரணமாக ஈராக் மற்றும் சிரியாவில் தாக்குதல்களை மேற்கொண்ட ஐ.எஸ்.அமைப்பு அங்கு தோல்வியை தழுவியவுடன்  எவரும் எதிர்பாராத இலங்கையில் அது வௌிப்பட்டது.

இவ்வாறான மத தீவிரவாதத்தால் மூளைச்சலவை செய்யப்படும் தற்கொலை குண்டு தாரி ஒருவர்  தான் இறந்தவுடன் சொர்க்கத்துக்கு செல்வேன் என்ற இறுதி நம்பிக்கையில் மட்டுமே  வாழ்ந்து கொண்டிருப்பார்.   இதன் காரணமாகவே இக்குழுக்களின் தாக்குதல்கள் மிகவும் மோசமானதாகவும் தீவிரமானதாகவும் இருக்கின்றன.

ஆகவே பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் மததீவிரவாதத்துக்கு எதிரான விடயங்கள் குறித்து மிகவும் பொறுப்பாகவும் கவனமாகவும் ஆராயவேண்டியுள்ளது.

இழப்பை பொறுப்பேற்கும் குழுக்கள்

பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் குழுக்களின் புள்ளி விபரங்களை பார்க்கும் போது  2016 ஆம் ஆண்டு உலகில் பல பாகங்களிலும் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில்  75 வீதமானோரின் மரணத்துக்கு நான்கு அடிப்படை வாத இஸ்லாமிய அமைப்புகளே காரணமாகவுள்ளன. அவையாவன ஐ.எஸ், போக்கோ ஹராம், தலிபான் மற்றும் அல்-கொய்தா என்பனவாகும்.

இஸ்லாமிய  பயங்கரவாத செயற்பாடுகளின் விரிவாக்கத்துக்கு பிரதான காரணம்  பயங்கரமான ஆயுதங்களும் தொழில்நுட்ப செயற்பாடுகளும் இல்லை.மாறாக மத தீவிரவாத்தை வளர்க்கக்கூடிய ஒரு மத கட்டமைப்பை அவர்கள் கொண்டிருக்கின்றனர். பயங்கரவாதம் குறித்த ஆராய்வுகள் கூறுவது என்னவென்றால் பயங்கரவாதத்தில் மத பயங்கரவாதம் ஒரு ஆபத்தான முகமாகும். இது ஒரு மத சடங்கு வடிவமாக இவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருவதால் இது அவர்களுக்கு எந்த வித குற்ற உணர்வையும் ஏற்படுத்துவதில்லை.

ஏன் இந்த நிலைமை?

ஒரு காலத்தில் அற்புதமான கலாசாரத்தை முன்னெடுத்த இஸ்லாமிய நாகரிகம் பின்னர் ஏன் இவ்வாறு தீவிரவாதத்தோடு தொடர்புடையதாக மாறியது என்பதற்கு வரலாற்றாசிரியர்கள் கூறும் காரணம் ஆரம்ப கால போர் நிலைமைகள் அதற்குப்பின்னரான கோஷங்கள் என்பனவாகும். நாடுகளை கைப்பற்றிய பின்னர் மதத்தின் பெயரால் வன்முறைகளும் , போர்க்குற்றங்களும் புரியப்பட்டன. இவை குறித்த ஒரு சிலரால் ஊக்குவிக்கவும் பட்டன. இவை வன்முறைகளையும் வழிபாட்டு நடவடிக்கைகளையும் நியாயப்படுத்தின. இவையின் நீட்சியே தற்போது இம்மதத்தை அடிப்படையாக்கொண்டு உருவான குழுக்களாகும் என ஆய்வுகள் கூறுகின்றன.

ஒரே சட்டம் ஏற்புடையதா?

எது எப்படியானாலும் தற்போது எமது நாட்டில் தோன்றியுள்ள பயங்கரவாத செயற்பாடுகளை எதிர்காலத்தில் கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் விமர்சனங்குளுக்கு உட்பட்டுள்ளன.

‘ஒரே தேசம்  ஒரே குரல் ‘என்ற  தொனிப்பொருளில் நாடு முழுவதற்கும் ஒரே சட்டமுறைமையைக்கொண்டு வரல்  , நாட்டில் தற்போது காணப்படும் இன,மத,மொழியினை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியலை இல்லாதொழித்து புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குதல், தேசிய பாதுகாப்பை பிரதானமாகக்கொண்டு தேசிய கொள்கைகளை உருவாக்குதல், இதே விடயத்தை அடிப்படையாகக்கொண்டு சாதாரண மக்கள் மீது கவனம் செலுத்தும் பொதுவான நெறிமுறை மற்றும் நடத்தை விதிகளை அறிமுகம் செய்தல் போன்ற விடயங்களுக்காக மக்கள் ஆணையைப்பெறும் ஒரு திட்டம் தற்போது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பான விடயங்களை ஊடகங்களில் பிரசுரித்து மக்களின் கையொப்பங்களை பெறும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.   எமது நாடு பயங்கரவாத ஆபத்திலிருந்து பாதுகாக்கப்படல் அவசியம் என்றாலும் அதில் சிறுபான்மை மக்களின் சில சுதந்திரங்கள் நசுக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் அரசாங்கம் அக்கறை செலுத்துதல் அவசியம்.

சி.சி.என்