மனஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதியொருவர் தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நூற்றுக்கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மனஸ் தீவின் லொரங்கவு தடுப்பு முகாமின் ஹில்சைட் ஹவுஸில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
குறிப்பிட்ட நபர் தனக்குதானே தீ மூட்டி தற்கொலைசெய்ய முயற்சித்துள்ளார் என மனஸ் தீவில் உள்ள இலங்கை தமிழ் அகதியான சமிந்தன் கணபதி தெரிவித்துள்ளார்
குறிப்பிட்ட நபர் கடும் உளதாக்கங்களிற்கு உட்பட்டிருந்தார் அவர் சிகிச்சை கோரியபோதிலும் அவுஸ்திரேலியா அதனை மறுத்திருந்தது என சமிந்தன் கணபதி தெரிவித்துள்ளார்.
இன்று அவர் மருத்துவகிசிச்சை பெறுவதற்காக சென்றார் அங்கு அவர் எதிர்பார்த்த உதவி கிட்டவில்லை இதன் காரணமாக அவர் கடும் மன உளைச்சலில் காணப்பட்டார் எனவும் சமிந்தன் கணபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறிப்பிட்ட நபருடன் தடுத்துவைக்கப்பட்டுள்ள மன்ஜீட் சிங் என்பவர் குறித்த நபர் தனது அறையை பூட்டிய பின்னர் உள்ளேயிருந்து தீச்சுவாலை வெளிவந்தது என குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கதவை உடைக்க முயன்றனர் ஆனால் முடியவில்லை இதன் பின்னர் நானும் சில இளைஞர்களும் சேர்ந்து கதவை உடைத்து அவரை வெளியே கொண்டுவந்தோம் எனவும் மன்ஜீட் சிங் குறிப்பிட்டுள்ளார்.
நான் அவரை பார்த்தவேளை அவர் பேச முடியாத நிலையில் காணப்பட்டார் முகம் கை கால்கள் என அனைத்தும் எரிந்து காணப்பட்டன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட நபர் என்னுடன் ஆறு வருடங்களாக மனஸ் முகாமில் இருந்துள்ளார் அவரும் இந்தியாவிலிருந்து வந்தவர் எனவும் சிங் தெரிவித்துள்ளார்