அவுஸ்திரேலியாவில் முதலாவது கருணைக்கொலைக்கு விண்ணப்பித்த தாயார்!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கருணைக் கொலை குறித்த சட்டம் நடப்புக்கு வந்துள்ளது.

பெரும்பாலான நாடுகளில் கருணைக் கொலை தடைசெய்யப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு அதனை ஏற்றுக்கொள்வதற்கான சட்டங்களை விக்டோரியா மாநிலம் அறிமுகப்படுத்தியது.

அது துணிச்சலான மாற்றம் என்று வர்ணிக்கப்படுகிறது.

கருணைக் கொலைக்கு அனுமதி பெற வேண்டுமெனில், கடும் நோய் கொண்ட மூத்தோராகவோ, உயிர் வாழும் காலம் ஆறு மாதத்துக்கும் குறைவாகவோ இருக்கவேண்டும் போன்ற சில நிபந்தனைகள் பின்பற்றப்பட வேண்டும்.

சில பாதுகாப்பு நடைமுறைகளும் அதற்காகச் செயல்படுத்தப்படவுள்ளன. தன்னிச்சை மறுஆய்வுக் குழுவினர், மரண விசாரணை நீதிபதி ஆகியோர் அனைத்து மரணச் சம்பவங்களின் விவரங்களையும் அணுக்கமாகக் கவனிப்பர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் விக்டோரியாவில் அண்மையில் அறிமுகமான கருணைக்கொலைக்கு அனுமதியளிக்கும் சட்டத்தைப் பயன்படுத்தி உயிர்துறக்கும் முதல்தொகுதி நபர்களின் பட்டியலுக்குள் தானும் இடம்பெறவேண்டுமென குடல் புற்றுநோய் மூலம் பாதிக்கப்பட்ட தாயொருவர் கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்.

குறிப்பிட்ட புற்றுநோய் ஈரலுக்கும் பரவி இன்னும் ஒரு வருடம் மாத்திரம்தான் அவர் உயிர்வாழக்கூடிய சாத்தியமுண்டு என்று மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தனது விண்ணப்பம் குறித்து அவர் கூறும்போது – தனது உடலில் பரவியுள்ள கொடிய புற்றுநோயின் மூலம் தனது சாவு தன்னை தின்று தீர்ப்பதற்கு முன்னர் தானே அந்த சாவை தெரிவு செய்துகொள்வது தனக்கு திருப்தியை தரும் என்று தெரிவித்துள்ளார்.

சுமார் நாற்பது வருடங்களாக தாதியாக பணிபுரிந்த குறிப்பிட்ட பெண்மணி கடந்த மார்ச் மாதம் முதல் புற்றுநோயின் இறுதிக்கட்ட மருத்துவ படிமுறையான கீமோவையும் தவிர்த்துள்ளார்.

விக்டோரிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மேற்படி கருணைக்கொலை சட்டம் நாளை விக்டோரியாவில் நடைமுறைக்கு வருகிறது. சட்டரீதியாகியுள்ள இந்த நடைமுறை விக்டோரிய அரசுக்கு மிகுந்த அழுத்தங்களை கொண்டுவரப்போகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோயினால் பீடிக்கப்பட்டு இன்னும் 12 மாதங்கள் மாத்திரமே உயிர்வாழ்வார்கள் என்று மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் கருணைக்கொலைக்கு விண்ணப்பிப்பதன் மூலம் அவர்களுக்கு ஊசி மருந்தின் மூலம் இந்த மரணத்தை நிறைவேற்றும் முறையே விக்டோரியாவில் நடைமுறைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.