உலகில் வேலைநிறுத்தம் செய்த முதலாவது நாட்டுத் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவாகத்தான் இருக்க வேண்டும். ஏனைய வேலைநிறுத்தங்களைப் போலவே, அவரது வேலைநிறுத்தத்தின் மூலமும் பொது மக்களே பாதிக்கப்பட்டனர்.
ஏனைய வேலை நிறுத்தங்களைப் போலவே, ஜனாதிபதியும் ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தார். “உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பாக ஆராய, சபாநாயகர் கரு ஜயசூரியவால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை, இரத்து செய்யவேண்டும்” என்பதே, அவரது கோரிக்கையாகும்.“எனது கோரிக்கையை, சபாநாயகர் நிறைவேற்றாவிட்டால், அமைச்சரவையைக் கூட்டப் போவதில்லை” என அவர் கூறியிருந்தார். அவரது அந்த வேலை நிறுத்தம் காரணமாக, கடந்த வாரம் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவில்லை.
ஜனாதிபதியின் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சில அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து, இவ்வாரம் முதல், மீண்டும் அமைச்சரவைக் கூட்டங்களை நடத்த, ஜனாதிபதி இணங்கியதாகக் கடந்த வாரம் செய்திகள் வெளியாகின.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் தெரிவித்த ஒரு கருத்தின்படியே, இந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. பதவி விலகிய அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வந்தனர்.
அத்தோடு, அரசாங்கத்தின் கருத்துப்படி, அமைச்சர் ரிஷாட் தொடர்பான விடயங்களை ஆராய, சபாநாயகர், இந்தத் தெரிவுக் குழுவை நியமித்தார். பின்னர் அந்தத் தெரிவுக்குழு, உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் தெரிவுக்குழுவாக மாறியது.
தெரிவுக்குழு, ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும் குழுவாக மாற்றப்பட்டபோதே, அது, ஜனாதிபதிக்கு எதிரான தெரிவுக்குழுவாக மாறும் என்ற கருத்துப் பரவியது. ஏனெனில், ஜனாதிபதி, தாக்குதலை முன்னரே அறிந்திருந்தும், அவர், கவனயீனமாக இருந்தமையாலேயே தாக்குதல் இடம்பெற்றது என்றதொரு கருத்து, அப்போது நிலவியது. எனவே, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே நிலவிவரும் பனிப்போர் காரணமாக, அந்தக் குழு ஜனாதிபதியைக் குறிவைத்தே நியமிக்கப்பட்டது என்ற கருத்துப் பரவியது.
அந்த நோக்கம், அப்போதைய அரசாங்கத்தின் தலைவர்களிடம் இருந்ததோ இல்லையோ, இப்போது அதுதான் நடைபெற்று வருகிறது.
தாக்குதல் நடைபெற்றபோது, பாதுகாப்புச் செயலாளராகவிருந்த ஹேமசிறி பெர்ணான்டோவும் தாக்குதல் காரணமாகத் தற்போது ஜனாதிபதியால் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் தெரிவுக்குழுவின் முன் அளித்த சாட்சியங்கள் மூலமாக, ஜனாதிபதியின் அசமந்தப் போக்கும் அவருக்கும் பிரதமருக்கும் இடையிலான பனிப்போரும், தாக்குதலுக்குச் சாதகமாக அமைந்தன என்றதொரு கருத்துப் பரவியிருக்கிறது.
தெரிவுக்குழுவை, மஹிந்த அணியினர் ஆரம்பத்திலிருந்தே விரும்பவில்லை. ஆனால், தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டம் நடைபெறும்வரை, அவர்கள், அக்குழுவால் அரச உளவுத்துறையினரின் விவரங்கள் அம்பலமாகுமெனக் கூறவில்லை.
உண்மையிலேயே, உளவுத்துறையின் உயர் அதிகாரிகள், எவருக்கும் தெரியாதவர்கள் அல்ல. அவர்கள், எதை வெளியில் கூறலாம், எதை கூறக்கூடாது என்பதை நன்கறிந்தவர்கள். அமெரிக்காவிலும் எப்.பி.ஐ, சி.ஐ.ஏ அதிகாரிகள், அமெரிக்க கொங்கிரஸ் குழுக்கள் முன் சாட்சியளிப்பது சர்வ சாதாரணமான விடயம் ஆகும்.
ஆனால், முன்னாள் பாதுகாப்புச் செயலாளரினதும் பொலிஸ் மா அதிபரினதும் சாட்சியங்களை அடுத்து, ஜனாதிபதி இவ்வளவு கடுமையாக, தெரிவுக்குழுவை எதிர்ப்பதை விளங்கிக்கொள்ளலாம்.
தெரிவுக்குழு, உண்மையிலேயே என்ன நோக்கத்துடன் இயங்குகிறது என்ற கேள்வி, சிலவேளைகளில் எழுகிறதுதான். ஆனால், அதன் மூலம், அரச உயர் மட்டத்தில், பாதுகாப்பு விடயத்தில் நிலவிய குழப்பமான நிலைமையும் அதன் மூலம் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் இடம்பெற எவ்வாறு வாய்ப்புகள் ஏற்பட்டன என்பதையும் மக்கள் அறிய முடிந்தது என்பதையும் புறக்கணிக்க முடியாது.
தெரிவுக்குழுவை இரத்துச் செய்யுமாறு, ஜனாதிபதி கூறி வருவது சட்டபூர்வமானது அல்ல. ஏனெனில், மக்களின் இறைமையைப் பிரதிபலிக்கும் நாடாளுமன்றத்துக்குக் கட்டளைப் பிறப்பிக்கும் அதிகாரம், ஜனாதிபதிக்கு இல்லை. ஆனால், மற்றொரு காரணத்தால், தெரிவுக்குழு தொடர்ந்து இயங்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
அதாவது, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பாக, நாட்டுத் தலைவர்களுக்கு எதிராக, தற்போது வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவரும் ஒரு விடயத்தை, நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றால், விசாரிக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. விசாரிக்க முடியுமாக இருந்தாலும், அக்குழு, பெரிதாக எதையும் சாதித்துவிடும் என்று, நாட்டில் எவரும் நம்புவதாகவும் தெரியவில்லை.
ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைப் பற்றி, விசாரணை செய்வதற்காகத் தாக்குதல் இடம்பெற்ற அன்றே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட தலைமையில் மூவர் கொண்ட ஒரு குழுவை நியமித்தார். அக்குழு, அதன் இறுதி அறிக்கையை கடந்த 10ஆம் திகதியன்று, ஜனாதிபதியிடம் கையளித்தது. ஆனால், நாட்டில் எவரும் அதைப்பற்றி அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை.
அந்தக் குழுவின் அறிக்கையை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக ஜனாதிபதி தெரிவித்ததாகச் சில செய்திகள் கூறின. ஆனால், திட்டவட்டமாகத் தாக்குதலை நடத்துவோர், அவர்களது இலக்குகள், எவ்வாறான தாக்குதலை நடத்த இருக்கிறார்கள் என்ற விவரங்களையெல்லாம், உளவுத்துறையினர் வழங்கியிருந்தும் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதவர்கள் தொடர்பில், நடவடிக்கை எடுப்பதற்கும், அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
அதாவது, அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துவிட்டால், ஜனாதிபதி குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றோ, அல்லது நாடாளுமன்றம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றோ, எவரும் வாதிட முடியாது. ஆனால், ஜனாதிபதிக்கு அவ்வாறு நடவடிக்கை எடுக்கும் தேவையோ, அவசரமோ இருப்பதாகவும் தெரியவில்லை.
சிலவேளை, அந்த அறிக்கையை ஜனாதிபதித் தேர்தல் வரை கிடப்பில் போட்டுவிட்டு, தேர்தலின் போது, அறிக்கையின் சில பகுதிகளை, ஐக்கிய தேசிய கட்சித் தலைவர்களுக்கு எதிராகப் பாவிக்க, அவர் காத்திருக்கிறாரோ தெரியாது. ஆனால், அது அவ்வளவு பயன் தராது. ஏனெனில், பாதுகாப்புத் துறைக்கு மட்டுமல்லாது சட்டம் ஒழுங்குத் துறைக்கும் ஜனாதிபதியே பொறுப்பாக இருக்கிறார். எனவே, அவர்தான் தாக்குதலுக்குப் பொறுப்பை ஏற்க வேண்டும். எல்லாவற்றையும் விட, இவ்வளவு பாரதூரமான தாக்குதல் ஒன்றைப் பற்றிய துல்லியமான தகவல்கள் கிடைத்தும், அதை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும், பொலிஸார் அறிவிக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிச்சயமாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
“ஜனாதிபதியைச் சந்திக்க முடியாது” எனத் தாக்குதல் நடந்தபோது, பாதுகாப்புச் செயலாளராகவிருந்த ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவுக்குழு முன் சாட்சியமளிக்கும் போது கூறியிருந்தார். ஆனால், இது போன்றதொரு தகவலை, தொழில் பறிபோனாலும் பரவாயில்லை என்று, மரபுகளை மீறிக்கூட அவர், ஜனாதிபதியைச் சந்தித்து, அவரிடம் கூறியிருக்க வேண்டும்.
மறுபுறத்தில், தெரிவுக்குழு மூலம், பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு அமைச்சராக இருக்கும் ஜனாதிபதியின் அசமந்தப் போக்கையும் திறமை இன்மையையும் தான் தாக்குதலுக்குக் காரணம் என்றதொரு கருத்தை உருவாக்கி, அதன் மூலம், எதிர்வரும் தேர்தலின் போது, ஐ.தே.க அரசியல் இலாபம் அடையப் போகிறதோ தெரியாது. ஆனால், இந்த அரசியல் பந்து விளையாட்டுகளால், நாட்டு மக்களோ அல்லது தாக்குதலால் உறவுகளை இழந்த மற்றும் அங்கங்களை இழந்த மக்களோ, எவ்விதப் பயனும் அடையப் போவதில்லை.
ஈஸ்டர் தாக்குதல்களுக்கும் ஈச்சமரத்துக்கும் என்ன சம்பந்தம்?
உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைப் பற்றி, விசாரித்து வரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அணியினர், கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அக்குழுவின் மூலம், உளவுத்துறையின் இரகசியங்கள் வெளியாகின்றன என்பதே அவர்களின் வாதமாக இருக்கிறது.
ஆனால், இதுவரை தெரிவுக்குழுவின் முன் தெரிவிக்கப்பட்ட பாரதூரமான கருத்துகளை, அவர்கள் கருத்திற்கொள்ளவே இல்லைப் போல் தான் தெரிகிறது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவும் கட்டாய லீவில் அனுப்பப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் பாதுகாப்புத்துறையில் நிலவும், மிக மோசமான நிலைமையை அம்பலப்படுத்தினர்.
அது, எவ்வளவு பாரதூரமான நிலைமையாக இருந்த போதும், மஹிந்த அணியினர் அதைப் பெரிதாகக் கருத்தில் கொள்ளவில்லை.
அதேவேளை, தெரிவுக்குழு உறுப்பினர்கள் சாட்சியாளர்களிடம் கேட்கும் கேள்விகளின் நோக்கத்தைச் சாதாரண மக்களால், விளங்கிக் கொள்ளவும் முடியாமல் இருக்கிறது.
உதாரணமாக, முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிடம் அவர்கள், “காத்தான்குடியில் உள்ள பெயர்ப் பலகைகளில், அரபு எழுத்துகள் எதற்காக” என்றும் “அங்கு வீதிகளில் ஈச்ச மரங்கள் நடப்பட்டு இருப்பது எதற்காக” என்றும் கேட்டனர்.
தெரிவுக்குழு, ஈஸ்டர் தினத் தாக்குதல்கள் தொடர்பாகவே விசாரித்து வருகிறது. ஈஸ்டர் தினத் தாக்குதலுக்கும் ஈச்ச மரத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்பது விளங்கவில்லை.
அதேபோல், ஈஸ்டர் தாக்குதல்களுக்கும் பெயர்ப் பலகைகளில் உள்ள அரபு எழுத்துகளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்பதும் விளங்கிக் கொள்ள முடியாத விடயமாக இருக்கிறது.
நாட்டில், சிறுபான்மை இனமான முஸ்லிம்கள், செறிவாக வாழும் ஒரு பிரதேசத்தில், அரேபிய கலாசாரத்தோடு மிக நெருங்கிய தொடர்புள்ள ஈச்ச மரங்கள் மட்டும் காணப்படுமானால், அது ஏனைய சமூக மக்களை அச்சப்படுத்தாது. அரபு மொழியிலான பெயர்ப் பலகைகள் மட்டும் இருந்தால், அதுவும் பிரச்சினையாகாது.
ஆனால், ஏனைய பகுதிகளிலும் பிரச்சினையாகியுள்ள அபாயா, புர்க்கா, நிக்காப், ஜூப்பா போன்ற உடைகளோடு, இந்த ஈச்ச மரங்களும் அரபுப் பெயர்ப் பலகைகளும் சேர்ந்த போது, அது மற்றொரு நாட்டின் பிரதேசம் போல், முஸ்லிம் அல்லாதோரின் கண்களில் தோற்றமளிப்பதைத் தவிர்க்க முடியாது.
இது, இன நல்லிணக்கத்தைப் பாதிக்கக்கூடியது என்பது உண்மை தான். அதேவேளை, அவற்றைப் பற்றி, ஹிஸ்புல்லாஹ் தெரிவுக்குழுவிடம் தெரிவித்த விளக்கமும் அக்குழுவின் உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கவில்லை.
ஆனால், அவற்றுக்கும் ஈஸ்டர் தினத் தாக்குதல்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? அவற்றைப் பற்றி ஏன், தெரிவுக்குழுவின் அமர்வின் போது கேள்வி எழுப்ப வேண்டும் என்பது தான், விளங்காத விடயமாக இருக்கிறது.
பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறியிடம், தெரிவுக்குழு அமர்வின் போது, அரச அலுவலகங்களில் கடமையாற்றும் பெண்களின் உடைகளைப் பற்றியே விசாரிக்கப்பட்டது. இது, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை அடுத்து, சில பாடசாலைகளிலும் சில அரச நிறுவனங்களிலும் முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயாவுக்கு எதிராகக் கிளம்பிய எதிர்ப்பின் விளைவு என்றே தெரிகிறது.
இந்த எதிர்ப்பு, இனவாத எதிர்ப்பு என்பது தெளிவானதாகும். ஆனால், அந்த விடயத்துக்கும் ஈஸ்டர் தாக்குதல்களுக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்பதே, இங்கு எழும் கேள்வியாகும்.
தெரிவுக்குழு உறுப்பினர்கள் இவற்றுக்கும் பயங்கரவாதத் தாக்குதலுக்கும் இடையே, ஏதாவது தொடர்பைக் கண்டார்களோ தெரியாது. எனவே, அவர்களது விசாரணை முடியும் வரை, அதைப் பற்றித் திட்டவட்டமாக எதையும் கூற முடியாது.
ஆனால், அக்குழுவுக்கு வெளியே பலர், இனவாதக் கண்ணோட்டத்திலேயே இவற்றைப் பயங்கரவாதத் தாக்குதலோடு தொடர்புபடுத்துகிறார்கள். அரபு மொழி, புர்க்கா, நிக்காப், அபாயா, ஜூப்பா, மத்தரஸா பள்ளிக்கூடங்கள் போன்றவை, சாதாரண முஸ்லிம்கள் மத்தியில் உள்ளவையாகும். அவை, தேவையா, இல்லையா என்பது வேறு விடயம். ஆனால், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை அடுத்து, பொதுவாக முஸ்லிம்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாகச் சித்திரிப்பதற்காகவே, பலர் இவற்றைப் பற்றி விவாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அதன் மூலம், இப்போது நாட்டில் பொது மக்களின் கவனம், உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிவதிலிருந்து வேறு திசையில் மாறியிருக்கிறது.
தகவல் கிடைத்தும், பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததைப் பற்றிக் கேள்வி எழுப்புவதை விடுத்து, இப்போது பலர் அபாயாவையும் மத்ரஸாவையும் தூக்கிப் பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
எம்.எஸ்.எம். ஐயூப்