கொள்ளுப்பிட்டி தொடக்கம் தெஹிவளை வரை துறைமுக நகர்!

கொழும்பு துறைமுக நகரை போன்று கொள்ளுப்பிட்டி தொடக்கம் தெஹிவளை வரையில் துறைமுக நகர் ஒன்றினை சர்வதேச முதலீட்டில் உருவாக்கவுள்ளதாக மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க நா்டாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,

கடல் சூழல் பாதிப்பு என்ற விடயங்களை கூறி சிலர் மக்களை அச்சுறுத்தி குழப்பினர்.எனினும்   எந்த பாதிப்பும் இல்லாத வகையில் கடல் பரப்பில் இன்று 700 ஏக்கர் பரப்பை நிலமாக்கியுள்ளோம். எமது அடுத்தகட்ட வேலைத்திட்டமாக கொள்ளுப்பிட்டி தொடக்கம் தெகிவளை வரையில் மேலும் 160 ஹெட்டேயர் கடல் பரப்பை நிரப்பி நிலமாக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். எதிர்காலத்தில் கடல் நகர் ஒன்றினை உருவாக்க சர்வதேச முதலீட்டில் முன்னெடுக்கவுள்ளோம்.

அத்துடன் கொழும்பு குப்பை அகற்றும் நடவடிக்கைகள் நகர அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது . அதேபோல் குப்பையில் மின்சாரம் உற்பத்தி  செய்யும் வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் மேலுமொரு  வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது. குப்பை முகாமைத்துவம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆகவே அதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம். அதேபோல் துறைமுக நகர் தொடர்பிலான வேலைத்திட்டத்தை பொறுத்தவரை எமது கடல் பரப்பை பாதுகாக்க சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.