அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்தும், கூட்டமைப்பின் இந்திய விஜயம் குறித்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு நாளை கூடி ஆராயவுள்ளது.
அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்துள்ள நிலையில் அந்த பிரேரணை அடுத்த மாதம் 9-10ஆம் திகதிகளில் பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது.
இது குறித்து நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தத்தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்ற நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஆராயவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
நாளை நண்பகல் நாடாளுமன்ற அமர்வு கூடவுள்ள நிலையில் அதற்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் கூடுகின்றது.
இதன்போது இந்த விடயங்களை தாம் ஆராயவுள்ளதாக மாவை சேனாதிராஜா எம்.பி தெரிவித்தார்.
அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த நிலையில் தமிழர் தரப்பின் சார்பில் சந்திப்பை முன்னெடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகள் குறித்து தலையீடுகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.
இது குறித்து ஆழமானதும் ஆரோக்கியமான கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுக்க டெல்லிக்கு வருமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.
ஆகவே இது குறித்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நகர்வுகள் குறித்தும் சந்திப்புகளை மேற்கொள்ளும் கால கட்டம் குறித்தும் ஆராயவும் நாளைய நாடாளுமன்ற குழுக் கூட்டத்தை பயன்படுத்திக்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.