படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்த அகதி ஒருவர் தனது சொந்தநாட்டில் திருட்டுத்தனமாகப்பெற்ற சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொடுத்து அவுஸ்திரேலிய சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டுள்ளார்.
இதன் மூலம் – அடையாள மோசடி புரிந்தார் என்ற குற்றத்தின் பேரில் – அவரது அவுஸ்திரேலிய குடியுரிமை ரத்துச்செய்யப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக செய்யப்பட்ட மேன்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்த 26 வயது ஆப்கான் அகதியொருவருக்கே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறிப்பிட்ட நபர் அவுஸ்திரேலியாவுக்கு வந்த அதே ஆண்டில் தற்காலிக வதிவிட விசா கிடைத்தது. 2014 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய குடியுரிமைக்கு விண்ணப்பித்தபோது ஒரு மாதத்தில் அது கிடைக்கப்பெற்றது.
2013 ஆம் ஆண்டு – குயின்ஸாந்தில் தனது ஆப்கான் சாரதி அனுமதிப்பத்திரத்தை கொடுத்து அவுஸ்திரேலிய சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்டிருக்கிறார்.
அவரது ஆப்கானிஸ்தான் சாரதி அனுமதி பத்திரத்தில் குறிப்பிட்ட நபர் கனரக வாகனங்களை ஓட்டும் தகுதிபெற்றவர் என்று குறிப்பிட்டிருந்தது.
அதுதொடர்பாக கேட்டபோது தனக்கு கனரக வாகனமெதுவும் ஓட்டத்தெரியாது என்றும் தனது ஆப்கானிஸ்தான் வாகன அனுமதிப்பத்திரமானது பாகிஸ்தானிலுள்ள நண்பர்களின் ஊடாக பணம் கொடுத்து பெற்றுக்கொண்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் வேலையெடுப்பதென்றால் சாரதி அனுமதிப்பத்திரம் அவசியம் தேவை என்ற காரணத்தினால் அவ்வாறு தான் செய்ததாகவும் கூறியிருக்கிறார்.
இதன்பின்னர் 2017 ஆம் ஆண்டு இவரது அடையாள ஆவண விவரங்களை புதுப்பித்தபோது கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் அவுஸ்திரேலிய குடியுரிமை ரத்துச்செய்யப்பட்டதாக குடிவரவுத்துறை அமைச்சினால் அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிரான மேன்முறையீடு கடந்த வாரம் Administrative Appeals Tribunal முன்னிலையில் நடைபெற்றது.
அங்கு ஆப்கான் அகதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கூறும்போது – குயின்ஸ்லாந்தில் சாரதி அனுமதி பத்திரத்தை புதுப்பிக்கும்போது குயின்ஸ்லாந்து வீதிப்பாதுகாப்பு அதிகாரசபையினர் குறிப்பிட்ட அகதிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் அவுஸ்திரேலிய கனரக சாரதி அனுமதி பத்திரத்தை கொடுத்திருக்கிறார்கள் என்றும் ஆகவே அகதி விடயத்தில் தயவு காட்டவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அந்த வாதத்தை மறுத்த மீளாய்வு மனு அதிகாரி – குறிப்பிட்ட அகதி ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தான் வழியாக மலேசியா – இந்தோனேஷியா என அவுஸ்திரேலியா வரை எந்த பயண ஆவணங்களும் இல்லாமல் – எந்த அடையாளப்பத்திரங்களும் இல்லாமல்தான் வந்திருக்கிறார்.
ஆகவே, சாரதி அனுமதிப்பத்திரத்திலும் தெரிந்தே இந்தக்குற்றத்தை செய்திருக்கிறார். முன்னைய சந்தர்ப்பங்களைப்போல இப்போதும் தப்பிக்கொள்ளலாம் என்று எண்ணியிருக்கிறார் என்று கூறி மேன்முறையீட்டு மனுவை நிராகரித்துள்ளார்.