குண்டுத்தாக்குதலின் பின்னர் நாட்டின் நிலைமைகள் தற்போது சீரடைந்து வருகின்றன. எனவே அரசாங்கம் தேசிய பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. கடந்தகால தவறுகளை மறந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமருடன் ஒன்றிணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரட்ன, ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் சஜித் பிரேமதாசவும் ஒருவர் எனவும் குறிப்பிட்டார்.
அமைச்சர் ராஜித சேனாரட்ன வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
செவ்வி வருமாறு :
கேள்வி : 2015 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் அரசியல் ரீதியாகவும் சரி ஏனைய பொருளாதார, அபிவிருத்தி விடயங்களிலும் சரி இந்த நல்லாட்சி அரசாங்கம் பல்வேறு சவால்களின் மத்தியிலேயே நகர்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறானதொரு நிலைமையிலேயே ஏப்ரல் 21 ஆம் திகதி குண்டுத்தாக்குல் சம்பவங்கள் இடம்பெற்றன. இவ்வாறு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் பின்னணியாக இருந்திருக்கலாம். இது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு எவ்வாறு உள்ளது ?
பதில் : நாட்டில் காணப்பட்ட பாரதூரமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்காகவும் தேசிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கிலேயே 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் மற்றும் தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது. ஆனால் அரசாங்கத்துக்குள் இருந்தே அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்படும் போது அதனை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். எதிர்த்தரப்பில் இருந்து அரசாங்கத்துக்கு எதிர்ப்பை வெளியிடுவது போன்று அது அமையாது. இந்த நிலைமையே தற்போது எங்களின் அரசாங்கத்துக்கும் நேர்ந்துள்ளது. தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவளித்தே 2015 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஐ.தே.க. ஆட்சியமைத்தது.
ஆனால் சிறிது காலத்திலேயே அரசே அரசாங்கத்தை எதிர்த்து செயற்படும் நிலை உருவாகியது. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மௌனித்துவிட்டார். ஜனாதிபதியின் அமைதியான செயற்பாடுகள் அனைத்தும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் சுதந்திர கட்சிக்கும் இடையில் பிளவு ஏற்படுவதற்கு வழி கோலியதுடன் அரசாங்கம் இரண்டாக உடைந்தது. இரு தரப்புக்கும் இடையிலான தொடர் அரசியல் கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியில் கடந்த வருட இறுதியில் அரசாங்கத்துக்கு எதிரான சூழ்ச்சி இடம்பெற்றது. இந்த நெருக்கடி நிலைமையிலிருந்து நாடு இயல்பு நிலைமைக்கு திரும்பியிருந்த நிலையிலேயே எதிர்பாராத விதமாக ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றன. அரசியல் நெருக்கடி நிலைமையின் பின்னர் பாரிய அரசியல் மாற்றமும் ஏற்பட்டது. புதிய அமைச்சுக்களை பொறுப்பளிக்கும் போது ஜனாதிபதி சட்ட ஒழுங்கு அமைச்சை அரசாங்கத்துக்கு வழங்கவில்லை. அந்த அமைச்சை அவரின் பொறுப்பின் கீழ் வைத்துக்கொண்டார். மக்களின் ஆதரவோடும் நீதிமன்றத்தின் தீர்ப்போடும் அரசாங்கத்துடன் தொடர்ந்து பயணிக்க ஜனாதிபதி ஒப்புக்கொண்டார். இருப்பினும் அரசாங்கத்துக்கு தேவையான பலத்தை அவர் எங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை.
இதனைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு சபை கூட்டங்களில் பிரதமர் உள்ளிட்ட பாதுகாப்பு ராஜாங்க அமைச்சரை பங்குபற்ற இடமளிக்கவில்லை. எனவே பிரதமர் உள்ளிட்ட எங்களின் தரப்புக்குப் பாதுகாப்பு தொடர்பில் எந்த பொறுப்பும் இருக்கவில்லை. பாதுகாப்பு தொடர்பான பலத்தை தன்னிடத்தில் வைத்துக்கொண்டு தனக்கேற்ற வகையில் அவருக்கு தேவையான குழுவினருடன் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை எடுக்க ஆரம்பித்தார். ஆனால் அரசாங்கத்தரப்பில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க யாரும் தயாராக இருக்கவில்லை. இவ்வாறான ஒரு நிலை யில் பாதுகாப்பு தொடர்பில் அச்ச நிலை உருவாகியது. இதுவே குண்டுத்தாக்குதல் சம்பவங்களுக்குப் பிரதான காரணங்களாக அமைந்தன.
கேள்வி : அவ்வாறானால் தற்போது நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் திருப்தியடையக் கூடியதாக உள்ளதா?
பதில் : உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான முன்னறிவித்தல்கள் கிடைத்திருந்த போதிலும் ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினர் இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில், பாதுகாப்பு சபை தரப்பினர் அனைவரும் பங்குபற்றியிருப்பார்களானால் தீர்க்கமான கலந்துரையாடல்களை முன்னெடுத்து சிறந்த தீர்வை வழங்கியிருக்க முடியும். ஆனால் அதற்கான வாய்ப்பு எதுவும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.
ஜனாதிபதி தரப்பின் குறைபாடுகளின் காரணமாக இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது. அதே சந்தர்ப்பத்தில் தாக்குதல்கள் இடம்பெற்று 24 மணிநேரத்தில் பாதுகாப்பு துறையினரால் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடியதாகவும் இருந்தது. தழிழீழ விடுதலைப் புலிகளைப் போன்று இந்த பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொண்ட குழுவின ரைக் கருதி விடக்கூடாது. சர்வதேசத்தின் தேவைகளுக்கு ஏற்பவே இவர்கள் செயற்பட்டார்கள் என்பதை மறந்துவிட முடியாது.
தற்போதைய அளவில் பாதுகாப்பு பிரச்சினைகள் எதுவும் இல்லை. பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் பலப்படுத்தப்பட்டே உள்ளன. ஆயினும் முஸ்லிம் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு சிங்கள மக்களை விட முஸ்லிம் மக்களே கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். இந்த தாக்குதல் சம்பவங்களின் பின்னரும் இதுவரையில் பாதுகாப்பு தொடர்பான பொறுப்புக்கள் அரசாங்கத்துக்கு ஒப்படைக்காவிட்டாலும் தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டங்களில் பிரதமரும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சரும் பங்குபற்றுகிறார்கள். சில சந்தர்ப்பங்களில் நாங்களும் பஙகுபற்றுவோம்.
தற்போது கூடும் பாதுகாப்பு சபை கூட்டங்கள் முழுமையானதாக இருந்தாலும் இன்னும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட எங்களின் குழுவினருக்கும் இடையில் முரண்பாடு நிலைமையே காணப்படுகிறது. ஆயினும் ஜனாதிபதி எதிர்காலத்தில் சட்ட ஒழுங்கு அமைச்சை அரசாங்கத்திடம் ஒப்படைத்து பாதுகாப்பு விடயம் தொடர்பில் சகல பிரிவினருடனும் ஒற்றுமையாக செயற்படுவார் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு உள்ளது. தற்போதைய நிலைமைகளில் சகலருடனும் இணைந்து பணியாற்றும் வகையில் படிப்படியாக ஜனாதிபதியின் செயற்பாடுகள் மாறிவரு கின்றன. ஆகையால் எதிர்காலத்தில் பாதுகாப்பு தொடர்பில் எந்த பிரச்சினையும் ஏற்படாது.
கேள்வி : அதேபோன்று தாக்குதல்களைத் தொடர்ந்து முஸ்லிம் மக்களுக்கு எதிராகப் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறதே ?
பதில்: இதற்கு முன்னர் நாட்டில் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஓர் இனத்துக்கு எதிராக செயற்படும் நிலை உருவாகியிருந்தது. 1971 ஆம் ஆண்டு இடம்பெற்ற தாக்குதல்களின் போதும் தமிழ், சிங்கள மக்களுக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அதற்கு எதிராக அரசாங்கத்தால் கடும் சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதேபோன்று 1983 களில் இடம்பெற்ற கலவரங்களிலும் பாரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டிருந்தது. தாக்குதல்கள் இடம்பெறும் சந்தர்ப்பங்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படுவது இயல்பானதொரு விடயம்.
முப்பது வருடகால யுத்தத்தின் போதும் இதேபோன்ற நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டது. இந்த யுத்த காலத்தில் தமிழ் மக்கள் அசௌகரிய நிலை மையை அடைந்திருந்தனர். அவ்வாறான துர்ப்பாக்கிய நிலைமையே இன்று முஸ்லிம் மக்களுக்கும் நேர்ந்துள்ளது. ஆனால் இந்த செயற்பாடுகளில் முஸ்லிம் மக்களுக்கு உயிர்ச் சேதமோ அல்லது அவர்களுக்கு எதிரான ஆள்கடத்தல் சம்பவங்களோ இடம்பெறவில்லை.
இருந்தாலும் அவர்களுக்கு எதிரான செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போதைய அளவில் எதிர்ப்பு நடவடிக்கைகள் படிப்படியாக கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதுடன் எதிர் காலத்தில் இந்த செயற்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.
கேள்வி : தற்போதுள்ள அரசியல் வேறுபாடுகளின் மத்தியில் இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும் எனக் கருதுகிறீர்களா?
பதில் : அரசியல் நோக்கங்களுக்காக அரசியல்வாதிகளே மக்கள் மத்தியில் இனவாதத்தைத் தோற்றுவித்தனர். மக்கள் ஒருபோதும் இனவாதத்தை உருவாக்க வில்லை. 1950 ஆம் ஆண்டுகளில் இருந்து சகல இன மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக இனவாதம் என்ற விடயத்தை அரசியல்வாதிகள் பக ைடக் காயாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த இனவாதம், மதவாதம் காரணமாகப் பாரதூரமான எதிர்விளைவுகளும் ஏற்பட்டுள்ளன. இதுதான் தற்போதைய எமது நாட்டின் நிலை.
கேள்வி: இந்த அரசாங்கத்தின் பதவிக்காலம் நிறைவடைய இன்னும் குறுகிய காலமே உள்ளது. இந்நிலையில் அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் எவ்வாறானதாக அமையப் போகிறது?
பதில் : எஞ்சியிருக்கும் இந்த குறுகிய காலத்தில் சகல சகோதர அதிகார சக்திகளையும் இணைத்துக்கொண்டு அரசாங்கத்தை மாற்றுப் பாதையில் இட்டுச்செல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இனவாதம் மதவாதத்தை எதிர்த்து உயிர்ப்பான ஜனநாயகத்தன்மையை உருவாக்க கூடிய ஜனநாயக அதிகாரம் உடைய கூட்டணியை உருவாக்க முடியும். அதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. இதனூடாக எதிர்வரும் தேர்தல்களில் சிறந்த வெற்றி களைப் பெற்றுக்கொள்ளவும் முடியும். இதனை மையமாகக் கொண்டாலே தற்போதைய அரசாங்கத்தின் இலக்குகளை அடைந்துகொள்ள முடியும்.
மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக முரண்பட்டாலும் மகி்த ராஜபக்ஷ அணியினருக்கு சார்பாக செயற்பட வில்லை. இதற்கு சிறந்த உதாரணமாக 2018 ஒக்டோபர் 26 ஆம் திகதி இடம்பெற்ற அரசியல் நெருக்கடி நிலைமையை எடுத்துக்கொள்ளலாம். அரசாங்கத்தை எதிர்த்த அனைவரும் ஜன நாயகத்துக்காக எங்களுடன் கைகோர்த்தார்கள்.
எங்களிடமிருந்து பிரிந்து சென்று எங்களுக்கு எதிராகச் செயற்பட்டாலும் முழுமையாக கொள்கைகளில் இருந்து அவர்கள் மாறுபடவில்லை. எனவே எதிர்காலத்தில் அரசாங்கத்தால் எடுக்கப்படும் ஜனநாயக ரீதியான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தரப்பினரது ஆதரவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்பும் எனக்கு உள்ளது. இதனை அடைந்துகொள்ள வேண்டுமானால் உறுதியான தலைமைத்துவம் அவசியம். அதற்காகவே ஐக்கிய தேசிய முன்னணியை உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம்.
கேள்வி: ஐக்கிய தேசியக் கட்சி அமைக்கவுள்ள ஐக்கிய தேசிய முன்னணிக்கு முஸ்லிம் அமைச்சர்களின் ராஜினாமாவினால் சவால் ஏற்பட்டால்…?
பதில் : அவர்கள் அமைச்சுக்களில் இருந்து பதவி விலகியிருந்தாலும் அரசாங்கத்திலிருந்து பதவி விலகவில்லை. அதேபோன்று இந்த அரசாங்கத்திலிருந்து விலகி எமக்கு எதிராக செயற்பட மாட்டார்கள். அந்த நம்பிக்கை எமக்கு உள்ளது. மக்களின் நன்மை கருதியே அவர்கள் அமைச்சு பதவிகளை துறந்தனர். இதன் காரணமாகவே இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறாமல் உள்ளனர்.
அவர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்காக அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களும் கைகோர்த்துள்ளனர். இருப்பினும் அவர்கள் எதிரணியுடன் கூட்டணி அமைக்கவில்லை.
கேள்வி : ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க ஆரம்பித்த நாள் முதல் சுகாதார அமைச்சராக இந்த அரசாங்கத்துக்கு பெரும் பங்காற்றி வருகிறீர்கள். ஆனால் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் உங்களுக்குக் கடும் எதிர்ப்பை வெளியிடுகின்றனரே ? காரணம் என்ன ?
பதில் : அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள். பொதுஜன பெரமுனவின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுபவர்களாகவே அவர்கள் செயற்படுகிறார்கள். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தில் உள்ள வைத்தியர்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் அல்லர். இந்தச் சங்கத்தில் இருக்கும் ஒரு குழுவினரே இவ்வாறு எனக்கு எதிராக செயற்படுகின்றனர்.
எனவே இந்த குழுவினர் அரசியல் நோக்கங்களோடு மகிந்த அணியினருடன் இணைந்தே செயற்படுகின்றனர். எனவே இவர்களிடம் உள்ள ஒரே துருப்புச் சீட்டு நான்தான்.
கேள்வி : புற்றுநோய்க்கான மருந்து கொள்வனவுகளின்போது நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக உங்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கின்றரே ?
பதில் : மருந்துகளை கொள்வனவு செய் வது தொடர்பிலும் அவற்றைக் கொள்வனவு செய்யவென மருந்து ஒழுங்கு படுத்தல் அதிகார சபை என்ற ஒன்று தனியாக இயங்கி வருகிறது. இந்த அதிகார சபையே மருந்து கொள்வனவு தொடர்பான அனைத்து தீர்மானங்களையும் எடுக்கிறது. இந்தச் சபையில் நிபுணத்துவமுடைய அதிகாரிகளே பணிபுரிகிறார்கள். எனவே அவர்கள் பரிந்துரைக்கும் மருந்து வகைகளையே கொள்வனவு செய்ய முடியும்.
அரசியல் நோக்கங்களுக்காக பிழையான பிரசாரங்களின் காரணமாகவே இந்த பிரச்சினை உருவாகியுள்ளது. இது குறித்து சுகா தார அமைச்சின் செயலாளரும் தகுந்த விளக்கங்களை வழங்கியுள்ளார். ஆனால் அவர் குறிப்பிட்ட விடயங்களையும் நிராகரித்து எதிர்ப்பையே தெரிவிக்கின்றனர். இது தொடர்பான தகவல்களை செயலாளர் ஊடகங்களுக்கும் அறிவித்துள்ளார். ஆனால் இந்த தகவல்கள் சரியாக வெளியிடப்படவில்லை. எனவே இந்த விடயத்தில் சூழ்ச்சியே நிலவுகிறது.
இவ்வாறு மருந்துகளைக் கொள்வனவு செய்யும் நிறுவனங்களின் அதிகாரிகள் அரச திணைக்களங்களுடன் தொடர்பு இருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இது சாதாரண விடயமும் கிடையாது. மருந்துகளைக் கொள்வனவு செய்யும் தனியார் நிறுவனங்கள் தமது நட்டங்களை ஈடு செய்வதற்காக பாரியளவில் செலவு செய்கின்றனர். இவ்வாறு தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு எதிராக அரச தலையீடுகள் ஏற்படும் போது பாரிய குற்றச்சாட்டுக்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
அவ்வாறான தனியார் நிறுவனங்களும் வைத்திய அதிகாரிகள் சங்கமும் ஒருமித்தே செயற்படுகின்றன. இவ்வாறான குற்றசாட்டுக்கள் தொடர்பில் இந்த தனியார் நிறுவனங்களிடம் கேள்வி எழுப்பும் போது அவற்றை நிரூபிப்பதற்கான சான்றுகள் எதுவும் இருப்பதில்லை. புற்றுநோய் மருந்துகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் இவர்கள் முன்வைத்தும் நோயாளர்கள் இது குறித்து எந்த முறைப்பாடும் செய்ததில்லை.
கேள்வி: அதேபோன்று நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை இன்னும் அரசுக்கு சொந்தமாக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்படுகிறதே ?
பதில் : இந்த வைத்தியசாலையை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான அமைச்சரவை உள்ளிட்ட சகல தரப்பினரதும் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன் நிர்வாகம் அனைத்தும் சுகாதார அமைச்சின் கீழே செயற்படுகிறது. அதன் உறுப்பினர்களையும் சுகாதார அமைச்சே தீர்மானிக்கிறது. இவ்வாறு இருக்கும் போது நெவில் பெர்னாண்டோ வைத்திய சாலையை தனியார் வைத்திய சாலையென்று கூறமுடியாது.
கேள்வி: அதேபோன்று உங்களுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெறுகின்றனவே?
பதில் : இவ்வாறான எதிர்ப்பு செயற் பாடுகளே இனவாதத்தை உருவாக்கு கின்றன. இதற்கு முன்னரும் எனக்கு எதி ராக இவ்வாறான எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்திலும் எனக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெற்றன. ஆனால் அவற்றால் என்னைத் தோற்கடிக்க முடியவில்லை. இவ்வாறான எதிர்ப்புக்கள் குறுகிய காலத்துக்கே நீடிக்கும்.
கேள்வி : தமிழ் அரசியல் கட்சிகள் அரசாங்கத்துடனான தொடர்புகளில் ஏதும் பிளவுகள் உள்ளனவா? ஒத்துழைப்பு வழங்கு கிறார்களா?
பதில் : தமிழ் அரசியல் கட்சிகள் அரசாங் கத்துக்குச் சிறந்த ஒத்துழைப்பையே வழங்குகின்றனர். இதற்கு முன்னர் இருந்ததைவிட அதிக பங்களிப்பை வழங்குகிறார்கள்.
கேள்வி : எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு ஐக்கிய தேசிய கட்சி தயாராகி விட்டதா?
பதில் : நிச்சயமாக! ஜனாதிபதி தேர்தலுக்கு நாங்கள் தயார். இந்த தேர்தல் பொதுஜன பெரமுனவுக்கு பாரிய சவாலாகவே அமையும். மகிந்த தரப்பு மீதான மக்களின் ஆதரவும் குறைந்துள்ளது. இன்று அவர்களுக்கு ராஜபக்ஷ குடும்பத்தை அன்றி வேறு எவரையும் வேட்பாளராகத் தெரிவு செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. இதன்காரணமாக எதிர்த்தரப்புக்குள் முரண்பாடுகள் காணப்படுகின்றன. எனவே இன்னும் மூன்று மாதங்களாகும் போது அரசியல் நிலைமைகளில் பாரிய மாற்றம் ஏற்படக்கூடும்.
கேள்வி : அவ்வாறாயின் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் தயாரா?
பதில் : எங்களின் வேட்பாளர் பட்டியலில் பலர் உள்ளனர். உரிய நேரத்தில் அவர்க ளில் ஒருவரைத் தெரிவு செய்வோம். ஆனால் எங்களால் களமிறக்கப்படும் வேட்பாளர் குடும்பத்தைச் சார்ந்தவராக இருக்க மாட்டார். பொதுஜன முன்னணி இன்னும் மன்னராட்சி காலத்தில் உள்ளது. குடும்பத்தைத் தவிர வேறு எவருக்கும் இடம் கிடைப்பதில்லை.
கேள்வி: அமைச்சர் அஜித் பி.பெரேரா, அமைச்சர் சஜித் பிரேமதாசவே ஜனாதிபதி வேட்பாளர் என கூறியுள்ளாரே ?
பதில் : ஆம், அவரும் ஐக்கிய தேசிய கட்சியின் பரிசீலனையிலுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவர்.
கேள்வி : ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரோ அல்லது தேர்தல்களின் பின்னரோ அரசியல் நிலைமைகளில் எவ்வாறான மாற்றம் ஏற்படும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
பதில்: மகிந்த ராஜபக் ஷவுக்கு எதிராக ஜனநாயக முன்னணியொன்றை உருவாக் குவோம். தேர்தலுக்கு பின்னர் ஒரு கொள்கையின் அடிப்படையிலான ஒற்று மையான அரசாங்கமே ஏற்படுத்தப்படும்.
நா.தினுஷா