“எந்தவொரு பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி ஆவா குழுவுடன் கலந்துடையாடுவதற்கு நான் தயாராகவுள்ளேன்” என வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
கொக்குவில் புகையிரத நிலைய அதிபர் மீதான தாக்குதலுக்கு பதிலளிக்குமுகமாக ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். இத்தாக்குதலானது வட மாகாணத்தை மையப்படுத்தி ஆயுத வன்முறையிலும் பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வரும் ஆவா குழுவினரால் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இவர்களின் பிரச்சினை தொடர்பாக ஜனநாயக ரீதியிலான கலந்துரையாடலை மேற்கொள்ள தான் தயாராக இருப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்திற்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையினையும் நாட்டின் எப்பகுதியிலுமுள்ள எந்தச் சமூகத்தின் மீதும் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது. எந்தவொரு பிரச்சினையும் தீர்ப்பதற்கு சிறந்த வழி ஜனநாயக ரீதியிலான கலந்துரையாடல்களை மேற்கொண்டு ஜனநாயகத்தைப் பாதுகாப்பதேயாகும் என ஆளுநர் வலியுறுத்தினார். இதற்காக தான் எந்நேரமும் தயாராக இருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.
நான் நேரிலே சென்று ஆவா குழுவினரை சந்தித்து அவர்களுடைய பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடவுள்ளேன். வடக்கு மக்களின் வாழ்க்கையினை சிதைப்பதற்கான காரணம் என்ன என வினவவுள்ளதாகவும் தெரிவித்த ஆளுநர் இதற்காக எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி அவர்களை சந்திக்கத் தயாராக இருப்பதாக பகிரங்க அழைப்பினை ஆளுநர் விடுத்துள்ளார் .
Eelamurasu Australia Online News Portal