ஆஸ்திரேலியா பேட் தயாரிப்பு நிறுவனத்தின் மீது சச்சின் வழக்கு!

விளம்பர தூதராக இருக்க ஒப்பந்தம் செய்த தொகையை கொடுக்க தவறியதற்காக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேட் தயாரிப்பு நிறுவனத்தின் மீது சச்சின் தெண்டுல்கர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் உள்ள ‘ஸ்பார்ட்டன் ஸ்போர்ட்ஸ்’ எனும் கிரிக்கெட் விளையாட்டு சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனம் தயாரிக்கும் கிரிக்கெட் பேட்களில் சச்சின் தெண்டுல்கரின் பெயரையும் புகைப்படங்களையும் பயன்படுத்தி விளம்பரம் செய்து அவர்களது தயாரிப்புகளை ‘சச்சின் பை ஸ்பார்ட்டன்’ என விற்பனை செய்வதற்கு ஆண்டுக்கு 10 லட்சம் டாலர்கள் தருவதாக கடந்த 2016-ம் ஆண்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்தியாவை சேர்ந்த குணால் ஷர்மா என்பவர் இந்நிறுவனத்தின் பங்குதாரராக உள்ள நிலையில் ஒப்பந்தம் செய்தவாறு தொகையை தராமல் இழுத்தடித்த ஸ்பார்டான் நிறுவனம் இனி தனது பெயரையோ, புகைப்படங்களையோ பயன்படுத்த கூடாது என சச்சின் கடந்த ஆண்டில் தெரிவித்து விட்டார்.

முன்னர் பேசியபடி தனக்கு சேர வேண்டிய 30 லட்சம் அமெரிக்க டாலர்களைதராத அந்நிறுவனத்தின் மீது சிட்னி நீதிமன்றத்தில் சச்சின் தெண்டுல்கர் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார்.