இந்தியாவிற்கு எதிரான 2001-ம் ஆண்டின் டெஸ்ட் தொடர் மறக்க முடியாதது- ரிக்கி பாண்டிங்

இந்தியாவிற்கு எதிராக 2001-ம் ஆண்டு நடந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடர் மறக்கமுடியாத ஒன்று என அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் ரிக்கி பாண்டிங் நினைவுக் கூர்ந்துள்ளார்.

அவுஸ்ரேலியாவில் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் ரிக்கி பாண்டிங், இந்திய அணியுடன் விளையாடிய 2001-ம் ஆண்டு டெஸ்ட் தொடர் குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக கடந்த 2001-ம் அவுஸ்ரேலியா அணி அந்நாட்டிற்கு சென்றது. இந்த தொடரில் மும்பையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் நாங்கள் வீழ்த்தினோம்.

அதன்பின்னர், எழுச்சியடைந்த இந்திய அணி அடுத்த இரண்டு போட்டிகளிலும் வென்று 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில் கொல்கத்தாவில் நடந்த இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்ததற்கு பிறகு, வர்ணனையாளரின் கேள்விக்கு, இந்த டெஸ்ட் போட்டி நான் பங்கேற்ற போட்டிகளில் சிறப்பான ஒன்றாகும் என்று குறிப்பிட்டிருந்தேன்.

கொல்கத்தா டெஸ்ட் போட்டியில், லக்ஷமணன் மற்றும் ராகுல் டிராவிட்டின் ஆட்டம் ஆபாரமானது. குறிப்பாக ராகுல் டிராவிட் ஒருநாள் முழுவதும் களத்தில் நின்று எங்களை கவலையடையச் செய்தார்.

இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா இழந்தாலும், கிரிக்கெட் விளையாட்டின் தரமான ஆட்டத்தை இரு அணிகளும் வெளிப்படுத்தினோம். நான் பங்கேற்ற போட்டிகளில் மிக குறிப்பிடத்தக்க ஒன்றாக இத்தொடர் இருக்கின்றது. இவ்வாறு அவர் பேசினார்.