மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்ட தற்கொலையாளி மொஹமட் நாசார் மொஹமட் ஆசாத்தின் சடலத்தை தமது பிரதேசங்களில் புதைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதன் காரணமாக காவல் துறை சடலத்தை அடக்கம் செய்ய முடியாது நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த 21 ஆம் திகதி இடம் பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதியான காத்தான்குடியைச் சேர்ந்த மொஹமட் நாசார் மொஹமட் ஆசாத்தின் தலை மற்றும் உடற்பாகங்கள் மரபணு பரிசோதனையில் அவருடையது என உறுதிப்படுத்தப்பட்டது
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் சடலத்தை அரச செலவில் அடக்கம் செய்யுமாறு அரசாங்க அதிபருக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.
இதனையடுத்து காவல் துறை சடலத்தை மட்டு. விமான நிலையப்பகுதில் உள்ள புதூர் ஆலையடி இந்து கிறிஸ்தவ மயானப் பகுதியில் செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்ய முற்பட்டதையடுத்து அங்கு பிரதேச மக்கள் எதிர்பு தெரிவித்து ஆர்பாட்டம் செய்தனர்
இதனையடுத்து பொலிசார் சடலத்தை புதன்கிழமை காத்தான்குடி பஸ் டிப்போக்கு அருகிலுள்ள முஸ்லிம் மயானத்தில் அடக்கம் செய்ய முற்பட்டட போது அப்பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வீதியை மூடினர்.
இந் நிலையில் நேற்றைய தினம் காவல் துறை மட்டக்களப்பு பொலனறுவை எல்லைப் பகுதியான ரிதிதென்னை இராணுவமுகாமிற்கு அருகில் வனபரிபாலன திணைக்களத்துக்கு சொந்தமான காட்டுப்பகுதில் புதைக்க இருந்த நிலையில் அங்கும் மக்கள் எதிர்ப்பு காரணமாக சடலம் மட்டு. போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருக்கின்றது.