மெல்பேர்ன் வீடு கட்டுவதற்காக வாடிக்கையாளர்கள் செலுத்திய முன்பணத்தில் மோசடி செய்த தம்பதியினருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
இவர்கள் இருவரும் 2015 ஆம் ஆண்டு முதல் இந்த மோசடிக்குற்றத்தை மேற்கொண்டுவந்துள்ளனர். நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதையடுத்து கணவனுக்கு மூன்று வருட சிறையும் மனைவிக்கு 20 மாத சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
வீடு விற்பனை முகவரான Nguyen, வீட்டுத்தரகு வர்த்தகத்தில் தனது கணவன் Ngo-ஐயும் பங்குதாரராக இணைத்து பணியாற்றியிருந்தார்.
இவர்களின் ஊடாக வாடிக்கையாளர்கள் வீடு கட்டுவதற்கு வைப்புச்செய்த பணத்தை இன்னொரு வங்கிக்கணக்கிற்கு மாற்றிக்கொண்டனர்.
இதன் மூலம் இந்த மோசடியை செய்திருக்கிறார்கள் என்றும் பணத்தை மாற்றும்போது அது கணக்கியல் விவகாரம் என காரணம் கூறியிருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சுமார் 23 லட்சம் டொலர்களுக்கு மேல் மோசடி செய்துள்ள Ngo போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும் போதைப்பொருள் பாவனைக்கு மாத்திரம் சுமார் மூன்று லட்சம் டொலர்களை செலவு செய்திருக்கிறார்.
மிகுதி பணத்தை தனது ஆடம்பர தேவைகளுக்கு பயன்படுத்தினார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு மூன்று வருட சிறைத்தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது. இவரது மனைவி Nguyen சுமார் எட்டு லட்சம் டொலர்கள் வரையிலான வாடிக்கையாளர் பணத்தை மோசடி செய்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக்குற்றத்தை அவர் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையிலும் அவர் நான்கு பிள்ளைகளின் தாயார் என்றை வகையிலும் இதற்கு முன்பு குற்றமெதுவும் புரியாதவர் என்ற காரணத்தினாலும் அவருக்கு 20 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நன்நடத்தையை கடைப்பிடித்தால் 8 மாதங்களில் பரோலில் வெளிவருவதற்கு வாய்ப்பு உண்டு என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.