அவுஸ்திரேலியா தடுத்து வைத்துள்ள ஈழ அகதியின் வேண்டுகோள்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால்  கடந்த ஐந்து வருடங்களிற்கு மேலாகதடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ  தமிழர் ஒருவர் தன்னை விடுதலை செய்து பிரிட்டனில் உள்ள சகோதரியிடம் செல்வதற்கு அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2013 முதல் மனஸ் தீவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள  திரவியராஜா சுப்பிரமணியம் என்ற 37 வயது இலங்கை தமிழரே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

பிரிட்டனில் உள்ள தனது குடும்பத்தினருடன் இணைவதற்கு பிரிட்டனின் உள்துறை அமைச்சு அனுமதி மறுக்கின்றது என பிரிட்டனின்  குடிவரவு தீர்ப்பாயத்திற்கு  அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட நபர் இலங்கையில் அனுபவித்த சித்திரவதைகள் காரணமாக உளநல பாதிப்பிற்கு உட்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரவியராஜா சுப்பிரமணியம் 2013 முதல் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் தற்போது மனஸ் தீவு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை தனது சகோதரர் அவுஸ்திரேலியாவில் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளார் என லண்டனில் வசிக்கும் சுப்பிரமணியத்தின் சகோதரி  சுசீலா நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ள ஆவணத்தில் தெரிவித்துள்ளார்.

எனது சகோதரர் ஒரு அகதியென அவர் தெரிவித்துள்ளார்.எனது சகோதரர் மோசமடைந்து வரும் மனோநிலையால் பாதிக்கப்பட்டுள்ளார்,அவரது எதிர்காலம் குறித்து நான் அச்சமடைந்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.