சுற்றுப்புறத்தை அசுத்தம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ரோம் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இத்தாலி தலைநகரான ரோமில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிட்டு நகர சபையானது சில புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொது இடங்களில் ஆண்கள் மேலாடை இல்லாமல் உலாவுவது மற்றும் அன்பின் பாலத்தில் காதல் சின்னத்தை (பூட்டு) பதிவிடுவதற்கு அபராதம் விதித்துள்ளது. ‘ட்ரெவி நீருற்று’ போன்ற முக்கியமான சுற்றுலா தளங்களில் நொறுக்கு தீனிகள் தின்பது மற்றும் பொது நீர்க்குழாய்களில் வாய் வைத்து நீர் அருந்துவது போன்றவற்றிற்கும் தடை விதித்துள்ளது. ‘ஸ்கிப் தி லைன்’ என்ற டிக்கெட் விற்கும் முறையும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டு படைத்தலைவனைப் போல் உடையணிந்து புகைப்படம் எடுப்பதற்கு கட்டணம் செலுத்தும் முறையும் கொண்டு வரப்பட்டுள்ளது.
அனுமதி இல்லாமல் நீருற்றுகளில் நனைந்து விளையாடுபவர்களுக்கும், நீச்சல் அடிப்பவர்களுக்கும் கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் முக்கிய சுற்றுலாத்தளமான ’ஸ்பானிஷ் படிகள்’ இடத்திலும், குழந்தைகளை வைத்து கொண்டு செல்லும் கைவண்டிகள், சக்கரம் பொருத்திய இழுவைப் பெட்டிகள் பயன்படுத்துவதற்கும் வரம்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன. சில சிறிய தவறுகள் செய்தால்மட்டும் காவல்துறை எச்சரிக்கையுடன் விடப்படும். ஆனால் விதிமீறல்களுக்கு பெருந்தொகை அபராதம் விதிக்கப்படும் என மேயர் விஜினியா ராகி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில் ‘ரோம் அனைவரையும் எப்பொழுதும் வரவேற்கிறது, ஆனால் சட்டவிரோத செயல்களை ஒருபோதும் அனுமதிக்காது,’ என்றார்.
பொது இடங்களில் குப்பை போடுவது, மற்றவர்களுக்கு இடையூறாக ஒலி எழுப்புவது, நீச்சல் உடையில் இருப்பது போன்றவற்றிற்கு அபராதமும், மீறும் பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.