முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியமை ஏற்றுக் கொள்ள முடியாது. அதேவேளை மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தவும் முடியாது. ஆனால் பதவி விலகி பிரிந்து செல்வதால் தீர்வினைக்காண முடியாது என்பதால் முஸ்லிம் உறுப்பினர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீட மகாநாயக்க தேரர்கள் பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.
பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் அஸ்கிரிய , மல்வத்து பீட மகாநாயக்க தேரர்கள் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று கண்டியில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாக பதவி விலகியமை குறித்து மகா நாயக்க தேரர்களுக்கு விளக்கமளிக்கப்பட்ட போதே இவ்விடயம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளவர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாட்டில் பொது நீதி மற்றும் ஒரே கலாசாரம் என்பது அனைவருக்கும் பொதுவானது. எனவே இலங்கையில் இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் ஒற்றுமை பேணப்பட வேண்டும். இதற்கு முஸ்லிம் தலைவர்கள் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் எனவும் இதன்போது தேரர்கள் சுட்டிக்காட்டினர்.
Eelamurasu Australia Online News Portal