யாழ்ப்பாணம் பஸ்தரிப்பு நிலையம்; பரபரப்பான காலை நேரம்; கால்கள், பாடசாலைகளுக்கும் காரியாலயங்களுக்கும் வேகமாக நடை போட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு நடுவே, அன்றைய தினப் பத்திரிகையோடு முதியவர்கள் இருவர், கலகலப்பாக உரையாடிக் கொண்டிருக்கின்றனர்.
“மைத்திரி எங்களை ஏமாற்றி விட்டார். மைத்திரிக்கு வாக்களித்ததையிட்டு கவலை கொள்கின்றோம் – மாவை தெரிவிப்பு” எனப் பத்திரிகை ஒன்றில், குறிப்பிடப்பட்டிருந்த செய்தியை, இவர்களில் ஒருவர், இன்னொருவருக்கு வாசித்துக் காட்டிக்கொண்டிருந்தார்.
“அப்ப என்ன, ரணில் இவைய ஏமாத்த இல்லையாமே? உது என்ன, கதை விடுகினம், கண்டியோ”? மற்றவரின் பதில், குண்டு வெடித்தது போல வெடித்தது. “இவங்கள் எல்லோருமாச் சேந்து, எங்களை ஏமாத்துறாங்கள் போல” இவ்வாறாக அந்த உரையாடல் தொடர்கின்றது.
இதுபோன்ற மன ஓட்டத்துடனேயே, வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் இருந்து வருகின்றனர். ஒரு விதத்தில் சலிப்பு; இன்னொரு விதத்தில் தொடர் ஏமாற்றங்கள். அதற்கிடையே, இனி எல்லாமே முடிந்து விட்டன என்ற ஏக்கத்துடன், நாள்கள் நகருகின்றன; சந்தேகங்கள் வலுக்கின்றன; நம்பிக்கைகள் விலகுகின்றன.
கண்டியில் தேரர் இருந்த உண்ணாவிரதத்தை அடுத்து, தங்கள் இனத்துக்கு வரவிருந்த ஆபத்தை உணர்ந்த முஸ்லிம் அரசியல்த் தலைவர்கள், மூத்த அரசியல்வாதி பௌசியின் வீட்டில் மந்திராலோசனை நடத்தினார்கள். தங்களது பதவிகளைக் கூண்டோடு தூக்கி வீசினார்கள்.
இத்தகைய நகர்வு சரியா, பிழையா, வெற்றியளிக்குமா, தோல்வியைத் தழுவுமா என்பதற்கு அப்பால், ஒற்றுமையாக ஒரு காரியத்தைச் சாதித்துக் காட்டினார்கள். தங்கள் இனத்துக்கு ஆபத்து வரப்போகின்றது; அதற்கு முன்னர் அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, முஸ்லிம் தலைவர்கள் ஒன்றுபட்டனர்; செய்து காட்டினர்.
“1948ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட, சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கையில், முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவை, தற்போதுதான் உள்ளது” எனப் பிரதமர் தெரிவித்துள்ளார். ஆளுநர், அமைச்சுப் பதவிகளை, முஸ்லிம் உறுப்பினர்கள் தூசு எனத் தூக்கி எறிவார்கள் எனக் கணிசமான இலங்கையர்கள் எண்ணிப் பார்க்கவில்லை. இன்று மீண்டும் பதவிகளைப் பெறுமாறு தேரர்கள் கெஞ்சுமளவுக்கு நிலைமை வந்திருக்கின்றது.
ஆனால், தமிழ்த் தலைவர்களோ, பல இலட்சம் உயிர்களைப் பலி கொடுத்து, குருதி ஆற்றில் குளித்த பின்னரும், கன்னை பிரிந்து நின்றுகொண்டு, சின்னப் பிள்ளைத் தனமாக அடிபடுகின்றனர். தலைவர்களுக்கு இடையே முரண்பாடுகள் வலுத்து, உடன்பாடுகள் மெலிந்து, வெறுமையாகக் கிடக்கின்றனர்.
மரங்களை வெட்டும் ஒவ்வொருவரும், மழை வராமல் இருப்பதற்கு, அதாவது நீர் அற்ற கடும்வரட்சிக்குக் காரணமாக அமைகின்றனர். அதேபோல, பொறுப்புகளை உணர்ந்து, ஒன்றுபட முடியாத தமிழ்த் தலைவர்களே, தீர்வு வராமல் இருப்பதற்குக் காரணமாக அமைகின்றனர். பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பது என்பது, நம்மீது நாமே மேற்கொள்ளும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பதை, இவர்கள் உணர்வதில்லை.
எல்லாக் காரியங்களுக்கும் இரண்டுக்கும் மேற்பட்ட முகங்கள் உள்ளன. முஸ்லிம் அடிப்படைவாதிகள் சிலரால் உருவாக்கப்பட்ட (வலுவூட்டப்பட்ட) பயங்கரவாதத்தால், ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களும் ஓரங்கட்டப்பட்டனர்; வஞ்சிக்கப்பட்டனர். இன்று அதே விடயம்தான், நாட்டின் சராசரியாக வாழும் 22 இலட்சம் முஸ்லிம் மக்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்திருக்கின்றது.
இவை, இதுவரை காலமும் பேரினவாதக் கட்சிகளுக்கு, கணிசமான அளவில் வாக்களித்து வந்த முஸ்லிம் மக்களையும் மாற்றி யோசிக்க வைத்துள்ளது. எதிர்வரும் காலங்களில், நடைபெறவுள்ள தேர்தல்களில், நாங்கள் சிங்களப் பேரினவாதக் கட்சிகளுக்கு, ஏன் வாக்களிக்க வேண்டும் என, முஸ்லிம் மக்களைச் சற்றுச் சிந்திக்க வைத்துள்ளது. இது, முஸ்லிம் கட்சிகள் அதிகப்படியான வாக்குகளை அள்ளிக் குவிக்க வழி வகுத்து உள்ளது.
ஆகவே, இலங்கையில் ஏற்கெனவே நீறுபூத்து உள்ள இனரீதியான பார்வைகள் பிரகாசிக்கப் போகின்றன. இனரீதியான பிளவுகள், கூர்மை அடைகின்றன. இனரீதியான கட்சிகள் வலுவடையப் போகின்றன.“இனத்தைக் காக்க, இனவாதம் பேசுவது தப்பில்லை; சரியேதான்” என, மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் வெளிப்படையாகவே கருத்துத் தெரிவித்து உள்ளார்.
அரசியல் என்பது ஒரு சாக்கடைதான். ஆனாலும், அந்தச் சாக்கடைதான் எங்கள் தலைவிதியையும் தீர்மானிக்கின்றது. ஈழத் தமிழ் மக்களது தலைவிதி, கடந்த எழுபது ஆண்டு காலமாகத் தலைகீழாக உள்ளது. எமது தலைவிதி, தலைகீழாக உள்ளமைக்கு, எமது தலைவர்கள் தலைகீழாக நடந்து கொள்வதும் பிரதான காரணியாக உள்ளது.
இதுவரை காலப் படிப்பினைகளில் இருந்து, பேரினவாதம் ஒன்றையும் கற்றுக் கொள்ளவில்லையே என்பது கசப்பான படிப்பினையாக உள்ளது. இது மறுவளமாகத் தமிழ்த் தலைவர்களுக்கும் அச்சொட்டாகப் பொருந்துகின்றது.
ஆனால், கடந்த காலத்தைக் கற்க மறுக்கும், கற்பதற்கு அடம்பிடிக்கும் பேரினவாதம் சந்திக்கவிருக்கின்ற இழப்புகளோடு ஒப்பிடுகையில், தமிழர் தரப்பு சந்தித்த, சந்திக்கவிருக்கின்ற இழப்புகள் மிகப் பெரியது.
ஆனால், கடந்த காலத்து துன்பங்களால் ஏற்பட்ட கவலைகள், நிகழ்காலத்தையும் பாதிப்பதால், அது வருங்காலம் தொடர்பான நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் சிதைப்பதாக அமையும் என்பதை, அரசியல் செய்பவர்களில் எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளனர் என்பது கேள்விக்குரியதே.
வடக்கு, கிழக்கில் வாழும் பல இலட்சம் தமிழ் மக்களது வாழ்வு, வடக்கு, கிழக்கில் அரசியல் செய்யும் சில தமிழ்த் தலைவர்களது கைகளில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அதனைப் பிரகாசிக்கச் செய்வதும் இருளாக்குவதும் அவர்கள் கைகளிலேயே உள்ளது.
உலகில் மனித இனம், தனக்கான வெற்றியை அடைய அல்லது அடைந்த வெற்றியை நிலையாகத் தக்கவைத்திருக்க ஒரு நிகழ்ச்சி (மறைமுக) நிரலுடனேயே இயங்கி வரும்; இது இயல்பானதே.
அவ்வகையில், இன்று பிரதேச சபை உறுப்பினராக இருப்பவர் மாகாணசபை உறுப்பினராக வரவும், மாகாணசபை உறுப்பினராக இருப்பவர் (இருந்தவர்) நாடாளுமன்ற உறுப்பினராக வரவும், நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் அதனைக் கட்டிக் காக்கவும், கடும் பிரயத்தனங்களை எடுத்து வருகின்றனர்; அதையே அவர்களது வெற்றி இலக்காகவும் கொண்டுள்ளனர்.
அப்பா ஒருவரின் வெற்றி, அவருக்கு மட்டுமாக இருப்பதாக அமைய முடியாது. அப்படி அமைந்திருப்பின், அது முழுமையான வெற்றி அல்ல; மாறாக, அவ்வெற்றி முழுக் குடும்பத்துக்கான வெற்றியாக அமைய வேண்டும். இவ்வாறாக, வடக்கு, கிழக்கில் தமிழ் அரசியல்த் தலைவர்களது வெற்றி, அவர்களுக்கு மட்டுமே உரித்தான வெற்றியாகவே, இதுவரை காலமும் அமைந்து வருகின்றது.
தங்களது வெற்றியை, எப்போது எங்கள் தலைவர்கள், தமிழ் மக்களது வெற்றியாக மாற்றுகின்றார்களோ, அதுவே எம் தலைவிதியை அடியோடு மாற்றுவதற்கான புதிய திருப்பமாக, நிச்சயமாக அமையும்.
ஆகவே, கடந்த காலத்தில் கட்சிகள், தலைவர்கள் செய்த பிழையான காரியங்களை, இன்னும் எவ்வளவு காலத்துக்கு இரை மீட்கப் போகின்றோம்? அதனை வைத்து, இன்னும் எவ்வளவு காலத்துக்கு சேற்றை வாரி இறைக்கப் போகின்றோம்?
அன்று, தமிழ் மக்கள் விடயத்தில் பிழையாக நடந்து கொண்ட தமிழ்த் தலைவர்கள், இன்று சரியாக மாறியிருக்கலாம். அன்று, சரியாக நடந்து கொண்டவர்கள், இன்று பிழையாக மாறியிருக்கலாம்.
அன்று, பிறந்த எம்மவர்கள் அடிமையாக வாழ்கின்றனர்; இன்று பிறக்கும் எம்மவர்களும் அடிமையாக வாழ்கின்றனர். நாளை பிறக்கப் போகும் குழந்தையும் எங்கள் மண்ணில் அடிமையாகவே வாழ வேண்டுமா என்பதைத் தீர்மானியுங்கள்.
அன்று ஆயுத முனையில் பலமாக இருந்த போது, வெளிநாட்டில் வைத்து, “உள்ளக சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசலாம்” எனக் கூறியவர்கள், இன்று கொழும்பில் வைத்து, “எங்கள் நாட்டில், உங்களுக்கு என்ன குறை” எனக் கேட்கின்றார்கள்.
ஆகவே, மீண்டும் மீண்டும் தெரிவிப்பது, ஒற்றுமை ஒன்று மட்டுமே எமக்கான விடிவுக்கான முதற்படி. தமிழ்த் தலைவர்கள் தங்களுக்குள் முட்டி மோதுவதை விடுத்து, ஓரணியில், உண்மையாகவே திரண்டு விட்டார்கள் என்ற செய்திவரின், அதுவே தமிழ் மக்களுக்குப் பாதி மகிழ்ச்சியைக் கொண்டு வரும்.
ஆகவே, தமிழ்த் தலைவர்கள், முதலாவதாகப் பொது வெளியில், மற்றையவரைக் குறை கூறுவதைத் தயவு கூர்ந்து இன்று முதல் தவிருங்கள். இதனை ஒட்டுமொத்தத் தமிழர்கள் சார்பில் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றோம்.
அடுத்தவரைக் குறை கூறி, நாம் கண்டது என்ன, காணப்போவது என்ன? அதற்கு முன்னர் உங்கள் கறைகளை அகற்றுங்கள். எங்களுக்கான கரை (விடிவு) தெரியும்.
தமிழ்த் தலைவர்களே, தமிழர்களது விடிவுக்காக ஒரு முனையில் திரளுங்கள். அப்படி இல்லையாயின், வருங்காலங்களில் தமிழ் மக்கள், உங்களை ஒரு மூலைக்குள் தள்ளி விடுவார்கள்.
ஆகவே, பகை மறந்து, மனம் திறந்து, தனது வீட்டில் தமிழ்த் தலைவர்கள் எல்லோரையும் சந்தித்து, அரசியல் பேச சம்பந்தன் தயாரா? ஏனைய தலைவர்களும் தயாரா?
காரை துர்க்கா