கபாலி படத்துக்கு பாடல் எழுதியதால் அதிக வாய்ப்புகள் வருவதாக கவிஞர் உமாதேவி மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
ரஜினியின் ‘கபாலி’ படத்தில் ‘மாயநதி’, ‘வீர துறந்தரா’ பாடல்களை எழுதியவர் கவிஞர் உமாதேவி. எம்.பில், பி.எச்.டி. பட்டம் பெற்ற இவர் கல்லூரி உதவி பேராசிரியர். ‘கபாலி’க்கு பாடல் எழுதியது பற்றி அவரிடம் கேட்ட போது.
பா.ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படத்துக்கு ஒரு பாடல் எழுதினேன். ‘கபாலி’ படத்துக்கும் ரஞ்சித் சார், என்னை அழைத்து ஒரு பாடல் இருக்கு, எழுதுங்கன்னு சொன்னார். முதல் பாடலாக “மாயநதி” பாடல் எழுதினேன். அந்த பாடலுக்கான சூழல் எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது.
நீண்ட பிரிவுக்குப்பின் சந்திக்கும் இளமை தாண்டிய கணவன், மனைவியின் காதல் மனநிலை என்ற கதைச்சூழல் என்றதும், எனக்கு பெருமகிழ்ச்சியாக இருந்தது. சந்தோஷ் நாராயணன் சார் மெட்டும் அந்த உணர்வுக்கு மிக சரியாக இருந்தது.
சவுந்தர்யா மேடம் ‘வீரதுறந்தரா’ பாட்டு, ரொம்ப சூப்பரா இருக்கு., ஆல்பத்துல என்னோட பேவரைட்னு வாட்ஸ்அப் பண்ணினதை ரஞ்சித் சார் பார்வர்டு பண்ணாங்க. சவுந்தர்யா, தாணு, ரஜினி ஆகியோருக்கு நன்றி.
சமகால சினிமாவிற்கும் வாழ்க்கைக்கும் வாழ்வியலுக்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது. ரஞ்சித் சார் படங்களில் எப்போதுமே அது இருக்கும். ‘கபாலி’ திரைப்படம், உலகளாவிய வெளியீடு தாண்டி, பெரிய அளவில் விவாதங்களை எழுப்பியது. ‘கபாலி’ படத்துக்கு பாடல் எழுதியது பெருமை. ரஜினி சார்-ரஞ்சித் சார் கூட்டணி மீண்டும் இணைவது மகிழ்ச்சி.
‘மெட்ராஸ்’ படத்திற்கு பின், ‘இனிமே இப்படித்தான்’, ‘மாயா’, ‘ஆத்யன்’ படங்களில் பாடல்கள் எழுதினேன். இப்போது ‘கபாலி’க்கு பின் நிறைய வாய்ப்புகள் வந்துள்ளன. ‘ரங்கூன்’, ‘துக்ளக்’, ‘தப்பு தண்டா’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘நாகேஷ் திரையரங்கம்’, ‘அடங்காதே’, ‘மாயவன்’ உள்பட பல படங்களில் எழுதிக்கொண்டிருக்கிறேன்” என்றார்.