வில்பத்து, வியாட்டுகுளம் பகுதியில் கடற்படை முகாம் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படும் செய்தி தொடர்பில் தெளிவான தகவலை வழங்குமாறும், நாட்டுக்குள் அசாதாரண நிலைமைகள் தோன்றக் கூடியதான கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் எனவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.
பலரின் வேண்டுகோளுக்கு இணங்க கடற்படையின் முகாம் ஒன்று வில்பத்து பகுதியில் நீக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் தகவல் தவறானது. இப்பகுதியில் காணப்பட்டது கடற்படையின் முகாம் அல்ல. இது கடற்படையின் நலன்புரி சேவைகளுக்காக பயன்படுத்திய 26 ஏக்கர் நிலப்பரப்பாகும். இந்த நிலத்தில் தேசிய உணவு உற்பத்தி மற்றும் நஞ்சுத்தன்மையற்ற உணவு பொருட்களை உற்பத்தி செய்தல் போன்ற நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொள்ளவே பயன்படுத்தினர்.
இப் பிரதேசங்களின் பாதுகாப்பிற்காக சிலாவத்துறை மற்றும் முள்ளகிக்குளம் பகுதிகளில் இரு முகாம்கள் காணப்படுகின்றன. இந்த முகாம்களினூடாக பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த முகாம்கள் ஒருபோதும் நீக்கப்பட மாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.