தீவிரவாதத்தை இல்லாதொழிக்க சட்டங்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்!

சர்வதேச தீவிரவாதத்தை முழுமையா துடைத்தெறிய வேண்டுமாயின் சட்டங்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் எனத் தெரிவித்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அரசியல் காரணிகளை மைய்யப்படுத்தி ஒரு போதும் அடிப்படைவாத தீவிரவாதத்தை இல்லாதொழிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

பௌத்த பிக்குமார்களை ஒன்றுப்படுத்தி இன்று கொழும்பில் ‘ஜாதிக மக’ என்ற தொனிப்பொருளில் தீவிரவாத  தாக்குதல் தொடர்பில் தெளிவுப்படுத்தல் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

ஈஸ்டர் குண்டு தாக்குதலை நடத்திய சஹ்ரான் உள்ளிட்ட குழுவினர் அழிவடைந்திருந்தாலும் இன்றும் இவர்களின் நோக்கம் மக்களோடு மக்களாக பரவியுள்ளது. தேசிய நல்லிணக்கத்தை விரும்பும் சாதாரண முஸ்லிம் மக்களுடன் ஊடுறுவியிருக்கும் அடிப்படைவாதிகள் விரைவில் அடையாளப்படுத்தப்படுவார்கள். இஸ்லாம் மார்க்கத்திற்கு அப்பாற் சென்று மனிதாபிமானத்திற்கு எதிராக செயற்படும் அடிப்படைவாதிகள் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆபத்தானவர்கள்.

இன்று பாராளுமன்றத்தில் அடிப்படைவாதத்தை இல்லாதொழிப்பதற்கு உரிய விஷேட திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. மத்ரஸா கற்கை நிலையம் , வெளிநாட்டு மத போதகர்களின் வருகை , உள்நாட்டு தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டிலிருந்து கிடைக்கப் பெறும் நிதி , தேசிய கலாசாரத்திற்கும் , தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் விடும் ஆடைகள் தொடர்பில் புதிய சட்டங்களை அமுல்படுத்துவதற்கு கூடிய கவனம் செலுத்தப்படுகின்றது.

இஸ்லாமிய அடிப்படைவாதம் இந்த அரசாங்கத்திலேயே வலுப்பெற்றது என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முதலில் அனைவரும் அரசியல் இலாபங்களை துறக்க வேண்டும். ஜனாதிபதி , பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோர் ஒன்றிணைந்து புதிய சட்டங்களை வகுத்து சர்வதேச தீவிரவாதத்தை வெற்றி கொள்ள வேண்டும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.