இன்னொரு புறம் சூர்யாவுக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கு, கட்சி தலைவருக்கு பொறாமையை ஏற்படுத்துகிறது. முதல்-அமைச்சரின் பகையையும் சம்பாதிக்கிறார். அவர் உயிருக்கும் குறி வைக்கிறார்கள். அதில் இருந்து சூர்யா தப்பினாரா? அரசியலில் சாதித்தாரா? என்பது மீதி கதை.
செல்வராகவன் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு எதிர்பார்ப்போடு வந்துள்ள படம். கட்சி தொண்டர்களை தலைவர்கள் இழிவுபடுத்தும் கொடுமை, ஊழல் அரசியல்வாதிகளின் சதுரங்க விளையாட்டு, சேவை செய்ய துடிக்கும் இளைஞர்கள் சந்திக்கும் தடைகள் என்று அரசியல் படத்துக்கான கதைக்களத்தை வலுவாகவே அமைத்துள்ளார். அதில் சூர்யாவின் நடிப்பு, கூடுதல் அம்சம். பொதுமக்களுக்கு உதவும் சேவகராக, அரசியல்வாதி வீட்டு கழிப்பறையை சுத்தம் செய்யும் வேலைக்காரராக, கார்பரேட் அளவுக்கு யோசிக்கும் புத்திசாலியாக, நம்பிக்கை தகர்ந்து தவிக்கும் இளைஞனாக- உணர்வுகளோடு வாழ்ந்து மொத்த கதையையும் சுமக்கிறார். அடிதடியிலும் பொறி கிளப்புகிறார்.
கிளைமாக்சில் பேசும் ஆவேச வசனங்கள் சிந்திக்க வைக்கின்றன. மனைவியாக வரும் சாய்பல்லவி முதல் பாதியில் அமைதியான நடிப்பால் ‘ஸ்கோர்’ பண்ணுகிறார். கணவரை சந்தேகிக்கும் காட்சிகள் கதைக்கு ஒட்டாமல் நிற்கிறது. ரகுல்பிரீத் சிங்கின் கம்பீரமும், அரசியல்வாதிகளை மிரட்டும் தொனியும் கவர்கின்றன. அதன்பிறகு காதல், நடனம் என்று அந்த கதாபாத்திரம் வலுவிழக்கிறது.
இளவரசு, பொன்வண்ணன், தேவராஜ் ஆகியோர் வில்லத்தனமான அரசியல்வாதிகளாக மிரட்டுகின்றனர். தாய், தந்தையாக வரும் நிழல்கள் ரவி, உமா பத்மநாபன், சூர்யாவுக்கு அரசியல் ஆலோசனைகள் வழங்கும் பாலாசிங் கதாபாத்திரங்களும், நிறைவு. ‘தலைவாசல்’ விஜய், வேல ராமமூர்த்தி இருவரும் வந்து போகிறார்கள்.
அடுத்தது என்ன? என்ற விறுவிறுப்பான எதிர்பார்ப்புடன் காட்சிகளை நகர்த்தி இருக்கிறார், டைரக்டர் செல்வராகவன். அரசியல் உலக ஆபத்துகளை சித்தரித்ததிலும், தனித்து தெரிகிறார். வலுவான கதாபாத்திரங்களைப்போல் திரைக்கதையையும் கட்டமைத்து இருந்தால், படம் பேசப்பட்டு இருக்கும். சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு, காட்சிகளை மிரட்டலாக பதிவு செய்திருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை, கதைக்கு பெரிய பலமாக அமைந்து இருக்கிறது.