அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு அச்சுறுத்தல்?

அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய கல்வித்திணைக்களத்திடம் கல்வி அமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களை இலக்கு வைத்து பல குற்றச்செயல்கள் இடம்பெறுவதாக அண்மையில் வெளிவந்த தகவல்களை அடுத்து இந்தக்கோரிக்கை அமைச்சு மட்டத்திலிருந்து எழுந்திருக்கிறது.

குறிப்பாக மெல்பேர்ன் Monash பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களை இலக்கு வைத்து கடந்த மூன்று வாரங்களில் 12 ற்கும் மேற்பட்ட திருட்டுச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் இந்தவாரம் அவுஸ்திரேலிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளதைத்தொடர்ந்து மேற்படி விவகாரம் உயர்மட்டத்தில் பேசப்பட்டிருக்கிறது.

Monash பல்கலைக்கழகத்தை அண்டிய பிரசேங்களில் கடந்த 18 நாட்களில் 13 கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதை பொலிஸாரும் உறுதி செய்துள்ளார்கள்.

இது தொடர்பாக கல்வி அமைச்சர் Dan Tehan கூறும்போது, அவுஸ்திரேலிய பொருளாதாரத்தில் சுமார் 34 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டித்தருகின்ற வெளிநாட்டு மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வது அரசாங்கத்தினதும் அரச திணைக்களங்களினதும் கடமை என்று குறிப்பிட்டுள்ளார்.