அவுஸ்திரேலிய காவல் துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தாய்லந்திலிருந்து கடத்தி வரப்பட்ட 840 மில்லியன் டொலர் மதிப்புள்ள ‘Ice’ போதைப்பொருள் அவுஸ்திரேலியாவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அந்தப் போதைப்பொருள் ஒலிபெருக்கிகளுக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

மெல்பர்ன் துறைமுகத்துக்குள் கடத்தப்பட்ட அந்த ஒலிபெருக்கிகளில் 1.6 டன் ‘மெத்’தும் (meth) 37 கிலோகிராம் போதைமிகு அபினும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவுஸ்திரேலியாவில் பறிமுதல் செய்யப்பட்ட ஆக அதிக அளவு ‘மெத்’ இதுதான் என்று எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.

X-ray எனப்படும் ஊடுகதிர்ச் சோதனையின்போது, வழக்கத்துக்கு மாறாக ஏதோ இருப்பதைப் பார்த்த அதிகாரிகள், ஒலிபெருக்கியைத் திறந்து பார்த்தபோது அதற்குள் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது.

சம்பவத்தின் தொடர்பில் இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை. அந்தக் கடத்தலில் தொடர்புடையவர்கள் யார் என்பது பற்றித் தெரிந்தால் தகவல் தர முன்வருமாறு, காவல் துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.