ஈஸ்டர் ஞாயிறு தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக அவுஸ்திரேலியா 20 புலனாய்வு நிபுணர்களை சிறிலங்காவிற்கு அனுப்பியிருப்பதாக, அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் பீற்றர் டட்டன் தெரிவித்தார்.
சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த அவர், செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போதே இந்த தகவலை வெளியிட்டார்.
”தீவிரவாத தாக்குதல்கள் குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ள ஸ்ரீலங்கா புலனாய்வுக் குழுக்களுக்கு உதவுவதற்காக அவுஸ்திரேலியா 20இற்கும் அதிகமான புலனாய்வு அதிகாரிகளைக்கொண்ட குழுவொன்றை இங்கு அனுப்பியுள்ளது.
அவர்கள் இப்போதும், இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக தடயவியல் பக்கத்தில் அவுஸ்திரேலிய அதிகாரிகள் உதவி வருகின்றனர்.
மிகவிரைவாக இலங்கை அரசாங்கத்துக்கு இந்த உதவியை வழங்கினோம். அவுஸ்திரேலிய காவல்துறையின் ஊடாக, கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகம் இதற்கான பணிகளை ஒருங்கிணைக்கிறது.
இரண்டு நாடுகளுக்குமிடையில் புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal