பார்வையற்ற தமிழ் அகதியை ஓன்பது வருடங்களாக தடுத்துவைத்துள்ளது அவுஸ்திரேலியா!

பார்வையற்ற மனோநிலை பாதிக்கப்பட்ட தமிழ் அகதியொருவரை ஒன்பது வருடங்களாக  அவுஸ்திரேலியா தடுத்து வைத்திருப்பதற்கு தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள  ஐநா குறிப்பிட்ட தமிழ் அகதியை உடனடியாக விடுதலை  செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கியநாடுகளின் குழுவொன்று இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

ஒரு தசாப்தகாலமாக சிறையில் வாடும்  கண்பார்வையற்ற மனோநிலை பாதிக்கப்பட்ட தமிழ் அகதியை அவுஸ்திரேலியா உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என ஐநா தெரிவித்துள்ளது.

ஒன்பது வருடங்களாக நபர் ஒருவரை தடுத்து வைத்திருப்பதன் மூலம் அவுஸ்திரேலியா  சர்வதேச சட்டங்களை மீறியுள்ளது என ஐநா தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட தமிழ் அகதியை  உடனடியாக விடுதலை செய்து அவரிற்கு இழப்பீடு உட்பட அனைத்து கொடுப்பனவுகளையும் அவுஸ்திரேலியா வழங்கவேண்டும் எனவும் ஐநா கேட்டுக்கொண்டுள்ளது.

குமார் என அழைக்கப்படும் இந்த நபர் 2010 இல் 27 வயதில்  படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச்சென்றவர் என ஐநா தெரிவித்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது சித்திரவதைகள் உட்பட மனித உரிமை மீறல்களிற்கு ஆளானதால் குமார் அவுஸ்திரேலியா சென்றார் எனவும் ஐநா தெரிவித்துள்ளது.

2010 டிசம்பரில் அவர் அகதி என அவுஸ்திரேலியா தீர்மானித்தது ஆனால் கடந்த பத்து வருடங்களாக அவர் சிறையில் வாழ்கின்றார் சமீபத்தில் அவர் விலாவூட் தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளார்  என ஐநா தெரிவித்துள்ளது.

 

கண்பார்வையற்ற மூளையில் காயங்கள் உள்ள மனோநிலை பிரச்சினையுள்ள நபர் ஒருவரை தடுத்துவைப்பது ஜனநாயக நாடொன்றை பொறுத்தவரை ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என குமாரின் சட்டத்தரணி அலைசன் பட்டிசன் தெரிவித்துள்ளார்.

குமார் கண்பார்வையற்றவர் என்பதாலும் மூளையில் காயங்கள் உள்ளவர் என்பதாலும் அவரால் பாதுகாப்பு கரிசனைகள் காணப்படுகின்றன என தெரிவிப்பதை ஏற்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பான அனைத்து விபரங்களையும் ஆராய்ந்த பின்னர் குமாரை விடுதலை செய்வதே பொருத்தமான முடிவாகயிருக்கமுடியும் என கருதுவதாக ஐநாவின் குழு தெரிவித்துள்ளது.