அரசியலுக்கும் குற்றச்செயல்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து நாமெல்லோரும் நீண்டகாலமாகவே பேசிவந்திருக்கின்றோம். இலங்கை அண்மைய சில தசாப்தங்களாக எதிர்நோக்கிவருகின்ற எரியும் பிரச்சினைகளில் இது முக்கியமான ஒன்று. ஆனால், அரசியலில் இருந்து குற்றச்செயல்களையோ அல்லது குற்றச்செயல்களில் இருந்து அரசியலையோ விடுவிக்க எம்மால் எதையும் செய்யமுடியவில்லை. தொடர்ந்து அதைப்பற்றி கவலையுடன் பேசிக்கொண்டிருக்க மாத்திரமே எம்மால் முடிகிறது.
குறிப்பாக, எமது பிராந்திய நாடுகளில் தேர்தல்கள் நடைபெற்று முடியும்போதெல்லாம் ‘ மக்கள் பிரதிநிதிகள் ‘ என்று தெரிவுசெய்யப்படுகின்றவர்களின் பின்னணி பற்றி பேசுவது வழக்கமாகும். பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டிருப்பவர்களில் எத்தனை பேர் மக்கள் பிரதிநிதிகள் என்ற ‘ அந்தஸ்துக்கு ‘ தகுதியானவர்கள் என்று மதிப்பீட்டையும் செய்வதற்கும் நாம் தவறுவதில்லை. அதிலும், அவர்களில் எத்தனை பேர் குற்றச்செயல் பின்னணிகளைக்கொண்டவர்கள் என்பது குறித்து ஊடகங்களும் சிவில் சமூக அமைப்புகளும் விபரங்களை கிரமமாக வெளியிடுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
அண்மையில் முடிவடைந்த இந்திய பாராளுமன்றத்தின் லோக்சபா தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் மத்தியில் குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டு நீதிமன்றங்களில் வழக்குகளை எதிர்நோக்கிக்கொண்டிருப்பவர்கள் பற்றிய விபரங்களை இந்திய ஊடகங்களில் பார்க்கக்கிடைத்த காரணத்தினாலேயே அரசியலுக்கும் குற்றச்செயல்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து ( இப்போது தொடர்பு என்பதை விட பிணைப்பு என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும் ) எழுதும் எண்ணம் தோன்றியது.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கும் தேசிய தேர்தல் கண்காணிப்புக்குமான சங்கம் ( Association for Democratic Reforms and National Election Watch) என்ற இந்திய சிவில் சமூக அமைப்பினால் கடந்தவாரம் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றின் பிரகாரம் தற்போது லோக்சபாவுக்கு தெரிவுசெய்யப்பட்டிருக்கும் 539 புதிய எம்.பி.க்களில் 233 பேருக்கு எதிராக கிறிமினல் குற்றச்சாட்டுகளின் பேரில் நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரணையில் இருக்கின்றன. வேட்பாளர்களினால் தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட சத்தியக்கடதாசிகளின் அடிப்படையலேயே இந்த கணிப்பீடு செய்யப்பட்டது. அதாவது எம்.பி.க்களில் சுமார் 45 சதவீதமானவர்கள் கிறிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களில் 30 சதவீதமானவர்கள் பாலியல் வல்லுறவுக்குட்பட பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள், கொலைகள் மற்றும் ஆட்கடத்தல் போன்ற மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர்களாவர். ஒரு எம்.பி. பயங்கரவாதச் செயலுக்காக நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்நோக்குகிறார். 10 எம்.பி.க்கள் நீதிமன்றங்களினால் குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்கள்.
2009 பொதுத்தேர்தலில் லோக்சபாவிற்கு தெரிவுசெய்யப்பட்டவர்களில் 162 எம்.பி.களுக்கு (30 சதவீதம் ) எதிராக கிறிமினல் வழக்குகள் இருந்தன. 2014 பொதுத்தேர்தலில் லோக்சபா தெரிவானவர்களில் 185 எம்பி.க்களுக்கு(34 சதவீதம் ) எதிராக கிறிமினல் வழக்குகள் இருந்தன. எதிர்காலத்தில் எம்.பி.க்களாக வரப்போகிறவர்களில் பெரும்பான்மையானவர்கள் கிறிமினல் வழக்குகளை எதிர்நோக்குகின்ற பேர்வழிகளாக இருப்பார்கள் என்பதையே இந்த சதவீத அதிகரிப்பு உணர்த்துகிறது. இந்திய சனத்தொகையில் ஐந்து சதவீதத்தினர் கூட அத்தகைய குற்றச்செயல்களுக்காக வழக்குகளை எதிர்நோக்கியிருக்கவில்லையாம்.
பழிபாவத்துக்கு அஞ்சாமல் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்ற கும்பல்கள் அரசியலுக்கு கவரப்பட்டு ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் அ்ல்லது அரசியல்வாதிகள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதில் நாட்ம்காட்டுகிறார்கள் என்பதையே இது காண்பிக்கிறது. இரு அனுமானங்களுமே சரியானவை என்றுதான் கூறவேண்டியிருக்கிறது.அரசியலும் ஆட்சிமுறையும் குற்றச்செயல்மயப்பட்டு ஜனநாயகச் செயன்முறைகள் இழிவுசெய்யப்படுவதே விளைவாக இருக்கிறது.
அரசியலிலும் ஆட்சிமுறையிலும் கிறிமினல்களின் கையோங்கும்போது ஜனநாயகம் மலினப்படுத்தப்பட்டு அதன் நிறுவனங்கள் பயனற்றவையாகிப் போகின்றன.இதை இலங்கையர்களாகிய நாம் பல வருடங்களாக அனுபவித்துவருகின்றோம். நீதிமன்றங்களினால் குற்றவாளிகள் என்று தீர்மானிக்கப்படும்வரை தங்களைக் கிறிமினல்கள் என்று கருதமுடியாது என்று குற்றச்செயல்களில் ஈடுபடுவதில் கைதேர்ந்தவர்களான அரசியல்வாதிகள் எந்தவிதமான கூச்சமும் இல்லாமல் கூறிவிடுகிறார்கள்.சில புறநடைகள் தவிர, அவர்களுக்கு எதிரான வழக்குவிசாரணைகள் பல வருடங்களாக, பல தசாப்தங்களாக இழுத்தடிக்கப்படுவதே வழக்கமாகிப்போய்விட்டது.அந்த இடைப்பட்ட காலத்தில் பல்வேறு சூழ்ச்சித்தனமான வேலைகளின் ஊடாக அரசியல்வாதிகள் தங்களுக்கு எதிரான வழக்குகளில் இருந்து விடுபட்டுவிடுகிறார்கள்.
தேர்தல்களில் இருந்து கிறிமினல்களை விலக்கிவைப்பதில் முதல் பொறுப்பு அரசியல் கட்சிகளுக்கும் அவற்றின் தலைவர்களுக்குமே உரியது. ஆனால், அவர்கள் அவ்வாறு செய்வார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது.ஏனென்றால், கட்சிகளும் தலைவர்களும் கூட கிறிமினல்களின் செல்வாக்கின் கீழ் இருக்கிறார்கள் அல்லது அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். அரசியல் கட்சிகள் தேர்தல்களில் வேட்பாளர்களாக கிறிமினல்களை நிறுத்துவதற்கும் விரும்புகின்றன.ஏனென்றால், சட்டவிரோதமான வழிவகைகளின் ஊடாக பெருமளவு சொத்துக்களைக் குவித்துவைத்திருக்கும் கிறிமினல்கள் அவர்களுக்கு இருக்கின்ற பணபலம் மற்றும் அடியாட்கள் பலம் காரணமாக தேர்தல்களில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பை பெருமளவிற்கு கொண்டிருக்கிறார்கள். அரசியல் கட்சிகளுக்கு கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டிக்கொடுக்கக்கூடியவர்களாகவும் கிறிமினல்கள் விளங்குகிறார்கள்.
இத்தடவை லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் கிறிமினல் பின்னணி கொண்டவர்கள் வெற்றிபெறுவதற்கு இருந்த வாய்ப்பு 15.5 சதவீதமாகவும் அத்தகைய பின்னணியைக்கொண்டிராத — ஒழுங்கான வேட்பாளர்களின் வெற்றிவாய்ப்பு 4.7 சதவீதமாகவும் இருந்ததாகவும் நாம் முன்னர் குறிப்பிட்ட இந்திய சிவில் சமூக அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது விடயத்தில் தவறு அரசல் கட்சிகளில் மாத்திரமல்ல, மக்களிலும் தான் இருக்கிறது. கிறிமினல் பின்னணி கொண்டவர்கள் தொடர்ச்சியாக பல தடவைகள் மக்களினால் தெரிவுசெய்யப்பட்டுக்கொண்டிருப்பதை வேறு எவ்வாறு அர்த்தப்படுத்துவது?