அரசியல் செயற்பாடுகளைத் தீர்மானிக்கும் சக்தியாகப் பேரினவாதம்!

பேரினவாதம் என்பது ஏனைய சிறுபான்மை இனத்தவர்களை அடக்கியொடுக்குவதற்கான சக்தியாக இருந்துவந்துள்ள அதேவேளை, அதனை சில அரசியல்வாதிகள் தமது தனிப்பட்ட நலன்களுக்காகப் பயன்படுத்தி வந்தார்கள். தற்போது நாட்டின் அரசியல் செயற்பாடுகளைத் தீர்மானிக்கும் சக்தியாகப் பேரினவாதம் மாறியிருக்கிறது என்று அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்.

இதுவிடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது :

தற்போது நாட்டின் அரசியல் செயற்பாடுகளைத் தீர்மானிக்கும் சக்தியாகப் பேரினவாதம் மாறியிருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து அரசாங்கங்களை மாற்றியமைப்பதிலும், தீர்மானம் மேற்கொள்வதிலும் இந்தப் பேரினவாதத்தின் ஆதிக்கம் எப்போதும் இருந்துவந்திருக்கிறது. ஆனால் பேரினவாதத்தை உருவாக்கியவர்கள் அரசியல்வாதிகள் தான் என்பதை மறுப்பதற்கில்லை.

பேரினவாதம் என்பது ஏனைய சிறுபான்மை இனத்தவர்களை அடக்கியொடுக்குவதற்கான சக்தியாக இருந்துவந்துள்ள அதேவேளை,அதனை சில அரசியல்வாதிகள் தமது தனிப்பட்ட நலன்களுக்காகப் பயன்படுத்தி வந்தார்கள். அதன் விளைவே இன்று பேரினவாத பௌத்த மதகுருமார் தன்னிச்சையாக செயற்படும் நிலையை உருவாக்கியிருக்கிறது.

எந்தவொரு மதகுருமாரும் அன்பையும், நல்லிணக்கத்தையும் போதிப்பவர்களாகவே இருப்பார்கள்.அவ்வாறு தான் இருக்க வேண்டும்.ஆனால் இந்த நாடு சிங்களவர்களுக்குச் சொந்தமானது என்று கூறுவோர் மதகுருமார் என்ற நிலையிலிருந்து கட்சி அரசியல்வாதிகளாக மாறிவிட்டார்கள் என்றே கருதவேண்டிள்ளது.

அத்துரலியே ரத்ன தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்த போது அவ்விடத்திற்கு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை சென்றமை குறித்து அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருக்கும் கருத்தை நானும் ஏற்றுக்கொள்கின்றேன்.

காணாமல்போனோர் விவகாரம்,காணிவிடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்காக வடக்கில் நாங்கள் போராடிய போது வருகைதராதவர்கள் தேரரின் உண்ணாவிரதப்போராட்ட இடத்திற்குச் செல்வதென்பது அவரது இனவாத செயற்பாட்டிற்கு ஆதரவு வழங்கும் தன்மையையே வெளிப்படுத்துகிறது.