நான்கு தசாப்தங்கள் கழிந்துவிட்டன. சரியாகச் சொல்வதானால் யாழ்.நூலகம் எரித்தழிக்கப்பட்டு, 38 ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழர்களின் கலாசார தலைநகராகிய யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் கொழுந்துவிட்டு எரிந்த தீச்சுவாலையில் கலாசார, கல்வி, பண்பாட்டு ரீதியான இன அழிப்பு நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டிருந்தது. அந்த வன்முறையின் பாதிப்பு நீறுபூத்த நெருப்பாக தமிழ் மக்கள் மனங்களில் இன் னும் கனன்று கொண்டிருக்கின்றது.
மாவட்ட சபைகளுக்கான தேர்தல் நடைபெற்ற தருணம் அது. அந்தத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி முழுமையாக வெற்றி பெறுவதை எப்படியாவது தடுத்து, குறைந்தது ஒரு ஆசனத்தையாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற வக்கிர அரசியல் தீர்மானத்தோடு மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையின் விளைவாக அந்த அனர்த்தம் அரங்கேற்றப்பட்டிருந்தது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் பின் னால், தமிழ் மக்கள் ஏகோபித்த நிலையில் அணி திரண்டிருந்த இறுக்கமானதோர் அரசியல் சூழல் அது. அந்தச் சூழல் மிகவும் இறுக்கமானது. அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற அரசியல் அபிலாஷை அப்போது மக்கள் மனங்களில் கனன்று கொண்டிருந்தது. தமிழ் மக்கள் மீது ஒடுக்குமுறைகளையும் அடக்குமுறைகளையும் ஏவி விட்டிருந்த அரசும் பேரின அரசியல்வாதிகளும், தமிழ் மக்களின் இந்த அரசியல் நிலைப்பாட்டை எந்த வகையிலேனும் அடித்து நொறுக்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டியிருந்தார்கள்.
சமாதான பேச்சுவார்த்தைகள், இணக்க அணுகுமுறைகள் என்பன தோற்றுப் போயி ருந்த நிலையில் தனிநாட்டுத் தீர்மானத் தைத்தவிர வேறு வழியில்லை என்ற நிலை மைக்குத் தமிழ் மக்கள் தள்ளப்பட்டிருந்தார்கள். இதனால் 1973 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டில் தனிநாட்டுக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு, அதற்காகப் போராடுவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
தனிநாட்டுக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்த போதிலும், அன்றைய ஜனாதிபதிக்கும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது, அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்காக மாவ ட்ட சபைகளை உருவாக்குவது என்றும், இனப்பிரச்சினைக்குப் படிப்படியாகத் தீர்வு காணும் வழிமுறையைக் கையாள்வது என்றும் உடன்பாடு எட்டப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்ட சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழர் விடுதலைக்கூட்டணி இணங்கி முன்வந்திருந்தது.
தமிழர் விடுதலைக் கூட்டணி தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து 1977 ஆம் ஆண்டு தேர்தலில் அமோக வெற்றியீட்டியிருந்தது. இந்த வெற்றியை பேரின அரசியல்வாதிகளினால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதேபோன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தனிநாட்டுக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவும் அவர்கள் தயாராக இருக்கவில்லை.
மறுபக்கத்தில், தனிநாட்டுக் கோரிக்கை க்கு முரணான வகையில் மாவட்ட சபை ஆட்சிமுறையை ஏற்றுக்கொண்டு அதற்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்திருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் முடிவை தமிழ் இளைஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. முக்கிய அரசியல் தலைவர்களும் கூட அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்துத் தீர்மானம் நிறைவேற்றியிருந்த போதிலும் அந்த இலக்கை அடைவதற்கான வழித்தடங்கள் பற்றியோ அல்லது அதற்கான வியூ கம் குறித்தோ தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் தீர்மானங்களைக் கொண்டிருக்கவில்லை.
ஆனால் கல்வியில் தமிழ் மாணவர்களுக்கு எதிராகத் தரப்படுத்தல் முறையை நடைமுறைப்படுத்தியிருந்த அரசாங்கத்தின் மீது அளவற்ற வெறுப்பையும் கசப்புணர்வையும் கொண்டிருந்த தமிழ் இளைஞர்கள் தனிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்து, அந்த இலக்கை அடைவதற்காக ஆயுதப் போராட்ட வழிமுறையை மிகவும் இரகசியமாக மேற்கொண்டிருந்தனர். இதனால் ஆங்காங்கே அரச ஆதரவாளர்களான தமிழ்ப் பிரமுகர்களுக்கு எதிராகவும் பொலிஸார் மற்றும் ஆயுதப்படையினருக்கு எதிராகவும் அவ்வப்போது தாக்குதல்கள் இடம்பெற்று வந்தன.
அந்த சந்தர்ப்பத்திலேயே தமிழ் ஆயுதப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வாக நடந்தேறிய நீர்வேலி வங்கிக்கொள்ளையும் இடம்பெற்றிருந்தது. இந்த ஆயுத வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தினரையும் ஆயுதந் தாங்கிய பொலிஸாரையும் அரசாங்கம் தீவிரமாகக் களத்தில் இறக்கி எதிர் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருந் தது. இந்தப் பின்னணியிலேயே 1978 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டு, தமிழ் மக்களுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.
அதேவேளை, 1956 ஆம் ஆண்டிற்குப் பின்னர் வடமாகாணத்தில் ஐக்கிய தேசிய கட்சி தனது செல்வாக்கை இழந்திருந்தது. மாவட்ட மட்டத்தில் அரசியல் கட்சிக்குரிய கட்டமைப்பையும் அது கொண்டிருக்கவில்லை. இந்த நிலையில் 1981ஆம் ஆண்டு மாவட்ட சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் ஒரு உறுப்பினரையாவது வெற்றி பெறச் செய்து, தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஏகோபித்த வெற் றியைக் குலைத்து, தமிழ்ப்பிரதேசங்களில் தனது அரசியல் இருப்புக்கு இடம் தேடிவிட வேண்டும் என்று அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன தீர்மானித்திருந்தார்.
வேட்பாளர் தெரிவும் விளைவுகளும்
இந்த நிலையில் முன்னாள் பாடசாலை அதிபரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய அ.தியாகராஜாவை 1981ஆம் ஆண்டு மாவட்ட சபைத் தேர்தலில் தனது வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சி களத்தில் இறக்கியிருந்தது. அவரை எப்படியாவது தேர்தலில் வெற்றிபெறச் செய்து, தமிழ் மக்கள் மத்தியில் தனது அரசியல் இருப்பை நிலைநாட்டிக்கொள்ள வேண்டும் என்பதே அன்றைய ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளார்ந்த நோக்கமாக இருந்தது. அதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்திருந்த வழிமுறை பேரின அரசியல்வாதிகளின் குரூர அரசியல் நோக்கத்தைக் கொடூரமான முறையில் வெளிப்படுத்தியிருந்தது.
ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டிருந்த அ.தியாகராஜா 1970 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் வட்டுக்கோட்டைத் தொகுதியில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அன்றைய தளபதியாகத் திகழ்ந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தைத் தோற்கடித்திருந்தார்.
அத்தகைய அரசியல் வெற்றி வீரனாக பாராளுமன்றத்திற்குத் தமிழ் மக்களின் பிரதிநிதியாகச் சென்ற அ.தியாகராஜா, சிறிமாவோ பண்டாரநாயக்கவின் தலைமையிலான அப் போதைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துடன் ஒத்துழைத்து, 1972 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மை இன மக்களின் நலன்களைப் பாதித்த முதலாவது குடியரசு அரசியலமைப்புக்கும் ஆதரவாக வாக்களித்திருந்தார்.
அத்தகைய பின்னணியைக்கொண்ட அ.தியாகராஜாவையே, 1981 ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முக்கிய வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி களமிறக்கியிருந்தது. பேரினவாத அரசியல் கட்சிகளில் எந்தத் தமிழரும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று இளைஞர்கள் செய்திருந்த எச்சரிக்கையையும் மீறி தியாகராஜா வேட்பாளர் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்தத் தேர்தல் 1981ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் திகதிக்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது. தேர்தலுக்கு 11 நாட்கள் இருந்தபோது, துவிச்சக்கர வண்டியில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகிய தியாகராஜா, வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
வேட்பாளர் தியாகராஜா கொல்லப்பட்ட சம்பவமானது, நாட்டின் பழம் பெரும் கட்சியாகிய ஐக்கிய தேசிய கட்சிக்கு விடுக்கப்பட்ட நேரடியான சவாலாகவே அன்றைய ஜனாதிபதியும் அந்தக் கட்சியின் தலைவருமாகிய ஜே.ஆர்.ஜயவர்தன கருதினார். இந்தக் கொலையின் பின்னணியில் தமிழர் விடுதலைக் கூட்டணியே இருந்தது என்ற அனுமானமும் இருந்தது.
இந்த நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் ஏகோபித்த வெற்றி பெறுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அத்துடன் எப்படியாவது ஐக்கிய தேசிய கட்சியின் செல்வாக்கை தேர்தலில் நிலைநிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அமைச்சர்களான சிறில் மத்தியூ மற்றும் காமினி திசாநாயக்கா ஆகியோருடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், மேலதிக செயலாளர் மற்றும் அமைச்சரவையின் செயலாளர் ஆகியோரை ஜனாதிபதி ஜயவர்தன யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்திருந்தார். இந்த உயர் மட்ட அரச குழுவினருடன், தேர்தல் கடமைக்கென மேலதிகமாக 500 பேரைக் கொண்ட பொலிஸ் படையும் மே மாதம் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.
மாவட்ட சபை தேர்தல் பிரசாரம் சூடு பிடித்திருந்த அந்தத் தருணத்தில்தான், மறுநாள் மே மாதம் 31 ஆம் திகதி. யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் கூட்டத்தில் 3 பொலிஸார் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகினர். அவர்களில் இருவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்கள். மற்றுமொருவரான முஸ்லிம் பொலிஸ்காரர் காயமடைந்தார். இறந்தவர்களில் ஒருவர் தமிழர் மற்றவர் சிங்களவர்.
இந்த வன்முறையையடுத்து, அந்தத் தேர்தல் கூட்டம் குழப்பத்தில் கலைந்தது. ஆனால் அந்த சம்பவத்திற்கான எதிர்வினை அன்றிரவு படுமோசமான வன்முறையாக வெடித்தது. அது தமிழ் அரசியல் வரலாற்றில் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பின் மாறாத ஒரு வடுவாகப் பதிவாகியுள்ளது.
வன்முறை வெடித்தது; நூலகம் எரிந்தது யாழ்.நகரமும் அழிந்தது
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டம் கலைந்த அரை மணித்தியாலத்தில் அந்த இடத்திற்கு சீருடை அணிந்த பொலிஸாரும், சிவிலுடையில் இருந்தவர்களும் பெரும் எண்ணிக்கையில் ட்ரக் வண்டிகளில் கொண்டு வந்து இறக்கிவிடப்பட்டார்கள். அவர்களின் வெறியாட்டத்திற்கு நாச்சிமார் கோவிலும் அதன் அயலும் இலக்காகின. ஆலயத்திற்கு அருகில் இருந்த வீடுகளுக்கும் அங்கு காணப்பட்ட வாகனங்களுக்கும் தீவைக்கப்பட்டது, அந்தப் பகுதியே இதனால் சுடுகாடாகிப் போனது.
மூன்று பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டு, அவர்களில் இருவர் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கலாக அந்த வன்முறை அமையவில்லை. யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தவர்களில் ஒரு சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டாரே என்ற இனவாத சீற்றமே அந்த வெறியாட்டத்தில் மேலோங்கியிருந்தது. வன்முறைகள் நாச்சிமார் கோவில் பகுதியுடன் நிற்கவில்லை. யாழ். நகருக்குள் பரவி, அங்கிருந்து யாழ்.நூலகத்தை முற்றாக எரித்து சாம்பலாக்கும் வரையில் அது நீடித்தது. இதனால் யாழ்.நகரம் பேரழிவுக்குள்ளாகியது. இதனால் தமிழ் மக்களின் அறிவுப் புதையல் அழிந்து போனது. அவர்களின் கலாசார பாரம்பரிய பொக்கிஷம் அழிக்கப்பட்டது. கல்வி அறிவுத் தேட்டத்தின் ஊற்றுக்கண்ணும் அடியோடு அழிக்கப்பட்டது.
அன்றைய வன்முறைகள் குறித்து பேச்சுக்கள் நடத்தி பொலிஸாரை முகாம்களுக் குள் முடக்கி வைத்து அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் முகாமிட்டிருந்த அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளிடம் நேரடியாக கோரிக்கை விடுத்த யாழ். பிரஜைகள் குழுவினரிடம் அமைச்சர் ஒருவர் வெளிப்படுத்திய கூற்று இந்த வெறியாட்டத்தின் கோரத்தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.
அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த ஒரு வர் அதனை, பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் அதனை நினைவுகூர்ந்தார். ‘நாங்கள் இப்போது மூன்றாவது சிங்கள சடலம் ஒன்றை கொழும்புக்குக் கொண்டு செல்கின்றோம். இதனை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்’ என்று அந்த அமைச்சர் கடுமை தொனிக்க எங்களிடம் கூறினார் என்று அந்த நினைவுகூரலில் அவர் தெரிவித்திருந்தார். பின் விளைவுகள் குறித்த அச்சம் காரணமாக அந்த அமைச்சர் யார் என்பதை அவர் பெயருடன் அடையாளப்படுத்தவில்லை.
நாச்சிமார் கோவிலுடன் வன்முறைகள் நிற்கவில்லை. யாழ்.நகரின் பல இடங்களிலும் அமைக்கப்பட்டிருந்த தமிழ்ப் பெரியார்களின் சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டன. பூபாலசிங்கம் புத்தகசாலை உள்ளிட்ட பத்திரிகை விற்பனை நிலையங்களும் கடைகளும் எரியூட்டப்பட்டன. சந்தைக் கட்டிடத் தொகுதி மற்றும் நவீன சந்தைக் கட்டிடத் தொகுதிகளும் தீயிட்டு எரிக்கப்பட்டன. தலைநகராகிய கொழும்புக்கு வெளியில் மாகாண மட்டத்தில் 1961ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வந்த ஒரேயொரு தமிழ் நாளேடாகிய ‘ஈழநாடு’ பத்திரிகை அலுவலகமும் எரித்து சாம்பலாக்கப்பட்டது.
கண்ணில் அகப்பட்ட வாகனங்கள் பொருட்கள் என்பனவும் அந்த அட்டூழியத் தீ மூட்டலில் சிக்கி எரிந்து சாம்பராகிப் போயின. இந்த வன்முறையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி அலுவலகமும், பல வீடுகளும் தீவைத்து எரித்து அழிக்கப்பட்டன. ஒரு வீட்டினுள்ளே ஒளித்திருந்த நான்கு பேர் வெளியே இழுத்து வரப்பட்டு கோரமாகக் கொல்லப்பட்டார்கள்.
யாழ். நகரின் பல இடங்களிலும் இந்த வன்முறைகள் தலைவிரித்தாடியபோது, மறுபக்கத்தில் யாழ். நூலகத்தை நோக்கி ஒரு குழு சென்றது. அதில் பொலிஸாரின் சீருடை தரித்தவர்களும் இருந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ். நூலகத்தின் உள்ளே நுழைந்தவர் கள், பிரிவு பிரிவாகச் செயற்பட்டு, சந்தனப் பெட்டகங்களில் வைக்கப்பட்டிருந்த 16 ஆம் நூற்றாண்டிலிருந்து கையினால் எழுதப்பட்ட 10 ஆயிரம் வரையிலான புராதன ஓலைச்சுவடிகளையும், தமிழ் மக்களின் வரலாற்று ஆவணங்களை உள்ளடக்கிய பதிவுகளையும், பெறுமதிவாய்ந்த பல்லாயிரக்கணக்கான புத்தகங்களையும், பழைய நாளேடுகளின் தொகுப்புக்களையும் சேகரிக்கப்பட்டிருந்த சஞ்சிகைகளையும் அள்ளிக் கொண்டு வந்து நூலகத்தின் மண்டபத்தில் குவித்து அவற்றுக்குத் தீ மூட்டினார்கள். எல்லாமாக சுமார் ஒரு இலட்சம் புத்தகங்களை எரித்ததுடன் அந்த வெறியர்கள் நிற்கவில்லை. கட்டிடத்தின் பல பகுதிகளுக்கும் தீவைத்து, முழு நூலகத்தையும் சாம்பல் மேடாக்கினார்கள்.
பித்தலாட்டமும் பேருண்மையும்
ஆசியாவின் மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்த அதேவேளை, பல்துறை சார்ந்த பெரும் எண்ணிக்கையிலான நூல்கள் மற் றும் வரலாற்றுப் பதிவுகளின் உள்ளடக்கம் காரணமாக அற்புதமான நூலகம் என ஆசிய பிராந்தியத்தில் பெயர் பெற்றிருந்தது. அத்தகைய பெருமை மிக்க யாழ். நூலகம் அமைச்சர்களான சிறில் மத்தியூ மற்றும் காமினி திசாநாயக்க இருவரினதும் மேற்பார்வையில் அன்று எரியூட்டப்பட்டு நாசமாக்கப்பட்டது. அந்த நூலகம் கொழுந்துவிட்டு எரிந்ததை, அந்த சூழலில் அமைந்திருந்த யாழ். விருந்தகத்தில் (யாழ்ப்பாணம் வாடி வீட்டில்) இருந்து அவர்கள் இருவரும் நேரடியாகக் கண்டு இரசித்ததையும் மனம் வெதும்பிய நிலையில் சிலர் நேரில் கண்டிருந்தார்கள்.
நூலகத்தின் சுற்றாடலில் அமைந்திருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் வே.யோகேஸ்வரனின் வீடும் தாக்குதலுக்கு உள்ளாகியது. அங்கு சென்ற காடையர் கூட்டம், அந்த வீட்டிற்கும் அயலிலிருந்த வீடுகளுக்கும் தீவைத்தது. அரசாங்கத்தையும், அதன் அடக்குமுறை சார்ந்த போக்கையும் வெளிப்படையாக விமர்சித்து வந்த பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனை இலக்கு வைத்து காடை யர் கூட்டம் அவரைத் தேடிச்சென்றிருந்தது. ஆயினும் அந்த நள்ளிரவுச் சம்பவ நேரம் வீட்டில் தங்கியிருந்த யோகேஸ்வரனும் அவருடைய மனைவியும் வீட்டிலிருந்து வெளியில் ஓடி தெய்வாதீனமாக உயிர் தப்பினார்கள். யாழ். நூலக எரிப்பை நேரடியாகக் கண்டிருந்த சிறில் மத்தியூ மற்றும் காமினி திசாநாயக்க ஆகிய இரு அமைச்சர்களும் உடனடியாக யாழ். நூலகம் எரிக்கப்பட்டமை ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்றே வர்ணித்திருந்தார்கள். ‘மதுபோதைக்கு ஆளா கியிருந்த ஒரு சில பொலிஸ்காரர்களே கட்டுப்பாட்டை இழந்து தாமாகவே கொள்ளையடிப்பதிலும் பொருட்களைச் சூறையாடுவதிலும் ஈடுபட்டிருந்தார்கள். அது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்’ என்று அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
யாழ். நூலகம் எரித்தழிக்கப்பட்டதையும் யாழ். நகரம் துவம்சம் செய்யப்பட்டதையும் கொழும்பிலிருந்து வெளிவந்த தேசிய தினசரிகள் என கூறப்பட்ட சிங்களம் மற்றும் ஆங்கில நாளேடுகள் கண்டுகொள்ளவே இல்லை.
அந்த அமைச்சர்களின் இந்தக் கூற்றே நூலகம் எரிக்கப்பட்டு, யாழ். நகரமும் துவம்சம் செய்யப்பட்டிருந்ததன் பின்னர் பேரினவாதிகளினாலும், அவர்களுக்கு ஆதரவான ஊடகங்களினாலும் தொடர்ச்சியாக மேற்கோள்காட்டி பிரசாரம் செய்யப்பட்டு வந்தது. அது தொடர்ந்து நீடிக்கவில்லை.
தனிநாட்டுக் கோரிக்கைக்கு முரணான வகையில் மாவட்ட சபை ஆட்சி முறைமையை ஏற்றிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயற்பாடு குறித்து தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவிய போதிலும் யாழ். நூலக எரிப்பும், யாழ். நகர அழிப்பும் தமிழ் மக்கள் மனங்களில் ஒரு வைராக்கியத்தை உருவாக்கி இருந்தது. தங்களின் பாதுகாப்புக்கென ஓர் அதிகாரம் வாய்ந்த நிர்வாகக் கட்டமைப்புடன்கூடிய தனி அரசு உருவாக்கப்பட வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த உத்வேகமே, அரச கட்சியாகிய ஐக்கிய தேசிய கட்சிக்கு தேர்தலில் வாக்களிக்கக்கூடாது என்ற மன உறுதியைக் கொடுத்திருந்தது. இதனால் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றி பெற்றது.
அந்தத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஜூன் மாதம் 9 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அமர்வில், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும், வெற்றிவேலு யோகேஸ்வரன் ஆகிய இருவரும் யாழ். நூலக எரிப்பும் யாழ். நகர வன்முறைகளுக்கும் அரசாங்கமும் பொலிஸாருமே காரணம் என ஆதாரங்களுடன் நேரடியாகக் குற்றம் சுமத்தியிருந்தார்கள். அவர்களுடைய இந்தக் குற்றச்சாட்டு பாராளுமன்ற உரைகளின் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது. அந்த விவாதத்தின்போது உரையாற்றிய அப்போதைய அரசாங்க பேச்சாளரான காமினி திசாநாயக்க, பொலிஸாரே சேதங்களை ஏற்படுத்தினர் என்பதைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
‘பொலிஸாரினால் சில சேதங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதை நாங்கள் மறுக்கவில்லை. அதற்காக நாங்கள் முரண்படவும் முடியாது. பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடு பொலிஸாரினால் எரிக்கப்பட்டது’ என பாராளுமன்றத்தில் தெரிவித்து உண்மையை அவர் ஒப்புக்கொண்டார்.
அத்துடன், ‘பொலிஸாரின் மன உறுதி, அவர்களின் உளவியல் நிலை, நடத்தை தொடர்பிலான பாணி என்பன குறித்தும் நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம்’ என் றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அநீதி இழையோடும் அழகு………..?
பாராளுமன்ற விவாதத்தின்போது நூலக எரிப்பும், யாழ். நகரின் மீதான வன்முறைகளும் பகிரங்கப்படுத்தப்பட்ட போதிலும், அமைச்சர்களோ அல்லது அரசாங்கமோ அந்தப் பாதிப்புக்களுக்காக தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரவில்லை. இந்தப் பேரழிவு குறித்து விசாரணை நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கவே இல்லை. நான்கு தினங்கள் வன்முறைகளில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதி வழங்குவதற்கும் அரசாங்கம் அக்கறை கொள்ளவே இல்லை. சக பிரஜைகளான, ஒரு சக இனக் குழுமத்தின் மீது நடத்தப்பட்ட ஒரு கலாசார ஒழிப்பு சார்ந்த இன அழிப்பு நடவடிக்கை குறித்து எந்தவிதத்திலும் அரசும் பேரின அரசியல்வாதிகளும் அலட்டிக் கொள்ளவே இல்லை.
மாறாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஏனைய பேரின அரசியல்வாதிகள் யாழ். நகர வன்முறைகளின் மூலம் அடங்கி இருந்தால் இந்த நாட்டில் வாழலாம். இல்லையேல் தமிழ் நாட்டுக்கு தப்பியோடிச் செல்லுங்கள் என்ற மறைமுகமான செய்தியையே மறை முகமாகப் பிரதிபலித்திருந்தார்கள்.
யாழ். நூலகம் எரிக்கப்பட்டதை அறிந்ததும், அந்த நூலகத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல் லூரியின் முன்னாள் அதிபர் அருட்தந்தை தாவீது அடிகளார் மாரடைப்பினால் உயிர் துறந்தார். தமிழ் மக்கள் தமது அறிவுக் கரு மூலம் அழிந்துபோனதே என்று மனம் கலங்கி துயருற்றார்கள். யாழ்.நூலகத்தில் சேகரிக் கப்பட்டிருந்த பெறுவதற்கரிய நூல்களும் ஆவணங்களும் அரச பயங்கரவாதத்தினால் அழிக்கப்பட்டு விட்டனவே என்று துறை சார்ந்தவர்களும், புத்திஜீவிகளும் கல்வி மான்களும் பெரும் கவலை கொண்டார்கள்.
அழிக்கப்பட்ட யாழ்.நூலகத்தைப் பல வருடங்களின் பின்னர், புதிதாக நிர்மாணம் செய்வதற்கு அரசாங்கத்தினால் மேற் கொள் ளப்பட்ட முயற்சிக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, நடைபெற்ற இன அழிப் புக்கு நீதி வேண்டும் என்றே யாழ். மக்கள் கோரினார்கள்.
இருப்பினும் இறுதியாக பல வருடங்க ளின் பின்னர் யாழ். நூலகம் புதிதாக நிர்மா ணிக்கப்பட்டு பெறுமதியான புத்தகங்க ளுடன் மீண்டும் செயற்படத் தொடங்கியுள் ளது. வெண்ணிற அழகிய அலங்காரமான கட்டிடமாக, அது திகழ்கின்றது. அது யாழ்.நகரின் அழகுக்கு அழகு சேர்த்திருக்கின்றது.
இருந்தபோதிலும், அந்த நேர்த்தியான தோற்றத்தின் பின்னால் கோரமான இன அழிப்பின் துயரம், மறைந்து கிடக்கின்றது. அதன் பாரம்பரிய பெருமைக்கும், அறிவு பொக்கிஷமாகிய அதன் கடந்த கால உன் னதத்திற்கும் இழைக்கப்பட்ட அநீதியும் அந்த அழகில் இழையோடிக் கிடக்கின்றது. அந்த அநீதிக்கு நியாயம் வழங்கப்படவில் லையே என்ற ஏக்க உணர்வும் அந்த அழ கில் விரவியிருக்கின்றது. இதனை உணர்வு பூர்வமாக உணர்பவர்கள் எத்தனை பேர் என் பது கேள்விக்குறியாகவே உள்ளது.
– மாணிக்கவாசகம் –