கேரள ஐஎஸ் தலைவர் ஆப்கானிஸ்தானில் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில், கேரளாவைச் சேர்ந்த ஐஎஸ் பிரிவு தலைவர் ரஷீத் அப்துல்லா உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தின் திரிக்காப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஷித் அப்துல்லா. இவர் கடந்த 2016ம் ஆண்டு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கோட்டையான ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு தனது மனைவி ஆயிஷா உள்ளிட்ட 21 பேருடன் குடிபெயர்ந்தார். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

அப்துல்லாவின் சமூக வலைத்தளம் மூலமாக தகவலைப் பெற்ற ஒருவர் இத்தகவலை கூறியிருக்கிறார். அவரது சமூக வலைத்தளம் சில சமயங்களில் இயங்காமல் இருந்ததாகவும் ’ரஷீத்திற்கு என்ன ஆயிற்று’ என கேள்வி எழுப்பியபோது அவர் இறந்துவிட்டதாக தகவல் அனுப்பியதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு அமெரிக்க படைகள் நடத்திய குண்டுவீச்சின்போது ரஷீத் அப்துல்லா கொல்லப்பட்டிருக்கல்லாம் என தெரிகிறது. அவருடன் சேர்த்து இந்தியாவை சேர்ந்த 3 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் கொல்லப்பட்டனர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இச்செய்தியை வளைகுடா பகுதியில் வாழும் அப்துல்லாவின் பெற்றோர்கள் அறிந்தார்களா என்பது தெரியவில்லை.
பொறியியல் பட்டதாரியான அப்துல்லா, சலாபி போதகர் எம்.எம்.அக்பரால் நிறுவப்பட்ட சர்வதேச சமாதான பள்ளியில் பணி செய்துள்ளார். ஐஎஸ் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட அவர், ஐஎஸ் அமைப்புக்கு ஆட்களை சேர்த்து வந்தார். ஆட்களை திரட்டுவதற்காக டெலிகிராம் பயன்பாட்டின் (ஆப்) பல்வேறு கணக்குகளின் மூலம், 90-க்கும் மேற்பட்ட ஆடியோ கிளிப்புகள் அனுப்பியுள்ளார். கேரளா ஐஎஸ் அமைப்பிற்கு, கோழிக்கோடைச் சேர்ந்த சஜீர் மங்களாசெரி அப்துல்லா ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட பின்பு இவர் தலைமை தாங்கி வழிநடத்தியதாக நம்பப்படுகிறது.