புறக்கணித்தல் வலி தரும். ஒருவரை முற்றுமுழுதாக விரும்பாதிருத்தலை விடவும் அவரை வேறுபடுத்திப் பார்ப்பதும், புறக்கணிப்பதும் ஆகக்கூடுதலான சேதத்தை ஏற்படுத்தும் என்பார், எழுத்தாளர் ஜே.கே.ரோவ்லிங்ஸ்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேசத்தில், வடக்கத்தியர்களால் நீண்டகாலமாக மதராஸிகள் என்று புறக்கணிக்கப்பட்டு வேறுபடுத்தப்பட்ட தமிழர்கள். இந்த மக்கள் புறக்கணிப்பை புறக்கணித்திருப்பதன் மூலம் அரசியல் ரீதியான பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.
லோக் சபா தேர்தலில் வாக்குகள் மூலம் பாரதிய ஜனதா கட்சியை நிராகரித்ததன் மூலம் ஜனநாயக ரீதியில் பதிலடி கொடுத்த தமிழர்கள், சர்வதேச தகவல் வலைப்பின்னலில் நேசமணி மீதான நேசிப்பின் மூலம் நரேந்திர மோடியை நிராகரித்திருக்கிறார்கள்.
கடந்த 23ஆம் திகதி வெளியான தமிழக லோக் சபா தேர்தல் பெறுபேறுகள் தந்த அதிர்ச்சியில் இருந்து நரேந்திர மோடி மீண்டிருக்க மாட்டார். அந்நேரம் கடந்த 30ஆம் திகதி இரண்டாவது பதவிக் காலத்திற்காக சத்தியப் பிரமாணம் செய்த சமயத்தில் நேசமணி என்ற கற்பனை பாத்திரத்திற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் அவருக்கு இடியாக விழுந்திருக்கும்.
முதல் விடயத்தைப் பற்றிப் பேசுவோம். லோக் சபா தேர்தலில் மோடியின் காவி அலை இந்தியாவின் வடபகுதி முழுவதும் தீவிரமாகப் பரவி பீஜேபி கூட்டணி 543 இல் 353 தொகுதிகளில் வெற்றியீட்டியது. ஆனால், தமிழகத்தின் 38 தொகுதிகளில் ஒன்றிலேனும் வெற்றி பெற முடியவில்லை. இது தம்மைப் புறக்கணித்ததாகக் கருதும் நரேந்திர மோடிக்கு தமிழக மக்கள் கொடுத்த முதல் அதிர்ச்சி வைத்தியம்.
இனி இரண்டாவது விடயம். ஆரம்பம் தொடக்கம் பிரதமர் நரேந்திர மோடி தமது பிரசாரத்தை மையப்படுத்திய பிரதான ஊடகமாக ட்விற்றர் திகழ்ந்தது. பாகிஸ்தானியர்கள் ‘ட்விற்றர் மோடி’ என்று கேலி பண்ணும் அளவிற்கு பிரதமர் ட்விற்றரில் நாட்டம் கொண்டவராக இருந்தார். இந்த சமூக ஊடகத்தில் பிரதமர் ஏதேனும் கருத்தை இட்டால், அதனைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை ஐந்து கோடியை எட்டுகிறது. ஆனால், அவர் சத்தியப் பிரமாணம் செய்த தினத்தன்று, மோடியை விடவும் நேசமணிக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.
ஒரு தலைவரையோ, அவரது கோட்பாடுகளையோ வாக்காளர்கள் வாக்குகள் மூலம் நிராகரித்தல் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம். அதனைப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். இந்தியாவின் எதிர்காலத் தலைவிதியைத் தீர்மானிக்கக்கூடிய தினத்தன்று, தேசிய அரசியல் பற்றி எதுவித அக்கறையும் இல்லாமல் நேசமணியை நேசித்ததன் மூலம் தமது புறக்கணிப்பை வெளிப்படுத்துதலின் சூட்சுமத்தைப் புரிந்து கொள்வது சற்றுக் கடினமான விஷயம். அதற்கு ட்விற்றர் பற்றி சற்று அறிந்திருக்க வேண்டும்.
ட்விற்றர் என்பது பேஸ்புக் போன்றதொரு சமூக வலைத்தளம். அதில் அங்கத்துவம் பெறும் பயனர்கள், சில எல்லைகளுக்கு உட்பட்டு தாம் விரும்பும் விடயங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும். அது எழுத்து வடிவ கருத்தாக, படமாக, காணொளியாக, இணைய சுட்டியாக இருக்கலாம். இது ட்வீற் எனப்படும். ஒரு பயனரை இன்னொரு பயனர் பின்தொடரலாம். இவர்கள் ஃபலோவர்ஸ் (Followers) எனப்படுவார்கள். முதற்பயனர் இடும் பதிவுகளை இரண்டாவது பயனர் பார்க்க முடியும். இதன் பிரகாரம், நரேந்திர மோடிக்கு 47 மில்லியனுக்கு மேலான ஃபலோவர்ஸ் உள்ளார்கள். அரச கொள்கைகள் முதற்கொண்டு தாம் விரும்பி உண்ட உணவு வரையிலான பல விடயங்களையும் இந்தியப் பிரதமர் ட்வீற் செய்வது வழக்கம். இதுவே இவரை ட்விற்றர் மோடி என்று வர்ணிக்க வழிவகுத்தது.
ட்விற்றரில் இன்னொரு சிறப்பம்சம் உண்டு. அது ஹாஷ்டெக் எனப்படுவதாகும். இது ஆங்கில விசைப்பலகையிலுள்ள ‘#’ என்ற குறியீட்டின் பெயராகும். ஒரு பயனர் ஹேஷ் டெக்கை சேர்த்து ஒரு விடயத்தைப் பதிவிடலாம். இன்னொருவரும் ஹேஷ்டெக்குடன் அதே கருத்தைப் பதிவிடுகையில், அந்த விடயம் கவனிக்கப்படுகிறது. ஒரு விடயம் ஆகக்கூடுதலான பயனர்களால் பகிரப்படுகையில், அது ட்விற்றர் சமூக ஊடகத்தில் மேலோங்கிய விடயமாகிறது. இது ட்ரென்டிங் எனப்படுகிறது.
தேர்தலுக்கு முன்னதாக, நரேந்திர மோடி #MainBhiChowkidaar என்ற ஹேஷ்டெக்குடன் தமது கருத்துக்களைப் பதிவு செய்தார். இதன் அர்த்தம் நானும் காவலாளி என்பதாகும். இந்தியாவில் நிகழும் ஊழல்களைப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் ஊழலை எதிர்த்துப் போராடுவோராக தம்மை சித்தரித்துக் கொள்ள முனையக் கூடாது என்ற கருத்தைப் பரப்புவது அவரது நோக்கம். இது காங்கிரஸ் தலைவர்களை இலக்கு வைத்த பிரசாரமாகும். இந்த ஹேஷ்டெக் உலக அளவில் ட்ரென்டிங் ஆனது. இதன்மூலம், தேர்தல் வாக்கெடுப்பிற்கு முன்னதாகவே இணைய உலகில் வெற்றி பெற்ற மிதப்பில் நரேந்திர மோடி செயற்பட்டார்.
இனி நேசமணி விவகாரத்திற்கு வருவோம். இது #Pray_For_Nesamani என்ற ஹேஷ்டெக்குடன் தொடர்புடையதாகும். ஒரு பொறியியலாளர் சுத்தியல் பற்றி விளக்கம் அளிப்பதற்காக பதிவு செய்த கருத்து, இதன் மூலாரம்பமாகத் திகழ்கிறது. ஒரு பயனர் சுத்தியலுக்கு உங்கள் நாட்டில் என்ன பெயர் என்ற கேள்வியை இட்டிருந்தார். மற்றொருவர், நகைச்சுவையாக பதில் பதிவை இட்டிருந்தார். இதனை தட்டினால் நங், நங்ஙென்று சத்தம் வரும். ஒரு பெயின்ட் வேலை செய்யும் நேசமணியின் தலையும் சுத்தியலால் உடைந்தது என்று அவரது பதிலில் எழுதப்பட்டிருந்தது. இதனைக் கண்ட இன்னொரு பதிவாளர், நகைச்சுவை உணர்வுடன் நேசமணி நலமாக இருக்கிறாரா என்று ட்வீற் செய்தார். இதன் தொடர்ச்சியாக, நேசமணிக்காக பிரார்த்திப்போம் என்ற கோரிக்கையுடன் #Pray_For_Nesamani என்ற ஹேஷ்டெக் பிரபலம் பெற்றது. உலக அளவில் ட்ரென்ட்டிங் ஆனது.
இதில் நேசமணி உண்மையான நபர் அல்லர். 2001ஆம் ஆண்டு வெளியான நண்பர்கள் படத்தில் வடிவேலு ஏற்று நடித்த பாத்திரத்தின் பெயர் தான் அது. இதில் வரும் நகைச்சுவைக் காட்சியில், மேலேயிருந்து விழும் சுத்தியல் வடிவேலுவின் தலையில் விழும் காட்சி மிகவும் தத்ரூபமாக பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்த நேசமணி என்ற கற்பனைக் கதாபாத்திரத்திற்கு ட்விற்றரில் உருவம் கொடுத்து, ட்விற்றர் பயனர்கள் சகல விடயங்களையும் கேலி செய்யத் தொடங்கினார்கள். இந்தக் கேலியில் பாப்பரசரும் தப்பவில்லை. பாப்பரசரின் படத்துடன், நேசமணி குணமடைய வேண்டும் என கத்தோலிக்கத் திருத்தந்தை பிரார்த்தனை என்று குறும்பர்கள் ட்வீற் செய்திருந்தார்கள்.
இந்த ஹேஷ்டெக் ட்ரென்டிங் ஆனதற்கு இந்தியத் தமிழர்களின் நகைச்சுவை உணர்வு பிரதான காரணம் என்று கூறலாம். இது ட்ரென்ட் ஆன சமயத்தில், தமிழர்கள் பிரதமரின் சத்தியப் பிரமாணம் பற்றி அக்கறை காட்டவில்லை. பீ.ஜே.பி. அரசாங்கத்தின் அமைச்சரவை பற்றி கவலைப்படவில்லை. சுஷ்மா ஸ்வராஜ்ஜிற்கு அமைச்சுப் பதவி கிடைக்காததையும் பொருட்படுத்தவில்லை. அவர்கள் நேசமணி என்ற கதாபாத்திரத்தை வைத்து யாரையெல்லாம் கலாய்க்கலாம் என்பதில் குறியாக இருந்தார்கள். மத்திய அரசாங்கம் எக்கேடு கெட்டுப் போனாலும் எமக்கென்ன என்ற தொனியுடன், சிரித்து மாள்வதில் தமிழர்களின் கவனம் குவிந்திருந்தது.
இதுவொன்றும் இலேசுப்பட்ட விடயம் அல்ல. இது இந்தியர்கள் என்ற பொது அடையாளத்தைக் கேள்விக்கு உட்படுத்தும் விஷயமாகும். இதில், வட இந்தியர்களின் அரசியல் தான் தேசப்பற்று என்றால், அந்தத் தேசப்பற்று எமக்கு எதற்கு என்ற கேள்வியின் தீவிரத்தை மறைமுகமாக உணர முடியும். தமிழர்களால் தேர்தலில் பீ.ஜே.பி நிராகரிக்கப்பட்ட விதம் வேறு. ட்விற்றரில் நரேந்திர மோடி புறக்கணிக்கப்பட்ட விதமும் வித்தியாசமானது. இருந்தபோதிலும், இரண்டுக்குமான காரணங்கள் பொதுவானவை. இவை ஆண்டாண்டு காலம் நீடிப்பவை. விரும்பாதிருத்தலையும், புறக்கணித்தலையும் அடித்தளமாகக் கொண்டவை.
அகில இந்திய ரீதியில், மோடிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் கிடைத்த வெற்றிக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. பாரதிய ஜனதா கட்சி முன்னிறுத்திய தேசியவாதம், எதிர்க்கட்சியின் பலவீனங்கள், சாதிய அரசியலின் தோல்வி, இந்துத்துவ பெருமை போன்ற காரணங்கள். நரேந்திர மோடி என்ற ஆளுமை கொண்டுள்ள ஆட்கவர்ச்சி முதன்மைக் காரணமாக நோக்கப்படுகிறது. தாம் சிறந்த தலைவன் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைக்கச் செய்வதில் மோடி வெற்றி பெற்றார் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்து.
இந்த வெற்றி தமிழகத்தில் சாத்தியப்படாமல் போனது ஏன்? இதற்கும் பல காரணங்கள் உண்டு. முதன்மைக் காரணம், புறக்கணிப்பின் வலி. வரலாற்று காலம் தொடக்கம் வட இந்தியர்களாலும், சமீபத்திய காலமாக நரேந்திர மோடியாலும் புறக்கணிக்கப்பட்டதன் வலி, வாக்குகளின் ஊடாகவும், ட்வீற்றுக்களின் ஊடாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதே உண்மை.
வடக்கின் தலைவர்கள் தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறார்கள் என்ற எண்ணம் தமிழர்கள் மனதில் இன்று நேற்று தோன்றியது அல்ல. இது ஆரியர்களின் ஆதிக்க மனப்பான்மையை வெறுக்கத் தொடங்கிய நாள் தொடக்கம் திராவிடத் தமிழர்கள் மனதில் நீடிப்பதாகும்.
இந்த எண்ணம், அரச பாடசாலைகளில் ஹிந்தி மொழிப் போதனையைக் கட்டாயமாக்குவதற்கு இந்தியாவின் மத்திய அரசு முன்னெடுத்த நடவடிக்கைகளுடன் தீவிரம் பெற்றது எனலாம். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாக, தமிழகத்தில் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்தப் போராட்டம் 1960களின் முற்பகுதியில் மத்திய அரசாங்கத்திற்கு எதிரான மாபெரும் போராட்டமாக பரிணமித்தது. ஹிந்தியை உத்தியோகபூர்வ மொழியாக அங்கீகரிக்கும் சட்டத்திருத்தம் போராட்டத்திற்கு காரணமாகும். போராட்டத்தை முன்னின்று வழிநடத்திய பேரறிஞர் அண்ணாத்துரை உள்ளிட்ட தி.மு.க. பிரமுகர்கள் கைது செய்யப்பட்டார்கள்
புதுடெல்லி மீது தமிழர்கள் கொண்ட சந்தேகம் சமீபத்திய காலத்தில் மென்மேலும் வலுப்பெற்றன. தமிழகத்தில் திராவிட அரசியல் செய்த மு.கருணாநிதி, ஜெயலலிதா ஜெயராம் ஆகியோரின் மறைவைத் தொடர்ந்து, தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டதாகக் கருதி, அதற்குள் பாரதிய கட்சி நுழைய முயன்றது என்ற எண்ணம் தமிழக மக்கள் மனதில் உள்ளது.
இது தவிர, ஆரியர்களின் ஆதிக்க மனப்பான்மையுடன் தமிழர்களின் கலாசாரத்தை ஒடுக்கி தமிழினத்தின் இருப்பை கேள்விக்கு உட்படுத்த மோடி முனைகிறார் என்ற சந்தேகமும் உள்ளது. இந்த சந்தேகமே மெரீனா கடற்கரையில் ஜல்லிக்கட்டு எதிர்ப்பு போராட்டமாக வெடித்தது. அரசியல் தலைமைகள் இல்லாத நிலையில் தீவிரமாக வெடித்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வீரியம் வடக்கைத் திரும்பிப் பார்க்கச் செய்தது. இந்த விளையாட்டின் மீதான தடை நீக்கப்பட்டது. இதன்போது, நரேந்திர மோடி தமிழ் எதிர்ப்பாளராகவும், தமிழக எதிர்ப்பாளராகவும் சித்தரிப்பதில் தி.மு.க தலைவர்கள் ஸ்டாலின் முதலானவர்கள் வெற்றி பெற்றார்கள்.
மோடி மீதான எதிர்ப்பலை தீவிரம் பெறுவதற்கு இன்னும் பல காரணங்கள். சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை அரச படைகள் ஒடுக்கிய விதத்தை மக்கள் மறக்கவில்லை. இங்குள்ள செம்புத் தொழிற்சாலையால் தமது உயிருக்கு ஆபத்து. இதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் மூலாதாரமான கோரிக்கை. இந்தப் போராட்டத்தை வன்முறைகளைப் பிரயோகித்தும், அரசியல் சதி
முயற்சிகள் மூலமும் மத்திய அரசாங்கம் மிகவும் கொடுமையான முறையில் ஒதுக்கியது என்ற ஆதங்கம் தமிழக மக்கள் மனதில் உள்ளது.
இங்கு கூடாங்குளம் அணு உலை பற்றியும் பேச வேண்டும். இந்தியாவின் மின்சார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அணுசக்தியைப் பயன்படுத்தி, மின்வலுவை உற்பத்தி செய்வதற்காக கூடாங்குளம் அணு உலை நிர்மாணிக்கப்பட்டது. இதன்மூலம் அணுக்கசிவு ஏற்பட்டால் பல உயிர்கள் பலியாகக்கூடும் என்ற ஆதங்கங்களுக்கு மத்தியில், அணுவாலையை நிர்மாணிக்க வடக்குத் தலைவர்கள் தமிழகத்தையே தெரிவு செய்தார்கள் என்ற கோபமும், நிராகரிப்பு பற்றிய வலியும் தமிழக மக்களிடம் உள்ளது.
சமீப காலத்தில் தமிழகத்தில் மோடி மீதான வெறுப்புணர்வு தீவிரம் பெறுவதற்கு பல காரணங்கள் இருந்தன. கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடிய சந்தர்ப்பத்தில் வராத மோடி, வாக்குக் கேட்பதற்காக மாத்திரம் வந்தார் என்ற கோபத்தைக் குறிப்பிடலாம். ஒரு தடவை அல்ல. இரண்டு தடவைகள் அல்ல. நான்கு மாத காலத்திற்குள் ஆறு தடவைகள் தமிழகத்திற்கு வந்து, தமக்குத் தேவையானவர்களை மாத்திரம் சந்தித்தார். விவசாயிகளின் பிரச்
சினையைக் குறிப்பிடலாம்.
தமிழகத்தைச் சேர்ந்த 100 விவசாயிகள் தமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி, ஜந்தர் மந்திருக்கு அருகில் நூறு நாட்கள் வரை ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஆனால், பிரதமரோ, பீ.ஜே.பி.யோ விவசாயிகளைக் கண்டுகொள்ளவில்லை. குறைந்தபட்சம் கோரிக்கைகள் என்னவென்று கேட்கவும் இல்லையென்ற ஆதங்கம் தமிழக மக்கள் மனதில் உள்ளது. தமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய காவேரி தண்ணீர் விவகாரத்திலும் மோடி அசிரத்தைப் போக்குடன் நடந்து கொண்டார் என்ற கோபம் தமிழர்களிடம் உள்ளது.
இந்தத் தார்ம்கக் கோபம் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையான முறையில் ஆர்ப்பாட்டங்களாக, போராட்டங்களாக வெளிப்பட்டது. இணையத்தில்Go back modi என்ற ஹாஷ்டாக்கின் வழியே மோடியே திரும்பிப் போ என்ற கோஷத்தின் மூலமும் வெளிப்பட்டது. கடந்த ஆண்டு பாதுகாப்புக் கண்காட்சிக்காக மோடி தமிழகத்திற்கு சென்ற சமயம், அவருக்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்த தமிழக மக்கள், அவர் தமது மண்ணில் கால்பதித்த ஒவ்வொரு தருணத்திலும் தமிழகத்தில் இருந்து விரட்டியடிக்க முனைந்ததையும் நினைவுகூர முடியும்.
இந்தியா என்பது மதச்சார்பின்மை கோட்பாடுகளை அனுசரித்து, பல்லினங்களையும் பல மதங்களையும் சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழும் தேசம். இந்த தேசத்தில் ஜனநாயகம் என்பது உண்மையான அர்த்தமுடையதாக இருக்க வேண்டுமாயின், சகலரையும் உள்ளடக்கிக் கொண்டு முன்னேறுவது அவசியம். இதனை சகலரையும் உள்வாங்கிய ஜனநாயகம் என்போம். ஏதோவொரு காரணத்திற்காக சமூகக் கட்டமைப்பிற்குள் ஒரு மக்கள் குழுமம் விரும்பப்படாதிருக்குமாயின், வேறுபடுத்தப்படுமாயின், அல்லது புறக்கணிக்கப்படுமாயின், அங்கு ஜனநாயகம் தழைத்தோங்க முடியாது. பாதிக்கப்பட்ட மக்கள் குழுமம் சமூகத்தின் பிரதான நீரோட்டத்தில் இருந்து விலகிச் சென்று, தம்மை அந்நியப்படுத்தும் நிலையே உருவாகும்.
நரேந்திர மோடி விவகாரத்தில் இதுவே நடந்திருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவும் தேசப்பற்றின் பெயரால் பிரதமரின் சத்தியப் பிரமாண வைபவத்தின் மீது கவனம் செலுத்திய வேளையில், தமிழ்ச் சமூகத்தின் ட்விற்றர் பயனாளிகள் கற்பனைக் கதாபாத்திரத்தின் மீது கவனத்தைத் திசைதிருப்பியிருக்கிறார்கள். இது நிராகரிப்பின் வலியையும், வேதனையையும் வெளிப்படுத்துவதற்கு தமிழ்ச்சமூகத்திற்கு கிடைத்த புதிய வடிகால் மாத்திரமே. இந்த வேதனை எதிர்காலத்தில் அரசியல் போராட்டமாக வெடிக்கலாம். அல்லது, பெரியார் சொன்னதைப் போல, தமிழகம் இந்தியாவில் இருந்து தனிநாடாகப் பிரிந்து செல்ல வழிவகுக்கவும் கூடும்.
(சதீஷ் கிருஷ்ணபிள்ளை)