அமைச்சர் ஒருவர் மீது குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மைதா என்பதை அரசாங்கம் பரிசீலித்து பார்க்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக அவ்வாறு பரிசீலித்து பார்க்காமல் தட்டி கழிக்க கூடாது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நேற்று யாழில் நடைபெற்றது. இதன் பின்னர் அமைச்சர் ரிசாட் பதீயூதின் மீதான குற்றச்சாட்டுக்களும் அவரை பதவி நீக்க கோருகின்ற போராட்டங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
குறித்த அமைச்சர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ஒருவருடைய குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக எங்களுக்கு தெரியாமல் நாங்கள் எதனையும் சொல்ல இயலாது. இதே நேரத்தில் குறித்த அமைச்சர் விடயத்தில் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை சில தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதேவேளை இந்த அமைச்சரை பதவி நீக்க வேண்டுமெனக் கோரி பௌத்த தேர்ர் ஒருவர் உண்ணாவிரதம் இருக்கின்றார். அதிலும் அமைச்சருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் இருப்பதாகவும் அதனை தன்னால் நிரூபிக்க முடியுமென்றெல்லாம் அவர் கூறிக்கொண்டுருக்கின்றார்.
ஆகையினால் அரசாங்கம் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக இவற்றை தட்டிக் கழிக்க கூடாதென்பதே எங்களுடைய நிலைப்பாடாகும்.
ஆனாலும் உண்ணாவிரதம் இருப்பவர் கூறுவது சரியோ தவறோ என்பது பற்றி எங்களுக்கு தெரியாது. ஆயினும் தான் சொல்வது திடமானது எனக் கூறி உண்ணாவிரதமிருப்பவராகவே அவர் தென்படுகின்றார்.
ஆகவே அரசாங்கம் அந்தளவிற்கு நடவடிக்கை எடுக்கின்றதா என்று பார்க்க வேண்டும். அதாவது ஒருவர் மீது குற்றச்சாட்டு இருந்தால் அந்தக் குற்றச்சாட்டு உண்மைதா என்று அரசு பரிசீலித்து பார்க்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக பரிசீலித்து பார்க்காது விட்டால் இவ்வாறான பிரச்சனைகள் தான் ஏற்படும் என்றார்.
Eelamurasu Australia Online News Portal