அவுஸ்திரேலியாவில் இலவச Wi-Fi பயன்படுத்துபவர்களுக்கு ஆபத்து!

அவுஸ்திரேலியாவில் இலவச Wi-Fi பயன்படுத்துபவர்களை பொலிஸார் கண்காணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலவச இணைய வசதியை (WiFi) வழங்கும் McDonald’s உணவகம், Westfield பல்பொருள் அங்காடி மற்றும் Apple Stores ஆகியவற்றில் WiFi வசதியை பயன்படுத்துபவர்களின் விபரங்களை அவுஸ்திரேலிய புலனாய்வுப்பிரிவினர் கண்காணிக்கலாம் என கூறப்படுகின்றது.

பாதுகாக்கப்பட்ட தொடர்பாடல் (encryption technology) செயலிகளின் தகவல் பரிமாற்றங்களை ஒட்டுக்கேட்பது உட்பட இணைய பாதுகாப்பு தொடர்பில் பல புதிய கண்காணிப்புக்களை மேற்கொள்வதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைவான புதிய சட்டத்தின்படி மேற்படி கண்காணிப்புக்கள் மேற்கொள்ளப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Morrison அரசின் காலத்தில் இந்தப்புதிய சட்டத்தைக்கொண்டுவரும்போது லேபர் கட்சி ஆட்சேபம் தெரிவித்து பின்னர் பல திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்று கோரியிருந்தது.

ஆனால், தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள Morrison அரசு இந்த சட்டத்தின் ஊடாக பாதுகாப்புத்தரப்பினருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கியுள்ளது.

இணையத்தின் வழியாக ஒழிந்துகொண்டு சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களை கண்காணித்து கைது செய்து சட்டத்தின் முன்பாக நிறுத்தும்பொருட்டு அரசு கொண்டுவந்துள்ள இந்தப்புதிய சட்டம் பல வியக்கவைக்கும் அதிகாரங்களை கொண்டது என்று கூறப்படுகிறது.

தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு தெரியாமலேயே அவர்களது வலையமைப்பில் கண்காணிப்பு செயலிகளை தரவிறக்கும் செய்து அதன் ஊடாக பாதுகாப்புத்துறையினர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம், அவுஸ்திரேலியாவில் இலவச இணைய இணைப்பை வழங்கும் சகல நிறுவனங்களும் பாதுகாப்புத்துறையினரால் கண்காணிக்கப்படும் என்றும் அவற்றைவிட, இணையம் வழியாக பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் செயலிகளும்கூட கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.