நாடு கடத்தப்பட்ட இலங்கை அகதிகள்! செய்திகளை மறுக்கும் அமைச்சர்!

அவுஸ்திரேலியா நோக்கி வந்துகொண்டிருந்த 20 இலங்கையர்கள் அண்மையில் நாடு கடத்தப்பட்டனர்.

இந்த நிலையில் குறித்த அகதிகள் கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டுவரப்படாமலேயே இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்துறை அமைச்சர் Peter Dutton இதனை தெரிவித்துள்ளார்.

படகில் வந்த 20 இலங்கையர்களை கிறிஸ்மஸ் தீவு முகாமுக்கு கொண்டுவந்து சில நாட்கள் தடுத்துவைத்திருந்த பின்னர் இலங்கைக்கு திருப்பியனுப்பியதாக முன்னர் வெளிவந்த தகவல்களை அமைச்சர் முற்றாக மறுத்தார்.

அகதிகள் அனைவரும் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு கொண்டுவரப்படாமலேயே இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.

பிறிஸ்பனில் செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது திருப்பி அனுப்பபட்ட இலங்கையர்கள் 20 பேர் தொடர்பாக மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தபோது,

“இலங்கையிலிருந்து 20 பேருடன் அவுஸ்ரேலியா நோக்கி வந்த படகானது ஆட்கடத்தல்காரர்களது சோதனைப்படகு ஆகும். புதிய ஆட்சியில் அவுஸ்திரேலியாவின் அகதிகள் கொள்கை எப்படியுள்ளது என்பதை சோதனை செய்து பார்ப்பதற்கு வந்த படகுதான் அது.

ஆட்கடத்தல்காரர்களது பேச்சைக்கேட்டு அவுஸ்திரேலியா நோக்கி வருவதற்கு படகில் ஏறவிரும்பும் அப்பாவி மக்கள் ஒன்றைப்புரிந்துகொள்ளவேண்டும்.

மொறிஸன் தலைமையிலான லிபரல் கூட்டணி அரசாங்கத்தின் குடிவரவுக்கொள்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைய எத்தனிப்பவர்கள் உடனடியாகவே சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.

நடைபெற்று முடிந்த தேர்தலில் லேபர் கட்சி ஆட்சியைக்கைப்பற்றும் என்றும் அவ்வாறு கைப்பற்றினால் தாங்கள் பழையபடி படகுகளில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களை கடத்திக்கொண்டு போகலாம் என்றும் ஆட்கடத்தல்காரர்கள் நிச்சயம் நம்பிக்கையோடு இருந்திருப்பார்கள்.

நடந்துமுடிந்த தேர்தலில் லேபர் கட்சி கண்ட தோல்வி நிச்சயம் ஆட்கடத்தல்காரர்களுக்கு ஏமாற்றத்தையளித்திருக்கும். ஒன்றை மாத்திரம் புரிந்துகொள்ளவேண்டும். Morrison அரசாங்கத்தின் ஆட்சியில் குடிவரக்கொள்கைகளில் மெத்தனப்போக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை – என்று தெரிவித்தார்.

லிபரல் கட்சி ஆட்சிக்கு வந்த 2013 ஆம் ஆண்டு முதல் இலங்கையிலிருந்து இதுவரை பத்து படகுகள் அவுஸ்திரேலியாவுக்கு வந்திருக்கின்றன என்றும் அந்தப்படகுகளில் வந்த 186 பேர் இதுவரை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள் என்றும் குடிவரவுத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன.