உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களின் பின்னணியிலும் கொழும்பு துறைமுக நகர நிர்மாணத்தின் பின்னணியிலும் நாட்டின் மீது அக்கறையும் கரிசனையும் கொண்டுள்ள சர்வதேச நாடுகளின் கவனத்தைத் தமிழ் அரசியல் தரப்பினர் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி காய் நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டும்.
இதன் ஊடாக தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்வதற்கான புதிய வழிமுறையொன்றில் பயணம் செய்வதற்கு முயற்சிக்க வேண்டும். இத்தகைய முயற்சிக்கான சூழலும் நாட்டின் நிலைமைகளும் எவ்வாறிருக்கின்றன என்று நோக்குவது முக்கியம்.
கொழும்பிலும் மட்டக்களப்பிலும் தொடர்ச்சியாகத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தி, 250க்கும் மேற்பட்ட அப்பாவிகளின் உயிர்களைக் குடித்த இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய பாதுகாப்புச் செயற்பாடுகளும் கண்காணிப்பு முறைகளும் உச்சக் கட்டத்தில் முதன்மை பெற்றிருக்கின்றன.
நாடெங்கிலும் தேடுதல் நடவடிக்கைகளிலும் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தும் பணிகளிலும் மேற்கொள்ள பொலிஸாரும் அதிரடிப்படையினரும், இராணுவத்தினரும் முழுவீச்சில் இறக்கிவிடப்பட்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம் மக்கள் விசேட கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள். வதந்திகள், மிரட்டல்கள், மிரட்டல் கடிதங்கள் என்பனவும் தீவிரமாகக் கவனத்துக்கு எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட இடங்களும் பிரதேசங்களும் உச்சக்கட்ட பாதுகாப்புக்கு உட்படுத்தப்படுகின்றது.
ஊயிர்த்த ஞாயிறு தின தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் உண்மையான நிலைமையை அறிந்து கொள்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் ஆரம்ப நிகழ்விலேயே, நாட்டின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையிலான சம்பவங்கள், அரச உயர் மட்டத்தினரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் என்பன குறித்த தகவல்கள் வெளியாகி மக்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கின்றன.
அதேவேளை, இறுக்கமான பாதுகாப்புச் செயற்பாடுகள், பாதுகாப்பு கண்காணிப்புகளுக்குள்ளேயும் வன்முறைகளைக் கட்டவிழ்த்து, இனங்களுக்கிடையில் மோதல்களை உருவாக்குவதற்கான சதி முயற்சிகளில் சிலர் ஈடுபடத் தயாராக இருப்பது பற்றிய தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.
இதனால் நாட்டின் இயல்பு நிலை பாதிப்படையவும், இனங்களுக்கிடையிலான நல்லுறவு நல்லிணக்கம் என்பன மேலும் சீர்குலைவதற்குமான சந்தர்ப்பங்களே உருவாகி வருகின்றன. இந்த நிலைமை மோசமானது. கவலைக்குரியது. கவலைக்குரியது மட்டுமல்ல. பலரும் இது விடயத்தில் கவனம் செலுத்தி மிகவும் பொறுப்போடு செயலாற்ற வேண்டும் என்பதையும் இந்த நிலைமைகள் வலியுறுத்துவதாக அமைந்திருக்கின்றன.
இனங்களுக்கிடையில் ஏற்படுகின்ற சந்தேகமும் அச்ச உணர்வும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துவதற்கே வழிவகுக்கும். இனவாதம் மற்றும் மதவாதத்தின் அடிப்படையில் ஏற்படுகின்ற முரண்பாடான மன நிலைமைகள் காலம் காலமாக நிலைத்து நின்று தீராத பகைமைக்கும் வலிமையான வன்மத்திற்கும் வன்முறைகளுக்கும் ஆழமான அடித்தளத்தை ஏற்படுத்திவிடத்தக்க வல்லமை வாய்ந்தவை என்பதைப் புரிந்து கொள்ளுதல் அவசியம்.
இந்த உணர்வுகள் மிகவும் மென்மையானவை. அதேவேளை வலிமையானவை. சிறிய சம்பவம் ஒன்றே, மோசமான பாதிப்புகளையும், மோசமான விளைவுகளையும் ஏற்படுத்திவிடுவதற்குப் போதுமானதாக அமைந்துவிடும்.
இத்தகையதோர் உணர்வுபூர்வமான நிலையில்தான் பேரினவாதமும், சிங்கள பௌத்த தேசியம், மேலாதிக்கத் திமிர்கொண்டு இந்த நாட்டின் சிறுபான்மை தேசிய இன மக்களாகிய தமிழ் பேசும் மக்கள் மீது ஒடுக்குமுறைகளையும் அடக்குமுறைகளையும் தொடர்ந்து மேற்கொள்கின்ற ஒரு போக்கைக் கடைப்பிடித்துச் செயற்பட்டு வருகின்றது.
இதற்கு மறுத்துரைக்க முடியாத அழுத்தமான சான்றாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களைத் தொடர்ந்து முஸ்லிம் மக்கள் மீது மத ரீதியாகவும், இனரீதியாகவும் தாக்குதல்களை நடத்தி அவர்களின் இருப்புக்கும் சொத்துக்களுக்கும் பொருளாதாரத்துக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்ற போக்கைப் பேரினவாதிகள் கடைப்பிடித்திருக்கின்றார்கள்.
அதேவேளை, தேசிய பாதுகாப்பை முன்னிட்டு, தீவிரப்படுத்தப்பட்டுள்ள, வீதிச் சோதனைகள், சுற்றி வளைப்புக்கள், தேடுதல் நடவடிக்கைகள் என்பவற்றுக்கு மத்தியில் பௌத்த பிக்குகள், தமது அடியார்கள் சகிதமும், பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் துணையுடனும் இந்து மதத் தலங்களைப் பகிரங்கமாக ஆக்கிரமிக்கின்ற நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றார்கள்.
முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்றுள்ள இந்த நடவடிக்கைகள் பௌத்தர்கள் மீதும், ஆட்சியாளர்கள் மீதும் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்து வெறுப்படையச் செய்திருக்கின்றன.
அராஜகமும் ஆக்கிரமிப்பும்
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ள பௌத்த பிக்கு ஒருவர், குருகந்த ரஜமகாவிகாரை என்ற பெயரில் ஒரு பௌத்த விகாரையை அமைத்துள்ளதுடன், பெரியதொரு புத்தர் சிலையையும் நிர்மாணித்துள்ளார்.
இந்தப் பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரும் பொலிஸாரும், இந்த பௌத்த பிக்குவுக்குப் பாதுகாப்பு வழங்கி, அவருடைய அத்துமீறிய செயற்பாடுகளுக்குத் துணைபுரிந்து வருகின்றார்கள். இந்த ஆலயத்தில் வழிபடுவதற்காகச் சென்ற ஊர் மக்களை அந்த பௌத்த பிக்கு மத ரீதியாக நிந்தனை செய்ததுடன், தமது பூர்வீக ஆலயத்தில் வழிபடுவதற்குத் தடையேற்படுத்தி, அவர்களை அச்சுறுத்திய சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
அந்த பௌத்த பிக்குவை எதிர்த்து வாதிட்டு, தமது வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட முயன்ற ஊர் மக்களை பொலிஸாரும், இராணுவத்தினரும் அச்சுறுத்தி அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். இந்த பிணக்கு சம்பந்தமாக நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, நீராவிப் பிள்ளையார் கோவிலில் மக்கள் வழிபடுவதற்கு இடையூறு செய்யக் கூடாது என்று முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டிருந்த போதிலும், அதனையும் உதாசீனம் செய்து அந்த மக்களை, அங்கு நிலைகொண்டுள்ள பௌத்த பிக்குவும் பொலிஸாரும் கடந்தவாரம் மீண்டும் அச்சுறுத்தி வெளியேற்றியிருக்கின்றார்கள்.
அங்கு நாட்டப்பட்டிருந்த நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் என்ற பெயர்ப்பலகையை அகற்றி, அந்த பௌத்த பிக்குவினால் புதிதாக நாட்டப்பட்டிருந்த கணதேவி தேவாலய என்ற சிங்களப் பெயர்ப்பலகையை அகற்றி தமிழ்ப் பெயர்ப்பலகையை மீண்டும் நாட்டுமாறு விடுத்த உத்தரவுக்கமைய அங்கு சென்ற ஊர் மக்கள் மீண்டும் அச்சுறுத்தப்பட்டு, பொலிஸாரினால் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்குத் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளும் துணைபோயுள்ளதுடன், மத ரீதியான வரலாற்று உரித்து கொண்ட தமிழ் மக்களின் உரிமைகளை அவர்கள் ஏற்க மறுத்து அத்துமீறி இந்து ஆலய வளாகத்தை ஆக்கிரமித்துள்ள பௌத்த பிக்குவுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகின்றனர் என்று குற்றம் சுமத்தி முறையிடப்பட்டிருக்கின்றது.
கன்னியா விவகாரம்
இதேபோன்று தொன்மையான வரலாற்று பின்னணியைக் கொண்ட திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் உள்ள புராதன விநாயகர் ஆலயத்தை ஆக்கிரமித்து பௌத்த விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆங்கிலேயர் காலத்தில் ஒரு தமிழ்க்குடும்பத்திற்கு வழங்கப்பட்ட இந்தக் காணி வாழையடி வாழையாக அந்தக் குடும்பத்தினரால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. அந்தக் குடும்பத்தின் வழித்தோன்றலாகிய திருமதி க.கோகிலரமணி என்ற பெண்மணிக்கு உரித்தான அந்தக் காணியைக் கைப்பற்றுவதற்கும், அவருடைய அறங்காவலர் பொறுப்பில் உள்ள விநாயகர் ஆலயத்தை இடித்தழித்து ஆக்கிரமிப்பதற்கும் அந்தப் பகுதியில் ஏற்கனவே அடாத்தாக வந்து குடியேறியுள்ள வில்கம் விகாராதிபதி வேறு சில பௌத்த பிக்குகளுடன் முயன்று வருகின்றார்.
கோகிலரமணியிடம் இருந்து விலைக்குப் பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக இந்தக் காணியை ஆக்கிரமிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதன்போது நேரடியாக பௌத்த பிக்குகள் மற்றும், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கும் கோகிலரமணிக்கும் இடையில் நேரடியான வாக்குவாதங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
விநாயகர் ஆலயமும் அதனைச் சூழ்ந்த இடமும் தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமான இடம் என்று, அரச வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாக இந்த வாக்குவாதத்தின்போது அந்தத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரி கோகிலரமணியிடம் தெரிவித்துள்ளார்.
ஆயினும் அரசாங்க சட்டதிட்டங்களுக்கு அமைவாக ஆட்சி உரிமை அதிகாரத்தைப் பெற்றுள்ள தனக்கு எந்தவித அறிவித்தலும் கொடுக்காமல் எவ்வாறு தொல்பொருள் திணைக்களம் அந்தக் காணிக்கு உரிமைகோரி அரச வர்த்தமானியில் பிரகனடம் செய்ய முடியும் என்ற கேள்விக்கு அவ்வாறு எவருக்கும் அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று அந்த அதிகாரி பதிலளித்துள்ளதன் மூலம், தமிழ் மக்கள் மீதான தொல்பொருள் திணைக்களத்தின் அராஜக போக்கும் அடக்குமுறைச் செயற்பாடும் எத்தகையது என்பது தெளிவாகியிருக்கின்றது.
தொடரும் இராணுவச் சூழலும் அடக்குமுறைச் செயற்பாடுகளும்
தமிழ் மக்கள் மீதான இன, மத ரீதியான ஆக்கிரமிப்புக்களும், அடக்குமுறைகளும் காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. யுத்த காலத்தில் ஆயுதந் தரித்த விடுதலைப்புலிகள்; இராணுவ ரீதியாகப் பலம் பெற்றிருந்தபோது இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன.
யுத்தத்தில் அரசாங்கம் வெற்றிபெற்று விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாக மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து கேட்பார் எவருமற்ற நிலையில் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளும், அவர்களின் தாயகப் பிரதேசத்தை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளும் பல்வேறு வடிவங்களில் ஆட்சியாளர்களினால் பல்வேறு அரச நிர்வாகப் பொறிமுறைகளின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனால் தமிழ் மக்களின் வடக்கு கிழக்குத் தாயகப் பிரதேசம் நாளுக்கு நாள் பேரினவாதிகளினால் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றன. நாளுக்கு நாள் என்பதைவிட மணித்தியாலத்தக்கு மணித்தியாலம் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும்.
யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் நிறைவடைந்து விட்டன. ஆயினும் யுத்த மோதல்களுக்காக வடக்கிலும் கிழக்கிலும் நிலைகொண்டிருந்த படையினர் அங்கிருந்து வெளியேற்றப்படவில்லை. மாறாக யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுகின்றது. மௌனிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் மீண்டும் உயிர்பெற்று வந்துவிடுவார்கள் என்ற போலியான அச்சத்தைக் கற்பிதம் செய்து மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ள அரசுகள் வடக்கிலும் கிழக்கிலும் இருந்து படையினரை அகற்றுவதற்குப் பதிலாக அவர்களை மக்கள் குடியிருப்பு கேந்திர முக்கியத்துவமுடைய இடங்களில் நிரந்தரமாக நிலைநிறுத்தியிருக்கின்றன.
அவ்வாறு நிலைநிறுத்தப்பட்டுள்ள படையினருக்கு சொகுசான நவீன வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் யுத்த நிலைமைகள் இல்லாத போதிலும், வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு வருடந்தோறும் அதிகளவு நிதியொதுக்கப்பட்டு அரச படைகளுக்கு முதன்மை இடமளிக்கப்பட்டு வருகின்றது.
வடக்கிலும் கிழக்கிலும் தொடர்ச்சியான இராணுவமயமான ஒரு சூழலைப் பேண வேண்டும் என்பதில் ஆட்சியாளர்கள் கண்ணும் கருத்துமாகச் செயற்பட்டு வருகின்றார்கள். இந்த இராணுவச் சூழலும், இராணுவ ஆக்கிரமிப்பும், யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் சிங்கள பௌத்த தேசிய நிலைப்பாட்டைத் தமிழர் பிரதேசங்களில் வேரூன்றச் செய்வதற்கும் அந்த மக்கள் எழுச்சி பெற முடியாத வகையில் அடக்கி வைத்திருப்பதற்கும் ஆட்சியாளர்களுக்குப் பேருதவியாக இருக்கின்றன.
இராணுவச் சூழல் காரணமாகவும், இராணுவ ஆக்கிரமிப்பு காரணமாகவும் யுத்தகாலத்தில் சொந்த இடங்களில் இருந்து பாதுகாப்புக்காக இடம்பெயர்ந்திருந்த தமிழ் மக்களுக்குப் பூர்வீகமாகவும், அரச அதிகார நடைமுறைகளுக்கு அமைவாக உரித்துடைய வழியிலும் சொந்தமான காணிகளில் மீள குடியேற முடியாத நிலைமை உருவாகியிருக்கின்றது.
இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு வழிகளில் அரசுக்கு முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், அந்தக் காணிகளை விடுவிப்பதில் அக்கறை காட்டாத நிலைமையும் காலத்தை இழுத்தடித்து அந்த காணி உரிமையை மழுங்கடிக்கின்ற போக்குமே ஆட்சியாளர்களிடம் காணப்படுகின்றது.
பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் விடுவிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்கள் அங்கு மீளக் குடியமர்த்தப்படுவார்கள் என்று அரச உயர் தலைவராகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல தடவைகள் அளித்திருந்த உறுதிமொழிகள் காற்றில் பறக்கவிடப்பட்ட நிலைமையே தொடர்கின்றது.
மறுபக்கத்தில் பௌத்த பிக்குகளும், தொல்பொருள் திணைக்களமும், வனஜீவராசி திணைக்களமும், வனபரிபாலன திணைக்களமும் பல்வேறு காரணங்களையும் சட்டதிட்டங்களையும் சுட்டிக்காட்டி, தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதில் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றார்கள்.
தேர்தலே இலக்கு; வாக்கு வங்கியை பலப்படுத்துவதே நோக்கம்
தமிழ் மக்கள் மீது தொடர்கின்ற பல்வேறு வடிவங்களிலான அடக்குமுறை குறித்தும், இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் அத்துமீறிய சிங்களக் குடியேற்றம், பௌத்த மத ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பல்வேறு மட்டங்களில் அரச தரப்பினருடனும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மட்டுமல்லாமல், இராணுவ தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளது.
இருப்பினும் அந்தப் பேச்சுக்களின்போது வாக்குறுதிகளும் காலக்கெடுக்களும் வழங்கப்பட்டபோதிலும், எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. அரச தரப்பினரின் நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்பு நடவடிக்கைகளாகவும் ஏமாற்ற நடவடிக்கைகளாகவுமே அமைந்திருந்தன. அமைந்திருக்கின்றன.
இத்தகைய ஒரு சூழலில்தான் பேரின அரசியல் தலைவர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி நல்லாட்சி அமைவதற்கும், நெருக்கடிகளில் இருந்து தப்பி, அந்த ஆட்சி தொடர்வதற்கும் உரிய ஆதரவை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வழங்கி வந்தது. ஆனால் அந்த நிபந்தனையற்ற ஆதரவுக்கு பிரதி உபகாரமாக, சாதாரண நடைமுறைகளின் மூலம் தீர்வு காணக்கூடிய பிரச்சினைகளுக்கும்கூட நல்லாட்சியின் அரச தலைவர்கள் தீர்வு காண முன்வரவில்லை. இனிக்க இனிக்கப் பேசுவதிலும், நம்பிக்கை ஊட்டத்தக்க வகையிலான உறுதிமொழிகளை வழங்குகின்ற வாய்ப்பந்தலில் திறமையுள்ளவர்களாகத் தங்களை இதுவரையில் இனம் காட்டி வந்துள்ளார்கள்.
இத்தகைய ஒரு பின்னணியில்தான் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் இடம்பெற்று நாடு நெருக்கடியான ஒரு சூழலுக்குள் தள்ளப்பட்டு, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கின்ற அரசாங்கத்தின் பொறுப்பான செயற்பாடுகளும், மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்கும் போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கும் ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு பொறுப்பு கூறுகின்ற கடப்பாடும் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில் சர்வதேச இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்தின் பிடிக்குள் சிக்கி பல்வேறு வடிவங்களில் முஸ்லிம் சமூகம் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளதைப் போலவே, தமிழ் மக்களும் அரச நிர்வாக இயந்திரத்தின் பல்வேறு பொறிமுறைகளின் ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளில் சிக்கி, அவற்றில் இருந்து வெளியேறுவதற்கான வழிதெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றார்கள்.
தேசிய பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய கட்டாய நிலைமைக்கு ஆளாகியுள்ள அரசு, உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தக் கூடியதாக இருந்த போதிலும் அந்தப் பொறுப்பைக் கோட்டைவிட்டமைக்காகப் பல தரப்பினரதும் கண்டனக் கணைகளுக்கும் விமர்சன வினாக்களுக்கும் முகம் கொடுக்க நேர்ந்துள்ளது.
அதேவேளை, நாட்டின் அதியுச்ச தலைவர்களாகிய ஜனாதிபதியும் பிரதமரும் தங்களுக்கிடையிலான அதிகாரப் போட்டியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றார்கள். அடுத்ததாக அண்மையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் எவ்வாறு வெற்றிபெற்று ஆட்சிக்கு வரலாம் என்பதிலேயே தீவிர கவனம் செலுத்தியிருக்கின்றார்கள். அந்தத் தேர்தல்களில் தமது வெற்றி வாய்ப்புக்குரிய சாதகமான வாக்கு வங்கியை எவ்வாறு பலப்படுத்தலாம், அதற்கான அரசியல் தந்திரோபாயச் செயற்பாடுகளை எப்படி முன்னெடுக்கலாம் என்பதிலேயே கரிசனை கொண்டிருக்கின்றார்கள்.
அவர்கள் தமது தேர்தல் வெற்றிக்கு சிங்கள பௌத்த தேசியவாதத்தையும், அதன் ஊடான பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குப் பலத்திலுமே நம்பிக்கை வைத்துள்ளார்கள். இந்த நிலையில் அவர்கள் சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகள் குறித்தோ அல்லது அவர்களின் வாக்கு வங்கிகளில் நம்பிக்கை வைப்பது குறித்தோ கவனம் செலுத்துகின்ற நிலைமையைக் காண முடியவில்லை.
சர்வதேச தலையீட்டுக்கான கோரிக்கை
இத்தகையதோர் அரசியல் நிலைமையில்தான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் டேவிட் ஹொலியுடனான சந்திப்பின்போது, தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளைத் தடுப்பதற்கு சர்வதேசத்தின் தலையீடு அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
அவுஸ்திரேலிய தூதுவருடனான சந்திப்பின்போது உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களின் உண்மையான பின்னணியைக் கண்டறிதல் பற்றியும், அவற்றுடன் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளையும் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்துவது குறித்தும் பேச்சுக்கள் நடத்தப்பட்ட அதேவேளை, முஸ்லிம் மக்களும், தமிழ் மக்களும், பாதுகாப்பு கெடுபிடிகளுக்குள் சிக்கியிருப்பது பற்றியும், தமிழ் மக்கள் மீது தொடர்கின்ற கெடுபிடிகள் குறித்தும் பேச்சுக்கள் நடைபெற்றிருக்கின்றன.
யுத்தம் முடிவடைந்தவுடன் தீர்வு காணப்பட்டிருக்க வேண்டிய பல பிரச்சினைகள், கடந்து போன பத்து வருடகாலத்தில் தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. யுத்தம் முடிவடைந்த பத்தாவது வருடத்தில் உண்மையான பயங்கரவாதத்துக்கும், சர்வதேச பயங்கரவாதத்துக்கும், மற்றுமொரு சிறுபான்மையினராகிய முஸ்லிம்களின் மத்தியில் தோன்றியுள்ள அடிப்படை மதவாத, பயங்கரவாத சக்தியின் சவால்களுக்கும் நாடு முகம் கொடுத்துள்ள நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு சர்வதேசமே தீர்வு காண உதவ வேண்டும் என்ற கோரிக்கையை இரா.சம்பந்தன் அவுஸ்திரேலிய தூதுவரிடம் முன்வைத்துள்ளார்.
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கின்ற அரசாங்கத்தின் கடப்பாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்தம்பிதம் அரச தரப்பினருடன் நடத்தப்படுகின்ற பேச்சுக்கள் எதுவும் பயனளிக்கப் போவதில்லை என்ற நிலைமையை உருவாக்கியுள்ளது.
அதேவேளை, சர்வதேச பயங்கரவாதம் இலங்கையில் காலடி எடுத்து வைத்துள்ளமையானது, அமெரிக்கா, இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் பிராந்திய நலன்களில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகக் கருதப்படுகின்றது. குறிப்பாக இலங்கையில் கால் பதித்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத சக்தியானது, தென்னாசியப் பிராந்தியத்தில் இராணுவ, பொருளதார சமநிலைமையைக் குழப்பியடிப்பதற்கு வழிகோலலாம். இதன் காரணமாகவே 9 தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் உண்மையான நிலைமைகள், உண்மையான பின்னணி என்பவற்றைக் கண்டறிவதற்காக அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் புலனாய்வுத் துறையினர் இலங்கையில் பிரசன்னமாகி புலன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தென்னாசிய பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவம் மிக்க நிலையமாகத் திகழும் இலங்கை மீது சீனா, அமெரிக்கா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் நீண்ட காலமாகவே கண் வைத்திருந்தன. முப்பது வருடகால யுத்தச் சுமையைச் சுமந்த இலங்கை யுத்தத்தின் பின்னர் மீள் எழுச்சி பெறுவதற்கான உதவிகளை வழங்குவதை, இந்த வல்லரசு நாடுகள் இலங்கையில் கால் பதிப்பதற்கான சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பதையும் காண முடிகின்றது.
இந்த நிலையில் இங்கு தலையெடுத்துள்ள சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தலும்கூட, அந்த நாடுகளின் இலங்கை பிரவேசத்திற்கான வழித்தடத்தை மேலும் விரிவுபடுத்தியிருக்கிறது என்றே கூற வேண்டும். இந்த நிலையில் தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளை ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் போர்க்குற்றச் செயற்பாடுகளுக்குப் பொறுப்பு கூறுதல் என்ற தளத்தில் இருந்து வேறுபட்ட ஒரு சர்வதேச தளத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாகவே தோன்றுகின்றது.
அந்த வகையில் இலங்கைக்கான புதிய அவுஸ்திரேலிய தூதுவருடனான சந்திப்பில் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகளைத் தடுத்துநிறுத்தி அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு சர்வதேசத்தின் உதவி அவசியம் என்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனின் கோரிக்கை முக்கியத்துவம் பெறுகின்றது.
அவுஸ்திரேலியாவுடனான இந்தச் சந்திப்புடன் சர்வதேச உதவிக்கான கோரிக்கை (வழமையான வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுடனான சந்திப்புக்களைப் போன்று நின்றுவிடாமல்) இலங்கையின் கொழும்பு துறைமுக நகரத்தின் பொருளாதார வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ள முன்வந்துள்ள சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் இலங்கையில் கவனம் செலுத்தியுள்ள சர்வதேச நாடுகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி அவற்றின் கவனத்தை ஈர்த்து அந்த நாடுகளை நேச சக்திகளாக்கிக் கொள்வதற்கான செயற்பாடுகளில் தமிழ்த் தலைவர்கள் ஈடுபட முன்வர வேண்டும்.
பி.மாணிக்கவாசகம்