மொழி திணிப்பை திமுக எதிர்க்கும் – கனிமொழி

எந்த மொழிக்கும் எதிரான கொள்கையை மத்திய அரசு கொண்டிருந்தாலும், கொண்டிருக்காவிட்டாலும் நிச்சயமாக மொழி திணிப்பை திமுக எதிர்க்கும் என்று எம்.பி. கனிமொழி கூறி உள்ளார்.

தி.மு.க. எம்.பி. கனிமொழி இன்று காலை தூத்துக்குடி செல்லும் முன் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

எந்த காலத்திலும் எந்த மொழிக்கும் எதிரான கொள்கையை மத்திய அரசு கொண்டிருந்தாலும், கொண்டிருக்காவிட்டாலும் நிச்சயமாக மொழி திணிப்பை தி.மு.க. எதிர்க்கும். அது இந்தியாக இருந்தாலும் தி.மு.க. எதிர்க்கும். நாடாளுமன்றத்திலும் தி.மு.க. எதிர்க்கும்.

நாடாளுமன்றத்தில் எத்தனை பேர் இருந்தாலும் ஒரு எம்.பி.யாக இருந்தாலும் தமிழக மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தோம். அதேபோல் தற்போது தமிழ்நாட்டுக்காகவும் இந்த நாட்டிற்காகவும் மக்களின் உரிமைக்காகவும் குரல் கொடுப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அமைச்சரவையில் தமிழகத்துக்கு இடம் கிடைக்காததால் பாதிப்பை ஏற்படுத்துமா என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர்.

அதற்கு அவர், தமிழகத்துக்கு அ.தி.மு.க.வே ஒரு பாதிப்புதான். அ.தி.மு.க.வில் உட்கட்சி பிரச்சினை குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. அ.தி.மு.க.வில் உட்கட்சி பிரச்சினை இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆட்சிக்காக 2 தரப்பும் இணைந்து செயல்படுவது போன்ற நிலையை உருவாக்கி வெளியில் ஒற்றுமையை காண்பித்து இருக்கிறார்கள் என்றார்.