உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறும் விடயங்களை அறிக்கையிட ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எச்சரித்துள்ளது.
சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அக்கட்சியின் பிரதி தலைவர் நிமல் சிறிபால சில்வா, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரே இவ்வாறு எச்சரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவிக்கையில்,
இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாரும் இல்லை. அரசாங்க தரப்பினர் மாத்திரமே உள்ளனர். இந்தக் குழுவை நியமித்தமைக்கான நோக்கம் என்னவென்பது எமக்கு தெரியும். அதனால்தான் நாம் அதில் பங்குபற்றுவதை விரும்பவில்லை.
அத்தோடு புலனாய்வு அதிகாரிகளையும் வரவழைத்து முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளை ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பு செய்வது இதுவரையில் எந்த நாடுகளிலும் இடம்பெற்றதில்லை. புலனாய்வு பிரிவினர் தெரிவிக்கும் விடயங்களை ஒருபோதும் வெளிப்படுத்தமாட்டார்கள். ஆனால் எமது நாட்டில் சாதாரண பொதுமக்களுக்கு உள்ள அறிவுகூட அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளுக்கு இல்லை என்பது கவலைக்குரிய விடயம். எந்த நோக்கத்திற்காக இவ்வாறு செயற்படுகின்றார்கள் என்று தெரியவில்லை. ஆனால் எதிர்காலங்களில் புலனாய்வு பிரிவுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என்றார்.
அவரைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க கருத்து தெரிவிக்கையில்,
மேற்படி குழு நியமிக்கப்பட்டமைக்கு நாம் கடும் எதிர்ப்பினை வெளியிடும் அதேவேளை சபாநாயகர் கரு ஜயசூரிய இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றோம். தெரிவுக் குழுவினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தவறு என நாம் குறிப்பிடவில்லை. அதனை முன்னெடுக்கும் முறை தவறானது என்பதையே சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். எனவே விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். அதற்காக அவற்றை பகிரங்கமாக வெளிப்படுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றோம்.
நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவுக்குழுவில் இடம்பெற்றவற்றை அவதானிக்கும்போது முக்கிய பதவி வகிப்பவர்கள் அதற்கு சற்றும் பொருத்தமில்லாதவாறு சில விடயங்களை முன்வைக்கின்றனர். தம்மை பாதுகாத்துக்கொள்வதற்காக மற்றையவர்களை காட்டிக்கொடுக்கின்றதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
பாதுகாப்பு சபை என்பது மிகவும் இரகசியமானதொரு அமைப்பாகும். அங்கு இடம்பெறும் விடயங்கள் மற்றும் எடுக்கப்படும் தீர்மானங்களை வெளியில் ஊடகங்களுக்கு தெரிவிக்கின்றனர். இவ்வாறு இருந்தால் பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்துவதென்பது கடினமாகும் என்றார்.
Eelamurasu Australia Online News Portal