நீங்கள் வித்தியின் ஆட்கள் தானே? பசில் கேட்டார் ஒரு கேள்வி!

இரகசிய ஏற்பாடு ஒன்றின் அடிப்படையில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரைக் கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய தகவல்கள் தெரியவந்துள்ளன.

கடந்த 26 ஆம் திகதி நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை ஜனநாயகப் போராளிகள் முதலில் சந்தித்திருக்கிறார்கள்.

தொடர்ச்சியாக மூன்று தேர்தல்கள் வரவுள்ள நிலையில் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்படுவது தொடர்பிலேயே குறித்த சந்திப்புக்கள் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஊடகவே இந்தச் சந்திப்பிற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாக கூறப்படுகின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பினை முடித்துக்கொண்டு அன்றைய தினமே சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்தில் பசில் ராஜபக்சவுடனான சந்திப்பு நடைபெற்றுள்ளது.

சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தவர்கள் ஜனநாயகப் போராளிகள் கட்சியினரை பொதுஜன பெரமுன அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றபோது அங்கு அவர்களை வரவேற்ற பசில் ராஜபக்ச நீங்கள் வித்தியின் ஆட்கள் தானே. வித்தியாதரன் இப்போது உங்கள் கட்சியில் என்ன பதவிநிலையில் இருக்கிறார் எனக் கூறி வரவேற்றாராம்.

இதனால் ஜனநாயகப் போராளிகள் சற்றுக் குழப்பமடையவே சுதாகரித்த ஏற்பாட்டாளர் ஆம் முன்னாள் போராளிகளான இவர்களை வித்தியாதரன் ஒருங்கிணைத்து ஜனநாயகப் போராளிகள் கட்சியை உருவாக்கியது உண்மைதான் ஆனால் அவர் தற்போது மீண்டும் முழு நேர ஊடகப் பணிக்கு திரும்பிவிட்டார் என பதிலளித்திருக்கிறார்கள்.

ஜனநாயகப் போராளிகள் கட்சி கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p