யாழ். இராணுவசோதனைச் சாவடியில் குண்டுத்தோசை குண்டானது!

தமிழர்களின் பாரம்பரிய உணவுகளின் ஒன்றான குண்டுத்தோசையினை  பாடசாலைக்கு எடுத்துச் சென்ற மாணவி அந்த உணவினை சாப்பாட்டு பெட்டியுடன் தூக்கி வீசிய சம்பவம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதாக தெரியவருகின்றது.

Related image

குறித்த  சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது. தீவகத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணத்தில் பிரபல பெண்கள் கல்லூரியில் உயர்தரம் பயிலும் மாணவி ஒருவர் தனது உணவாக குண்டுத்தோசை எனப்படும் தமிழர்களின் பாரம்பரிய உணவினை எடுத்துச் சென்றுள்ளார்.

அவர் தீவகத்திலிருந்து வெளியேறி யாழ்ப்பாணத்திற்கு நுழையும்  இராணுவ சோதனைச் சாவடியில் சோதனைக்காக இறக்கிவிடப்பட்ட நிலையில் சோதனையினை மேற்கொண்ட  இராணுவத்தினர்  சாப்பாட்டு பெட்டியைக் காட்டி இதனுள் என்ன உள்ளது என்று  கேட்டுள்ளனர். அதற்கு  அந்த மாணவி  குண்டுத்தோசை என்று பதிலளித்துள்ளார்.

பதிலைக்கேட்ட இராணுவத்தினர் மீண்டும் மீண்டும்  குண்டு  குண்டு  என்று  கேட்டவாறு அந்த உணவுப் பெட்டியினை திறக்கும்படி  கூறியதும், மொழித் தொடர்பாடலில் புரிதலற்ற மாணவி  ஆம்  ஆம் என்று தலையசைத்துள்ளார். .அவரின்  தலையசைவை  குண்டு என்று  உறுதி படுத்திய  சோதனையாளர். அந்த  குண்டுத் தோசைகளை சுக்கு நூறாக பிரித்துள்ளார்.

சிறிதளவும்   துண்டுகளின்றி  கைகளால்  பிசைந்து மிக மோசமான நிலையில் சோதனையிடப்பட்டுள்ளது உணவினை உண்ண முடியாத நிலையில் குறித்த மாணவி அவ் உணவுப்  பெட்டியினை தூக்கிவீசி விட்டு சென்றதாக தெரியவருகின்றது.

இதே வேளை விற்பனை செய்யப்படும்  அச்சுப் பாண்  சில வியாபார நிலையங்களில்  குண்டுப் பாண் என்றும் விற்பனை செய்யப்படுவதுடன்  மிதி வெடி போன்ற சிற்றுண்டிகளின் பெயர்கள் தொடர்பில் கவனம் எடுக்கவேண்டிய சூழலினை அண்மைக்கால இராணுவத் சோதனை மயமாக்கல் எடுத்துக் காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.