விமானியை காக்கும் கணினி!

வானில் எதிரி விமானங்களைத் துரத்தி, சுட்டு வீழ்த்துவதை ‘டாக் பைட்’ என்பர். எல்லை தாண்டிச் சென்று, விரைவில் துல்லியத் தாக்குதல் நடத்தி வரும் விமானிகளுக்கு டாக் பைட் பயிற்சி அவசியம்.இதற்கு கணினித் திரையில், ‘சிமுலேசன்’ என்ற மாதிரிப் பயிற்சியும், நேரடியாக வானில் ஒத்திகைகள் நடத்துவதும் என, இரண்டே வழிகள் தான் உள்ளன.விமானிகளின் வேகமும், தாக்கும் துல்லியமும் போதாது என நினைக்கிறது, அமெரிக்க விமானப் படை. இதனால், அதன் ஆராய்ச்சிப் பிரிவான, ‘தார்பா’ விமானிகளுக்கு எதிரி விமானத்தை இலக்கு வைத்து துரத்தவும், வானிலேயே குறி தப்பாமல் தாக்கவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

விமானிகள் விமானத்தை ஓட்டுவதில் குறியாக இருக்கும் போது, அவர்களை எதிர்பாராத கோணத்திலிருந்து வரும் எதிரி விமானங்கள் தாக்கி விடாமல் பார்த்துக் கொள்ளவே, இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என, தார்பா தெரிவித்துள்ளது.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு பதற்றமோ, கவனச் சிதறலோ இருக்காது என்பதால், விமானியையும், விமானத்தையும் பாதுகாக்கும் பணியை சிறப்பாகச் செய்யும் என, தார்பா கருதுகிறது. இந்த நுட்பம் சந்தைக்கு வந்தால், இந்தியாவும் முதல் ஆளாக வாங்கும் என, எதிர்பார்க்கலாம்.